அமராவதி சர்க்கரை ஆலையை புனரமைக்க உயர்மட்ட குழு அமைக்க வேண்டும். கிருஷ்ணசாமி கோரிக்கை !
தமிழகத்தின் முதல் கூட்டுறவு சர்க்கரை ஆலையான உடுமலை கிருஷ்ணாபுரம் அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை 1961 துவங்கப்பட்டது. பிஏபி ஆயக்கட்டுப்பகுதி மற்றும் பழனி, தாராபுரம் தாலுகா ஆகிய பகுதிகளில் விளையும் கரும்பிலிருந்து நாள் ஒன்றுக்கு 1500 டன் இந்த ஆலையில் அரவை செய்யப்பட்டது. 65 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட வடிப்பாலை இங்கு செயல்பட்டு வருகிறது.
தற்பொழுது மிக குறைந்த அளவே கரும்பு அரவை செய்யப்பட்டு வருகிறது. அவ்வப்பொழுது இயந்திர பழுது ஏற்படுவதால் வெட்டப்பட்ட கரும்புகள் காய்ந்து விவசாயிகள் பாதிப்படையும் சூழ்நிலை நிலவி வருகிறது. இதனால் கடந்த வாரம் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை மற்றும் வடிப்பாலையினை புதிய தமிழக கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி பார்வையிட்டார்.பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த போது… 1500 டன் அரவை செய்து கொண்டிருந்த ஆலையில், நிர்வாக சீர்கேட்டால் 500 டன் அரவை செய்வது மிகப்பெரிய சவாலாக உள்ளது. நிர்வாக சீர்கேட்டால் நாள் ஒன்றுக்கு ஒரு கிலோ சர்க்கரைக்கு 20 ரூபாய் நஷ்டம் ஏற்பட்டு வருகிறது.
தமிழக அரசு இங்குள்ள தொழில் சங்க நிர்வாகிகள், கரும்பு விவசாயிகள், அரசு அலுவலர்கள் உள்ளிட்டோர் அடங்கிய உயர்மட்ட குழுவை அமைத்து ஆய்வு செய்து 250 கோடி ஒதுக்கீடு செய்து சர்க்கரை ஆலையினை புதுப்பித்து விவசாயிகள் பயன்பாட்டிற்கு வழங்க வேண்டும். எந்த ஒரு சூழ்நிலையிலும் தனியாருக்கு தாரை வார்க்கும் சூழ்நிலை ஏற்படக்கூடாது என தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.