திமுகவினர் கொண்டாடிய திராவிட பொங்கல் விழா !

தமிழ் புத்தாண்டு மற்றும் உழவர் திருநாளான தைப்பொங்கலை வரவேற்று கொண்டாடி சிறப்பிக்கும் வகையில், திராவிட பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. திருப்பூர் மாவட்டம், உடுமலை அடுத்துள்ள சோமவாரப்பட்டி ஆல்கொண்டால் திருக்கோயிலில் பொங்கல் பண்டிகையையொட்டி ஏராளமான பக்தர்கள் திரண்டு வந்து சாமி தரிசனம் செய்தனர். கோயிலுக்கு வருகை தந்த பத்தாயிரத்திற்கும் அதிகமான பக்தர்களுக்கு அமைச்சர் சக்கரபாணி , பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரசாமி, கட்சியின் நிர்வாகிகள் உள்ளிட்டோர் அன்னதானம் வழங்கினர்.

இதனையடுத்து விழாவின் முக்கிய நிகழ்வாக வள்ளி கும்பியாட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை ஏராளமான பொதுமக்கள் கண்டு ரசித்தனர். இதற்கான ஏற்பாடுகளை திருப்பூர் தெற்கு மாவட்ட திமுக நிர்வாகிகள் செய்திருந்தனர்.

அதேபோல மடத்துக்குளம் அடுத்துள்ள துங்காவி, காரத்தொழுவு ஆகிய பகுதியில் விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. பெண்களுக்கு கோல போட்டி , மியூசிக் சேர் என பலவிதமான போட்டிகள் நடத்தப்பட்டது. போட்டியில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு வண்ண கோலங்களை போட்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.

போட்டியில் கலந்து கொண்டவர்களுக்கு பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கே.ஈஸ்வரசாமி, மடத்துக்குளம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் இரா.ஜெயராமகிருஷ்ணன் ஆகியோர் பரிசுகளை வழங்கி பாராட்டுக்களை தெரிவித்தனர். நடைபெற்ற நிகழ்ச்சியில் திருப்பூர் தெற்கு மாவட்ட பொருளாளர் முபாரக் அலி , மேற்கு ஒன்றிய செயலாளர் தங்கராஜ், கிழக்கு ஒன்றிய செயலாளர் சாகுல்ஹமீது, ஒன்றிய அவைத்தலைவர் இளங்கோவன் உள்ளிட்ட கட்சியின் நிர்வாகிகள் தொண்டர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.




