கனிமொழி வீட்டில் ரெய்டும் பின்னணியும்
மதிமுக தலைவர் வைகோவுடன் இணைந்து கோவில்பட்டியில் தேர்தல் பிரச்சாரத்தை முடித்து விட்டு கனிமொழி தூத்துக்குடியிலுள்ள குறிஞ்சி நகர் பகுதியில் தனது இல்லத்திற்கு திரும்பி தன்னுடைய கணவர் அரவிந்தன், மகன், வழக்கறிஞர் சண்முகசுந்தரத்தின் மகனான மனுராஜ், பிரவீன், உதவியாளர் சரவணன் மற்றும் பலருடன் ஆலோசனையில் ஈடுபட்டு இருந்தார்.
அந்தவேளையில், சரியாக இரவு 08.15 மணியளவில் மதுரை வருமானவரித்துறை உதவி ஆணையர் அடங்கிய டீம், திருநெல்வேலி வருமானவரித்துறையை சேர்ந்த உதவி ஆணையர் கார்த்திகா உள்ளிட்ட டீம் மற்றும் உள்ளூர் தேர்தல் கண்காணிப்பாளர் டீமுமாக மொத்தம் 24 நபர்கள் உள்ளடக்கிய பெரும் குழு 5 வாகனங்களில் வந்திறங்கி திமுக வேட்பாளரின் வீடு மற்றும் அலுவலகத்தினை ஒரு சேர சோதனையிடுவதாக அறிவித்து, பதிலை எதிர்பார்க்காமலே சோதனையிட ஆரம்பித்தது.
மொத்தமே 6 அறைகள் உள்ள அந்த வீட்டில் பல தடவை சுற்றிப்பார்த்தும் எதிர்ப்பார்த்தது ஒன்றும் கிடைக்கவில்லை வருமானவரித்துறையினருக்கு..! இதே நேரத்தில் கட்சியின் தூத்துக்குடி தெற்கு மற்றும் வடக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் அனிதா ராதாகிருஷ்ணனும், கீதாஜீவனும் தங்களுடைய ஆதரவாளர்களுடன் அங்கு வந்து சேர வருமான வரித்துறையினருக்கும், ஆளுங்கட்சி மற்றும் பாஜக வேட்பாளர் தமிழிசைக்கு எதிரான கோஷங்கள் முழங்கின.. எனினும் சோதனையை கைவிடவில்லை அந்த டீம்..
போதாக்குறைக்கு பத்திரிகையாளர் களை மிரட்டியது. மிகுந்த எதிர்ப்பார்ப்புக் களுக்கிடையே அந்த அறையை திறக்கும் போது கிடைத்தது என்னவோ, கலைஞர் எழுதிய “நெஞ்சுக்கு நீதி” புத்தகங்கள் 40. இதே வேளையில் வேட்பாளருக்கு தலைமைத் தேர்தல் ஏஜென்டான மதுரையை சேர்ந்த வழக்கறிஞர் அன்பு நிதியும் அங்கு வந்து சேர, “ யாரைக்கேட்டு வந்தீர்கள்..? எதனால் இந்த சோதனை.? உங்களுக்கு என்ன கிடைத்தது.? எதுக்கு இத்தனை மணி நேரம் இங்கு இருக்கிறீர்கள்..? போன் வந்தததால் சோதனையிட வந்ததாக கூறுகிறீர்கள்.? அப்படி யார் போன் செய்தாலும் சோதனையிடுவீர்களா.?” என பலரும் சவுண்ட் விட, சுமார் இரண்டே கால் மணி நேரம் கழித்து சோதனையை முடித்துக்கொண்டதாக அறிவித்தது அந்த டீம்.
“ இங்கிருந்து என்ன எடுத்தீர்கள்..? அதற்கு எழுதிக் கொடுங்கள் இல்லையெனில் எதுவும் எடுக்கவில்லையெனில் அதனையும் எழுதிக் கொடுங்கள்.” என திமுகவினர் வருமானவரித்துறையிடம் மல்லுக்கட்ட, “தாங்கள் ஒன்றும் கைப்பற்றவில்லை” என எழுதிக்கொடுத்து அங்கிருந்து நகர்ந்தனர் அவர்கள். இதேவேளையில் பத்திரிகையாளர்களை சந்தித்த திமுக தலைவர் ஸ்டாலினோ, “ ஜனநாயகம் படுகொலை செய்யப்பட்டுள்ளது.தேர்தல் ஆணையத்தில் முறையாக புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை; வரும் காலங்களில் தேர்தல் ஆணையத்தில் சீர்திருத்தம் ஏற்படுத்த வேண்டும் என்பது என் கோரிக்கை” என்று தெரிவித்தார்.
இந்நிலையில் தூத்துக்குடியில் பத்திரிகையாளர்களை சந்தித்த கனிமொழியோ., “8.30 மணி அளவில் வருமான வரித்துறையினர் எனது வீட்டுக்கு வந்தனர். வருமான வரித்துறையினர் சோதனை செய்ய வந்தபோது ஆதாரம் இருக்கிறதா என்று கேட்டேன். இந்த நேரத்தில் சோதனை செய்யலாமா? என்று கேட்டதற்கு அவர்களிடம் பதில் இல்லை. சோதனை நடத்திய இடத்திலேயே எனக்கு சம்மன் கொடுத்தார்கள்.
அது, சட்டத்துக்கு புறம்பானது. இந்தச் சோதனையில் இங்கிருந்து எதுவும் கைப்பற்றப்படவில்லை. அதனை, அவர்களே ஒப்புக்கொண்டார்கள். இந்தத் தொகுதியில் எப்படியாவது தேர்தலை நிறுத்திவிடலாம் என்ற ஆசையில்தான் இங்கே சோதனை செய்யவந்தனர். அவர்களது, ஆசை நிராசையாக போனது.
இந்தச் சோதனையால், தி.மு.க தொண்டர்கள் அச்சப்படமாட்டார்கள். இனிமேல், தான் தொண்டர்கள் உத்வேகமாக செயல்படுவார்கள்’ என்று தெரிவித்தார்.
தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்தியபிரத சாகு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அதன் விவரம் வருமாறு:-
தமிழகத்தில் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் 138 கோடியே 57 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மற்றும் ரூ.3.16 கோடி பறிமுதலாகி இருக்கிறது. ரூ.43.5 லட்சம் மதிப்புள்ள மதுபானங்கள் பிடிபட்டுள்ளன.
தூத்துக்குடியில் கனிமொழி தங்கி இருந்த வீட்டில் திட்டமிட்டு சோதனை நடத்தப்படவில்லை. அங்குள்ள தேர்தல் அதிகாரிக்கு எஸ்.எம்.எஸ். மூலம் தகவல் வந்ததையடுத்து பறக்கும் படையினர் அங்கு சென்றனர். வருமான வரித் துறையினருக்கும் தகவல் வந்ததால் அங்கு சென்றனர். பணம் எதுவும் அங்கு இல்லை என்பது தெரிய வந்தது. அதிகாரிகள் திரும்பி வந்து விட்டனர்.
ஆண்டிப்பட்டியிலும் பணம் பதுக்கி வைத்து இருப்பதாக மாவட்ட தேர்தல் அதிகாரியான கலெக்டருக்கு தகவல் வந்ததால், பறக்கும் படையினரும், வருமான வரித் துறையினரும் சோதனை நடத்தினார்கள். இதில் ஒரு கோடிக்கு மேல் பணம் பிடிபட்டதாக தகவல் வந்துள்ளது. முழு விவரம் இனிமேல்தான் தெரிய வரும்.
தேர்தல் ஆணையம் அதிகாரிகளுக்கு வரும் தகவலையடுத்து கட்சி பாகுபாடு இல்லாமல் சோதனை நடத்துகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது ஒரு நிருபர், ‘‘எதிர்க்கட்சியை சேர்ந்த துரைமுருகன், கனிமொழி, வசந்தகுமார் ஆகியோருடைய வீடுகளில் சோதனை நடத்தும் அதிகாரிகள் அ.தி.மு.க. கூட்டணி சம்பந்தபட்டவர்களின் வீடுகளில் சோதனை நடத்த வில்லை. ஒருதலைபட்சமாக தேர்தல் ஆணையம் நடந்து கொள்வதாக கூறப்படுகிறதே? என்று கேட்டார்.
இதற்கு பதில் அளித்த தேர்தல் அதிகாரி எங்களுக்கு கிடைக்கும் தகவல்களை வைத்து சோதனை நடத்துகிறோம். பாரபட்சம் பார்ப்பது இல்லை. விதி மீறலில் யார் ஈடுபட்டாலும் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு மேல் நடவடிக்கை எடுக்கப்படுகிறது’’ என்றார்.