“விடியலுக்கான முழக்கம்” : திமுக பொதுக்கூட்டம்.. மக்கள் திரளில் மு.க.ஸ்டாலின்.!
திருச்சி சிறுகனூரில் “விடியலுக்கான முழக்கம்” என்ற பெயரில் திமுக சார்பில் நடைபெற்ற பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார்.
சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு திமுக சார்பில் 11-வது மாநில மாநாடு மார்ச் 14-ம் தேதி திருச்சி சிறுகனூரில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதற்கான பணிகள் நடைபெற்று வந்த நிலையில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால், அதே இடத்தில் பிரம்மாண்ட தேர்தல் சிறப்பு பொதுக்கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.
750 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள மைதானத்தில் பார்வையாளர்களுக்காக சுமார் 2 லட்சம் இருக்கைகள் போடப்பட்டுள்ளன. கூட்ட அரங்கின் நுழைவு வாயிலில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோருக்கு பிரமாண்ட கட்-அவுட்கள் வைக்கப்பட்டுள்ளன. சென்னையிலிருந்து திருச்சிக்கு விமானம் மூலம் வந்த மு.க.ஸ்டாலின், பொதுக்கூட்ட அரங்கின் நுழைவு வாயிலில் 100 அடி உயரத்தில் அமைக்கப்பட்ட பிரமாண்ட கொடிக் கம்பத்தில் திமுக கொடியை ஏற்றி, பொதுக்கூட்டத்தை தொடங்கி வைத்தார்.
தமிழகத்துக்கான எனது கனவுகளை அறிவிக்கும் கூட்டம் தான் இந்த மாநாடு என்று ஸ்டாலின் நெகிழ்ச்சி பொங்கப் பேசினார்.
“தேர்தலில் போட்டியிட திமுக முதல் முறையாக முடிவு செய்த இடம்தான் திருச்சி மாநகரம். திருச்சியில் எடுத்த முடிவை அடுத்துதான் தமிழகத்தில் 5 முறை திமுக ஆட்சிப் பொறுப்புக்கு வந்தது. திமுக ஆட்சி காலத்தில் தமிழகம் அனைத்து துறைகளிலும் வளர்ச்சி அடைந்தது. நவீன தமிழகத்தை திமுக ஆட்சிதான் கட்டமைத்தது. அதனை அதிமுக ஆட்சி சீர்குலைத்தது. வாக்குப்பதிவு தினமான ஏப்ரல் 6-ம் தேதி அதிமுக ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்“ எனக் கூறினார்.
பொதுக்கூட்டத்தில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தொடக்க உரை ஆற்றினார். ஸ்டாலினுக்கு வீரவாள் பரிசாக அளிக்கப்பட்டது.
தமிழகத்தின் பொருளாதாரம், வேளாண்மை, நீர்வளம், கல்வி மற்றும் சுகாதாரம், நகர்ப்புற வளர்ச்சி, ஊரக உட்கட்டமைப்பு, சமூக நீதி ஆகியவற்றை மேம்படுத்த ஸ்டாலினின் 7 உறுதிமொழிகள் என்ற தலைப்பில் தொலைநோக்கு திட்டத்தை ஸ்டாலின் வெளியிட்டார்.
ரூபாய் 35 லட்சம் கோடியைத் தாண்டும் இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சியை தமிழகம் அடுத்த 10 ஆண்டுகளில் எட்டும், இதன் மூலம் 10 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். அதோடு தனிநபர் வருமானம் ஆண்டுக்கு ரூபாய் 4 லட்சத்துக்கு மேலாக உயரத்த்தப்படும். இந்த 10 ஆண்டு திட்டம் அடுத்த 10 ஆண்டுகளில் ஒரு கோடி மக்களை வறுமையிலிருந்து உயர்த்தும்.
திமுக ஆட்சிக்கு வந்தால் குடும்பத்தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 உரிமைத்தொகை வழங்கப்படும்.
தமிழகத்தில் உள்ள அனைத்து குடும்பத்தலைவிகளுக்கும், ஒவ்வொரு மாதமும் ரூ. 1,000 உரிமைத்தொகை வழங்க உள்ளோம். இதன் விளைவாக, பொது விநியோக நிலையங்களில் இருந்து உணவு (அத்தியாவசிய) பொருட்களைப் பெறும் அனைத்து குடும்பங்களும் நிச்சயம் பயனடைவார்கள்.
கிராமப்புறதில் உள்ள ஒவ்வொரு வீட்டிலும் அடுத்த 10 ஆண்டுகளில் குடிநீர் குழாய் அமைக்கப்படும். திமுகவின் கிராம அபிவிருத்தி திட்டத்தில் கிராமங்களில் பிராட்பேண்ட் இணைப்பு வழங்கப்படும் என்று கூறியுள்ளார். அதோடு 9.75 லட்சம் கான்கிரீட் வீடுகளை கட்ட அரசு உதவும். இது குடிசையில் வசிக்கும் மக்களை 16.6 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாகக் குறைக்கும் என்றும் கூறியுள்ளார்.
பட்டியலினத்தவர், பழங்குடியினர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்டடோருக்கான கல்வி உதவித்தொகையை இரட்டிப்பாக்கப்படும் என்று உறுதியளித்துள்ள ஸ்டாலின், தொழில்நுட்ப உதவியுடன் மனிதக் கழிவுகள் அகற்றப்படும். மனிதக் கழிவுகளை மனிதரே அகற்றும் முறை முற்றிலும் ஒழிக்கப்படும் என்று கூறியுள்ளார்.
வேளாண்மை துறையைப் பற்றி ஸ்டாலின் குறிப்பிடுகையில், “தமிழகத்தில் தற்போது 10 லட்சம் ஹெக்டேர் நிலங்கள் உள்ளன. அடுத்த 10 ஆண்டுகளில் இது இரு மடங்காக 20 லட்சம் ஹெக்டேராக உயர்த்தப்படும்” என்று தெரிவித்துள்ளார்.
– நமது நிருபர்