அரசியல்தமிழகம்

முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது சிபிஐ விசாரணை: திமுக வழக்கில் ஐகோர்ட் உத்தரவு

முதல்வர் எடப்பாடி க.பழனிசாமி மீதான நெடுஞ்சாலைத்துறை முறைகேடு புகார் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. அதிமுக அரசுக்கு இது பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
முதல் அமைச்சர் எடப்பாடி க.பழனிசாமி, நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் பொறுப்பை தன்வசம் வைத்திருக்கிறார். தமிழகத்தில் சாலை அமைக்கும் பணிகளுக்கு டெண்டர் ஒதுக்கப்பட்ட ஒப்பந்ததில் சுமார் 4 ஆயித்து 800 கோடி முறைகேடு நடைபெற்றுள்ளதாகவும் இது குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது வழக்கு பதிவு செய்ய கோரி திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
அந்த மனுவில், ‘ஒட்டன்சத்திரம் – தாராபுரம்- அவினாசிபாளையம் நான்கு வழிச்சாலைக்கான திட்ட மதிப்பீடு என்பது 713.34 கோடியாக உள்ள நிலையில் அந்த திட்டத்திற்கான நிதி 1515 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த பணிக்கான ஒப்பந்தம் முதலமைச்சரின் உறவினர் ராமலிங்கம் என்பவருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
அதே போன்று திருநெல்வேலி – செங்கோட்டை கொல்லம் நான்கு வழிச்சாலையை விரிவுபடுத்தி, பலப்படுத்தும் 720 கோடி ரூபாய்க்கான ஒப்பந்தம் “வெங்கடாஜலபதி அன்ட் கோ” என்ற நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. பாலாஜி டோல்வேஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் சேகர்ரெட்டி நாகராஜன், பி. சுப்ரமணியம் ஆகிய மூவரும் பங்குதாரர்களாக இருக்கிறார்கள். இந்த நிறுவனத்திற்கு நெடுஞ்சாலைத்துறை அமைச்சகத்தின் 200 கோடி ரூபாய் மதிப்புள்ள மதுரை ரிங் ரோடு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது.


வண்டலூர் முதல் வாலாஜா வரையுள்ள நான்கு வழிச் சாலையை ஆறு வழிச் சாலையாக மாற்றும் 200 கோடி ரூபாய் மதிப்புள்ள நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்தம் “எஸ்.பி.கே அன்ட் கோ” நிறுவனத்திற்கு அளிக்கப்பட்டுள்ளது.
திருவள்ளூர், கிருஷ்ணகிரி , பொள்ளாச்சி, விருதுநகர், ராமநாதபுரம் கோட்டங்களின் கீழ் வரும் நெடுஞ்சாலைத்துறை சாலைகள் கட்டுமான மற்றும் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ள ஐந்து வருடங்களுக்கான ரூ 2000 கோடி ரூபாய் மதிப்புள்ள ஒப்பந்தம் “வெங்கடாஜலபதி அன்ட் கோ” விற்கு கொடுக்கப்பட்டுள்ளது.
மேற்கண்ட சுமார் 4800 கோடி ரூபாய் மதிப்புள்ள நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்தங்கள் முதல்-அமைச்சர் உறவினர் பி. சுப்பிரமணியம் மற்றும் நாகராஜன் செய்யாத்துரை, சேகர்ரெட்டி ஆகியோர் பங்குதாரர்களாக இருக்கும் வெங்கடாஜலபதி அன்ட் கோ, ஸ்ரீ பாலாஜி டோல்வேஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் எஸ்.பி.கே அன்ட் கோ நிறுவனங்களுக்கே சட்டவிரோதமாக வழங்கப்பட்டுள்ளது.
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இதன் மூலம் தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் பதவியையும், முதலமைச்சர் பதவியையும் தவறாகப் பயன்படுத்தியுள்ளார்.
நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்தங்களை கொடுத்ததன் மூலமும் சட்டவிரோதமாக ஆதாயம் அடைந்துள்ளார். ஆகவே முதலமைச்சராக இருக்கும் எடப்பாடி பழனிச்சாமி பொது ஊழியர் என்ற முறையில் 1988 ஆம் ஆண்டு ஊழல் தடுப்புச் சட்டத்தின் பிரிவு 13 ன் கீழ் உள்ள அனைத்து உட்பிரிவுகளின்படியும் தண்டனைக்கு உள்ளாகும் குற்றம் புரிந்துள்ளார்.


ஆகவே முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் சுமார் 4800 கோடி ரூபாய் நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்த ஊழல் மீதும், அதில் தொடர்புடையவர்கள் மீதும் ஊழல் தடுப்புச் சட்டம் 1988-ன் படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று லஞ்ச ஒழிப்புத்துறையில் கடந்த ஜூன் மாதம் 13 ஆம் தேதி புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை.
எனவே நான் அளித்த புகாரில் வழக்கு பதிவு செய்ய லஞ்ச ஒழிப்புதுறைக்கு உத்தரவிடவேண்டும். மேலும் இது தொடர்பாக சிறப்பு விசாரணை குழு அமைக்க லஞ்ச ஒழிப்பு துறைக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரியுள்ளார்.
இந்த வழக்கு நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கில், தமிழக லஞ்ச ஒழிப்பு துறை இயக்குனர் சார்பில் ஆஜரான அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், நெடுஞ்சாலை துறை டெண்டர் ஒதுக்கியதில் முறைகேடு ஏதும் நடைபெற்றதற்கான ஆதாரங்கள் எதுவும் முதல்கட்ட விசாரணையில் கிடைக்கவில்லை, முதல்வர் மீதான திமுக புகாரின் ஆரம்பகட்ட விசாரணையிலேயே அவருக்கு எதிரான முகாந்திரம் எதுவும் இல்லை என்பதால் மேற்கொண்டு விசாரணை நடத்த தேவையில்லை. எனவே முதல்வருக்கு எதிரான டெண்டர் முறைகேடில் ஈடுபட்டதற்கான ஆவணங்களும் முதல் கட்ட விசாரணையில் கிடைக்கவில்லை என குறிப்பிட்டார்.
இதனையடுத்து, வழக்கின் தீர்ப்பை கடந்த 9 ஆம் தேதி நீதிபதி ஜெகதீஷ் சந்திரா தள்ளிவைத்தார். இந்நிலையில் இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி, லஞ்ச ஒழிப்பு துறை சார்பில் அளித்த புகாரை சிபிஐ விசாரிக்க வேண்டும். மேலும் லஞ்ச ஒழிப்பு துறையிடம் இருக்கும் ஆவணங்களை ஒரு வாரத்தில் அளிக்க வேண்டும். விசாரணை எஸ்.பி (காவல் கண்காணிப்பாளர்) அந்தஸ்து கொண்ட அதிகாரி விசாரிக்க வேண்டும். ஆரம்ப கட்ட விசாரணை மூன்று மாதத்தில் முடிக்க வேண்டும். விசாரணையில் முகாந்திரம் இருந்தால் சட்டப்படியான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.
புகார் மீதான விசாரணையை வெளிப்படை தன்மையுடன் நடத்தப்பட வேண்டும் என்ற காரணத்திற்காக இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றுவதாகவும் மேற்கொண்டு இந்த வழக்கில் நீதிமன்றம் எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை என தெரிவித்த நீதிபதி மனுவை முடித்து வைத்து உத்தரவிட்டார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button