“வா வாத்தியார்” விமர்சனம்

ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் சார்பில், ஞானவேல்ராஜா தயாரிப்பில், கார்த்தி, கிருத்திஷெட்டி, ராஜ்கிரண், சத்யராஜ், ஷில்பா மஞ்சுநாத் உள்ளிட்டோர் நடிப்பில் வெளிவந்துள்ள படம் “வா வாத்தியார்”.
கதைப்படி.. மாசிலா ( கற்பனை ) எனும் நகரத்தில் எம்ஜிஆர் உடல் நலிவுற்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவரது தீவிர ரசிகர்கள் ராஜ்கிரண் தலைமையில் எம்ஜிஆர் படம் பார்த்துக் கொண்டு இருக்கையில், எம்ஜிஆர் மறைந்த செய்தி வருகிறது. எம்ஜிஆர் மறைந்த அதே நேரத்தில் ராஜ்கிரணுக்கு பேரக்குழந்தை பிறக்கிறது. குழந்தையின் உள்ளங்காலில் மச்சம் இருந்ததால் வாத்தியாரே ( எம்ஜிஆர் ) பிறந்திருப்பதாதாக நினைத்து ( கார்த்தி ) ராமச்சந்திரன் என பெயர் வைத்து, வாத்தியார் போலவே அநீதிக்கு எதிராக நேர்மையாக வாழ வேண்டும் என எம்ஜிஆர் படங்களை காண்பித்து வளர்க்கிறார்.

பின்னர் பெரியவனாகி போலீஸ் இன்ஸ்பெக்டராக பணிபுரியும் ராமு, தாத்தாவின் எதிர்பார்ப்புக்கு மாறாக ஊழல் பேர் வழியாக மாறி பணம் சம்பாதிக்கிறார். இதற்கிடையில் தொழிலதிபர் பெரியசாமி ( சத்யராஜ் ), முதலமைச்சர் நிழல்கள் ரவி இருவரும் இயற்கைக்கு எதிராக கார்ப்பரேட் நிறுவனத்திற்கு ஆதரவாக செயல்பட்டு, போராடும் அப்பாவி ஜனங்களை கொன்று குவிக்க சதித்திட்டம் தீட்டுகின்றனர். இதனை மஞ்சள் முகம் என்கிற ஹேக்கர் டீம் சமூக வலைத்தளங்களில் அம்பலப்படுத்துகிறது.

இந்நிலையில் தனிப்பட்ட முறையில் பாதிக்கப்பட்டு வேலையில்லாமல் இருக்கும் ராமுவுக்கு தொழிலதிபர் பெரியசாமியின் தயவால் வேலையில் சேர்கிறார். மேலும் அந்த ஹேக்கர் கும்பலை கண்டுபிடிக்கும் வேலையில் அவர்களுடன் சேர்கிறான் ராமு. பின்னர் ராமுவின் உடலுக்குள் எம்ஜிஆர் ஆவி அவ்வப்போது வந்து தவறு செய்பவர்களுக்கு தண்டனை கொடுக்கிறது. அதன்பிறகு ராமு அநீதிக்கு எதிராக போராடி தவறு செய்தவர்களை அழித்து நல்லவர்களை காப்பாற்றினாரா என்பது மீதிக்கதை..

கார்த்தி படத்தின் முதல் பாதியில் தனது இயல்பான நடிப்பின் மூலம் ரசிக்க வைக்கிறார். இரண்டாம் பாதியில் எம்ஜிஆரின் ஆவி அவருக்குள் புகுந்து அநீதிக்கு எதிராக போராடும் விதம் பொருந்தவில்லை என்றாலும், சண்டை, பாடல் காட்சிகள் ரசிக்கும்படியாக உள்ளது. படத்தின் முழு கதையையும் கார்த்தியே சுமந்து செல்கிறார்.
நாயகி கிருத்தி ஷெட்டி தனக்கு கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாக செய்திருக்கிறார். ராஜ்கிரண் எம்ஜிஆரின் தீவிர ரசிகராக வாழ்ந்திருக்கிறார் என்றே சொல்லலாம்.

இயக்குநர் நல்ல கதையை தேர்வு செய்திருக்கிறார் என்றாலும், திரைக்கதையில் கவனம் செலுத்தியிருக்கலாம். இன்றைய தலைமுறையினர் எம்ஜிஆரை ரசிப்பார்களா என்பதும் கேள்விக்குறியே !கார்த்தியின் நடிப்புக்கு தீனி போடும் வகையில் இயக்குநர் மெனக்கெடவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. இசையும் பெரிதாக எடுபடவில்லை.




