திருப்பூரில்… தலைவிரித்தாடும் போதை கலாச்சாரம் !கண்டுகொள்ளாத அதிகாரிகள் !.?

திருப்பூர் மாவட்டம், அவினாசி வட்டம், தேவம்பாளையம் பகுதியில் தடைசெய்யப்பட்ட குட்கா, பான் மசாலா, கூல் லிப், ஹான்ஸ் போன்ற போதை புகையிலை பொருட்களை சில இளைஞர்கள் வாடகைக்கு வீடு எடுத்து படுஜோராக விற்பனை செய்து வருவதாக அப்பகுதியில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும், திருப்பூர் மாநகராட்சி மற்றும் அவினாசி ஆகிய பகுதிகளில் குறிப்பிட்ட அந்த வாடகை வீட்டிலிருந்து தான் மொத்தமாகவும் , சில்லறையாகவும் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது.

அவினாசி காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட தேவம்பாளையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வடமாநிலத்தவர்கள் அதிகளவில் வசித்து வருகின்றனர். பெரும்பாலான வடமாநில தொழிலாளர்கள் பான் மசாலா, குட்கா உள்ளிட்ட போதை பாக்கு, புகையிலை பயன்படுத்துவது அதிகம். அதன் காரணமாக வியாபார நோக்கத்துடன் சிறிய அளவில் விற்பனையை தொடங்கிய இளைஞர்கள் தற்போது பெரிய அளவில் புகையிலை விற்பனையில் ஈடுபட்டுள்ளனர். அவினாசி, திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் குறிப்பிட்ட சில பெட்டிக்கடைகள், பேக்கரிகளில் மொத்தமாக எடுத்துச்சென்று விற்பனை செய்யப்படுகிறது.
காவல்துறையினர் அவ்வப்போது கடுமையான நடவடிக்கை எடுத்தும் கூல் லிப், கணேஷ், ஹான்ஸ் உள்ளிட்ட புகையிலை பொருட்கள், தங்கு தடையின்றி அனைத்து பகுதிகளிலும் கிடைக்கின்றன. சில்லரை விற்பனையாளர்களை குறிவைத்து பிடித்து அபராதம் விதிப்பது, வழக்கு போடுவது என கணக்கு காட்டும் அதிகாரிகள், இவற்றின் மொத்த விற்பனையாளர்களை கண்டுகொள்வதில்லை.

அதேபோல் 24 மணி நேரமும் தங்கு தடையின்றி மது விற்பனையும் அதிகரித்துள்ளன. ஒயின்ஷாப் அருகே செயல்படும் பார் மட்டுமல்லாது, ஒருசிலர் சொந்த வீடுகளில் வைத்து கள்ளத்தனமாக மது விற்பனை செய்து வருகின்றனர். பார் உரிமையாளர்கள் மாதம் ஒருமுறை மதுவிலக்கு போலீஸாரை பெரிய அளவில் கவனிப்பதால், கள்ளச்சந்தையில் நடக்கும் மது விற்பனையை கண்டுகொள்ளாமல் விட்டுவிடுகின்றனர்.
அவினாசி, திருப்பூர் மாநகரம் உள்பட பல பகுதியில் செயல்படும் அரசு மதுபானக்கடை அருகேயுள்ள பாரில் இரவு பத்து மணிக்கு மேல் தொடங்கும் மது விற்பனை அடுத்தநாள் மதுக்கடை திறக்கும் வரை அமோகமாக விற்பனையாகிறது. லட்சக்கணக்கான மக்கள் நிறைந்த திருப்பூர் மாநகரத்தில் சட்ட ஒழுங்கு பிரச்சனையை சரிசெய்ய காவல்துறை நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், மதுவிலக்கு போலீஸார் சட்ட ஒழுங்கு பிரச்சனையை கட்டவிழ்த்து விட வழிவகை செய்து கொடுப்பதாக பார்க்க முடிகிறது.

போக்குவரத்து நெரிசலுக்கு பெயர் போன திருப்பூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் போதை ஆசாமிகளால் அவ்வப்போது வாகன விபத்து மற்றும் சட்ட ஒழுங்கு பிரச்சனை தலைவிரித்தாடுகிறது. சட்ட ஒழுங்கு பிரச்சனைகளுக்கு காரணமாக விளங்கும் போதை பொருட்கள் விற்பனை, கள்ளச்சந்தை மது விற்பனையை உடனடியாக தடுத்து நிறுத்தி சட்ட ஒழுங்கை நிலை நாட்டுமா திருப்பூர் மாவட்ட காவல்துறை !.?
காத்திருப்போம்….



