“ரூட் நம்பர் 17” திரைவிமர்சனம்
நேனி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில், அமர் ராமச்சந்திரன் தயாரிப்பில், அபிலாஷ் தேவன் இயக்கத்தில், ஜித்தன் ரமேஷ், அஞ்சு, மதன் குமார், ஹரிஷ் ஃபெராடி, அகில் பிரபாகர் உள்ளிட்ட நடிகர், நடிகைகள் நடிப்பில் வெளிவந்துள்ள படம் “ரூட் நம்பர் 17”.
கதைப்படி… தென்காசியில் இருந்து கார்த்திக் ( மதன் குமார் ) அஞ்சனா ( அஞ்சு ) என்கிற பெண்னை காரில் அழைத்துக்கொண்டு அடர்ந்த மலைப்பகுதிக்குள் செல்கிறான். பின்னர் இரவு நேரத்தில் இருவரும் ஜாலியாக இருந்துவிட்டு காரிலேயே தங்குகிறார்கள். சிறிது நேரத்தில் மர்மமான உருவம் ஒன்று காரை கடந்து செல்வதுபோல் தெரிந்ததும், அஞ்சனா கீழே இறங்கி பார்த்தபோது ஒருவர் அவரை கடுமையாக தாக்குகிறான். காதலியை மீட்பதற்காக கார்த்திக் அந்த மர்ம நபரை தாக்குகிறான். பின்னர் காதல் ஜோடிகள் இருவரையும் ஆக்ரோஷமாக தாக்கி பூமிக்குள் அடியில் உள்ள குகைக்குள் அடைத்து வைக்கிறான்.
அதன்பிறகு பெண்கள் விடுதியின் காப்பாளர் அஞ்சனாவை காணவில்லை என புகார் கொடுக்கிறார். ஆய்வாளர் விசாரணையில் அவரை அழைத்துச் சென்றவர் முன்னாள் அமைச்சர் குருமூர்த்தி மகன் என தெரியவருகிறது. பின்னர் காவல்துறையினர் இருவரையும் தேடி அடர்ந்த மலைப்பகுதிக்குள் செல்கின்றனர். குறிப்பிட்ட தூரம் வரை சென்றதும் இரவு நேரமாகி விட்டதால் திரும்பி வந்துவிடுகிறார்கள். இந்த வழக்கில் காவலர் விக்னேஷ் மிகுந்த ஆர்வம் காட்டுகிறார். பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு காதல் ஜோடியை மீட்க நினைக்கிறார். இதற்கு உயர் அதிகாரி தடையாக இருக்கிறார்.
காட்டுப் பகுதிக்குள் சென்ற கார்த்திக், அஞ்சனா ஜோடியை காவல்துறையினர் மீட்டார்களா ? குகைக்குள் அடைக்கப்பட்ட இருவரும் உயிர் பிழைத்தார்களா ? இவர்கள் இருவரும் ஏன் தாக்குதலுக்கு உள்ளானார்கள் ? இவர்களை தாக்கிய மர்ம நபர் யார் என்பது மீதிக்கதை…
காட்டு வாசியாக கொடூரமான கதாப்பாத்திரத்தில் ஜித்தன் ரமேஷ் தனது அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். அதேபோல் மதன் குமார், அஞ்சு, இருவரும் நன்றாக நடித்துள்ளனர்.
இதுவரை யாரும் கணாத அற்புதமான மலைப்பிரதேசத்தை அழகாக காண்பித்துள்ளார் ஒளிப்பதிவாளர். சண்டை காட்சிகளை புதுமையாகவும், எதார்த்தமாகவும் உருவாக்கியுள்ள ஜாக்கி ஜான்சனின் பணி சிறப்பு.