கொள்ளைக்கு ஸ்கெட்ச் போட்டுக் கொடுத்த காதலி..!
கோவை முத்தூட் மினி நிறுவனத்தில் நடந்த 803 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் கள்ளகாதலனுக்கு கொள்ளையடிக்க கற்றுக்கொடுத்த பெண் ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார். பாதுகாப்பு குறைபாட்டை பயன்படுத்தி நடந்த கொள்ளை சம்பவத்தின் பகீர் பின்னணி..
கோவை ராமநாதபுரத்தில் முத்தூட் மினி என்ற நகை அடகு நிறுவனம் 2010 ஆம் ஆண்டில் இருந்து செயல்பட்டு வருகின்றது.
கடந்த 27 ந்தேதி இந்த நிறுவனத்தில் ரேணுகாதேவி, திவ்யா ஆகிய இருவர் பணியில் இருந்த போது மதியம் 3 மணி அளவில் முகத்தில் கைக்குட்டையை கட்டியிருந்த கொள்ளையன் உள்ளே புகுந்து அங்கிருந்த 803 சவரன் நகைகளையும் ஒரு லட்சத்து 34 ஆயிரத்து 480 ரூபாயையும் பையில் போட்டு அள்ளிச்சென்றான்.
கொள்ளையன் தாக்கியதால் மயக்க நிலைக்கு சென்ற ரேணுகாதேவி அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில் கொள்ளையன் ஹிந்தியில் பேசி மிரட்டியதாக கூறியதால் காவல்துறையினர் வட மாநில கொள்ளையனாக இருக்கலாம் என்று சந்தேகித்தனர்.
நகை அடகு நிறுவனத்தில் சிசிடிவி காமிராக்கள் ஏதும் இல்லாததால் அங்கு நடந்த சம்பவங்கள் ஏதும் அறியமுடியவில்லை. அதே நேரத்தில் தரை தளத்தில் உள்ள அரிசி கடையில் பொறுத்தப்பட்டிருந்த சிசிடிவியில் பதிவான காட்சியில் கொள்ளையில் ஈடுபட்ட நபர் முகத்தில் கைகுட்டை கட்டிக் கொண்டு செல்லும் காட்சி பதிவாகி இருந்தது.
அதனைக் கொண்டு பக்கத்து கடைகள் மற்றும் சிக்னல்களில் உள்ள காமிரா காட்சிகளை சேகரித்த காவல்துறையினர் அவன் ஆட்டோ ஒன்றில் ஏறி தப்பிச்செல்வதை கண்டறிந்தனர். அந்த ஆட்டோ ஓட்டுனரை பிடித்து விசாரித்த போது அவனை போத்தனூர் ரெயில் நிலையத்தில் இறக்கி விட்டதாக ஓட்டுனர் தெரிவித்தார்.
அதே நேரத்தில் அந்த இளைஞர் போத்தனூர் ரெயில் நிலையம் செல்ல வேண்டும் என்று கொங்கு தமிழில் கூறியதாக ஆட்டோ ஓட்டுனர் கூறியதால் காவல்துறையினர் உஷார் ஆனார்கள்.
இதையடுத்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ரேணுகாதேவியின் உடல் நலம் குறித்து விசாரித்த போது அவருக்கு எந்தவித காயமும் இல்லை என்பது தெரியவந்தது.
மேலும் ரேணுகாதேவியின் செல்போன் தொடர்புகளை ஆய்வு செய்த போது சம்பவத்தன்று அவர் குறிப்பிட்ட எண்ணிற்கு பலமுறை பேசி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை காவல் நிலையம் அழைத்துச்சென்று உரிய கவனிப்புடன் மேற்கொண்ட விசாரணையில் கொள்ளை குறித்து பல தகவல் வெளிச்சத்திற்கு வந்தன.
ரேணுகாதேவிக்கும், கோவை கெம்பட்டி காலனியில் வாடகை வீட்டில் வசித்து வரும் சுரேஷ் என்பவருக்கும் ரகசிய காதல் இருந்துள்ளது. அப்போது தங்கள் நிறுவனத்தில் காவலாளியோ, சிசிடிவி கேமராவோ எதுவும் இல்லை என்றும் அந்த கிளையில் எப்போதும் இரு பெண்கள் மட்டுமே மதிய வேளையில் பணியில் இருப்பார்கள் என்பதால் நகை பணத்தை கொள்ளையடித்தால் வெளியூருக்கு சென்று ஆடம்பரமாக வாழலாம் என்று கொள்ளைக்கு திட்டம் வகுத்து கொடுத்துள்ளார் ரேணுகா தேவி.
சம்பவத்தன்று உடன் பணியில் இருந்த திவ்யா என்ற ஊழியருக்கு காபியில் தூக்கமாத்திரை கலந்து கொடுத்து தூங்க வைத்துள்ளார். பின்னர் தனது காதலனுக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்து வரவழைத்து நகை பணத்தை எடுத்து கொடுத்துள்ளார் ரேணுகாதேவி போலீசாருக்கு சந்தேகம் வரக்கூடாது என்பதற்காக கொள்ளையன் தன்னை தாக்கியது போல நாடகமாடி உள்ளார் என்கிறது காவல்துறை.
கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட ரேணுகாதேவி, கேரளாவில் பதுங்கி இருந்த காதலன் சுரேஷ் ஆகிய இருவரையும் கைது செய்த காவல்துறையினர் அவர்களிடம் இருந்து 2 கோடியே 27 லட்சத்து 28 ஆயிரத்து 190 ரூபாய் மதிப்புள்ள நகைபணத்தை கைப்பற்றியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
அரிசிகடைகாரர் கூட விழிப்புணர்வுடன் பாதுகாப்பு கருதி தனது கடையில் சிசிடிவி காமிரா பொறுத்தியுள்ள நிலையில், லட்சக்கணக்கில் பணமும் நகையும் புழங்கக் கூடிய முத்தூட் மினி நகை அடகு நிறுவனத்தில் சிசிடிவி காமிராக்கள் பொருத்தப்படவில்லை, காவலாளியும் பணிக்கு அமர்த்தப்படவில்லை..!
குறைந்த சம்பளம் என்பதால் பெண் ஊழியர்களை மட்டும் பணிக்கு வைத்திருந்ததாக காவல்துறையினரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. இது போன்ற கஞ்சத்தனமான அடகு கடைகளின் உரிமத்தை ரத்து செய்வதோடு, அவர்களை பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ள காவல்துறையினர் அறிவுறுத்த வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு..!