பழனியில் தடைசெய்யப்பட்ட லாட்டரிச் சீட்டு அமோக விற்பனை !

தமிழகத்தில் ஏழை, எளிய மக்கள் லாட்டரி சீட்டு விற்பனையால் தங்களின் வாழ்வாதாரத்தை இழந்து நடுத்தெருவுக்கு வந்ததையடுத்து, தமிழகம் முழுவதும் லாட்டரி சீட்டு விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டது. ஆனால் தடைசெய்யப்பட்ட லாட்டரிச் சீட்டு விற்பனை மீண்டும் அமோகமாக நடைபெற்று வருகிறது.
திண்டுக்கல் மாவட்டம், பழனியில் சாமி தியேட்டர் ரோட்டில் கேரளா லாட்டரி விற்பனை செய்யப்படுவதாக வந்த தகவலையடுத்து விசாரித்த போது, பழனி அருகேயுள்ள வண்டி வாய்க்கால் பகுதியை சேர்ந்த ஒருவர், பழனி நகரம் அதனை சுற்றுயுள்ள பகுதிகளில் லாட்டரி விற்பனை அமோகமாக செய்துவருகிறார். குறிப்பாக சாமி தியேட்டர் செல்லும் சாலையில் காலை 7 மணிமுதல் 9 மணி வரை கேரளா லாட்டரி விற்பனை செய்யும் அவர், ஒரே இடத்தில் லாட்டரி விற்பனை செய்தால், போலீஸ் கெடுபிடி அதிகமாக இருக்கும். அதனால் ஏற்படும் சிக்கல்களை தவிர்க்க இரண்டு சக்கர வாகனத்தில் சென்று பழனி மற்றும் அதன் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் லாட்டரி விற்பனை செய்து வருவதாக தெரியவருகிறது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு இதே பழனியில் வாட்ஸ்அப் குழு அமைத்து அதில் , லாட்டரி நம்பர்கள் பதிவு செய்து விற்பனை செய்து வந்தனர். இது சம்பந்தமாக பழனி காவல்துறையினருக்கு தகவல் சொன்னதும் உடனடியாக சம்பந்தப்பட்ட நபர்களை பிடித்து செல்போன், லாட்டரி டிக்கெட்களை பறிமுதல் செய்து வழக்கு பதிவு சொய்தனர். இதனால் பழனியில் லாட்டரி விற்பனை அப்போது நடக்காமல் இருந்தது.

தற்போது மீண்டும் லாட்டரி விற்பனை துவங்கியுள்ளது. வாட்ஸ்அப் குழு அமைத்தால்தானே பிரச்சனை, ஃபோன் செய்தால் போதும், லாட்டரி டிக்கெட் இருக்கும் இடம் தேடி வரும் என்பதாக லாட்டரி விற்பனையாளர்கள், தங்களின் விற்பனையை தொடர்ந்து வருகின்றனர். பழனி பேருந்துநிலையம், திண்டுக்கல் சாலை, கொடைக்கானல் செல்லும் சாலை, அடிவாரம் செல்லும் சாலை, ரயில்நிலையம் என பல்வேறு இடங்களில் லாட்டரி விற்பனை தொடர்கிறது.

லாட்டரி விற்பனை தொடர்பாக பழனி காவல்துறையினருக்கு அவ்வப்போது தகவல்கள் கூறினாலும் சில நேரங்களில் போலீஸ் நடவடிக்கை எடுப்பதில் தாமதம் செய்கிறது. இதனால் லாட்டரி விற்பனை செய்பவர்கள் தப்பித்து விடுகின்றனர். பழனியில் சட்டவிரோத லாட்டரி விற்பனை மீண்டும் அதிகரித்து வருகிறது. இதனை உடனே தடுத்து நிறுத்த வேண்டும். இதேநிலை நீடித்தால் நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர்கள் அதிகளவில் பாதிக்கப்படுவார்கள்.

ஆகவே தடைசெய்யப்பட்ட லாட்டரிச் சீட்டு விற்பனையை தொடரும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்வதோடு, பழனி நகரில் லாட்டரி சீட்டு விற்பனையை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என காவல்துறைக்கு அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர். நடவடிக்கை எடுப்பாரா பழனி துணை காவல் கண்காணிப்பாளர் ? காத்திருப்போம்…