தலைமை செயலாளராக சண்முகம், டிஜிபி-யாக திரிபாதி நியமனம்!
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவிற்கு பின், அப்போதைய தலைமைச் செயலாளர் ராம மோகன ராவ் பதவி வகித்து வந்தார். இந்த சூழலில் இவரின் வீடு மற்றும் அலுவலகத்தில் வருமான வரித்துறை அதிரடியாக சோதனை நடத்தியது. தமிழக அரசியல் வரலாற்றில் தலைமைச் செயலகத்தில் வருமான வரித்துறை சோதனை நடத்துவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்த நிலையில், 1981ஆம் ஆண்டு பேட்ச் ஐஏஎஸ் அதிகாரியான கிரிஜா வைத்தியநாதன் தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டார். இவரது பதவிக்காலம் முடிவடைந்த நிலையில், புதிய தலைமைச் செயலாளராக சண்முகம் நியமனம் செய்யப்பட்டார்.
இவர் 1985ஆம் ஆண்டு பேட்ச் ஐஏஎஸ் அதிகாரி ஆவார். சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவர். சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியராக இருந்துள்ளார். மேலும் கூட்டுறவு துறை முதன்மை செயலாளராக பதவி வகித்துள்ளார்.
இவர் அதிமுக, திமுக ஆகிய இரு ஆட்சிகளிலும் தொடர்ந்து நிதித்துறை செயலாளராக பதவி வகித்து வந்தவர். இவர் மீதான நம்பிக்கை காரணமாக, ஜெயலலிதா, கருணாநிதி முதலமைச்சர்களாக இருந்த போது, சண்முகத்திற்கு முக்கியத்துவம் கொடுத்தனர்.
அதாவது திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட இலவச வண்ண தொலைக்காட்சி திட்டம், அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட அம்மா கேண்டீன் ஆகிய திட்டங்களை செயல்படுத்த நிதி ஒதுக்கி உத்தரவிட்டார்.
இரு திட்டங்களிலும் அரசுக்கு அதிக சுமை ஏற்படாத வண்ணம் சிறப்பாக செயல்படுத்திக் காட்டினார். இதன்மூலம் பல்வேறு மாவட்ட ஆட்சியாளர்களின் நன்மதிப்பை பெற்றார். அந்த வரிசையில் தற்போதைய தமிழக முதல்வர் பழனிசாமிக்கும் நம்பிக்கைக்கு உரியவராக சண்முகம் திகழ்கிறார். இவர் முறைப்படி தமிழகத்தின் தலைமைச் செயலாளராக பொறுப்பேற்றுக் கொண்டார்.
தமிழக காவல்துறையின் டிஜிபியாக ஜே.கே.திரிபாதி நியமிக்கப்பட்டுள்ளார். ஜூலை 1ஆம் தேதி அவர் பொறுப்பேற்றார். தமிழகத்தின் தற்போதைய சட்டம்-ஒழுங்கு டிஜிபியாக இருந்த டி.கே.ராஜேந்திரனின் பதவிக் காலம் கடந்த 30-ந் தேதியுடன் நிறைவடைந்தது. புதிய டிஜிபி ஆக நியமிக்கப்படப்போவது யார் என கேள்வி எழுந்த நிலையில், அதற்கான நியமன விதிகளின்படி, மத்திய பணியாளர் தேர்வாணையத்திற்கு, மூத்த ஐபிஎஸ் அதிகாரிகளின் பட்டியலை தமிழக அரசு அனுப்பியுள்ளது. மத்திய பணியாளர் தேர்வாணையத்தின் சம்மந்தப்பட்ட குழு கூடி, அதில் சிலரின் பெயர்களை பரிந்துரை செய்துள்ளது.
இந்த பட்டியலை கவனமாகவும், சுதந்திரமாகவும் சீர்தூக்கி பார்த்து, ஜே.கே.திரிபாதியை, தமிழக காவல்துறை தலைவர் பொறுப்பில் டிஜிபி ஆக நியமித்திருப்பதாக தமிழக அரசின் உள்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீருடை பணியாளர் தேர்வாணைய டிஜிபி ஆக இருந்த ஜே.கே.திரிபாதி, சட்டம்-ஒழுங்கு பிரிவு டிஜிபி ஆக நியமிக்கப்பட்டுள்ளார். ஜூலை 1ஆம் தேதி பொறுப்பேற்றுக் கொண்ட ஜே.கே.திரிபாதி 2 ஆண்டுகளுக்கு அப்பதவியை வகிப்பார். தமிழக காவல் துறையில் பல பிரிவுகளில் டிஜிபி அந்தஸ்தில் அதிகாரிகள் நியமிக்கப்பட்டாலும், சட்டம்-ஒழுங்கு டிஜிபி பதவிதான் காவல்துறை தலைவர் பதவி என்பது குறிப்பிடத்தக்கது.
காவல் துறையில் சிறந்த செயல்பாட்டிற்காக இந்தியாவிலேயே இரண்டு சர்வதேச விருதுகளை பெற்ற முதல் ஐபிஎஸ் அதிகாரி என்றால் அது ஜே.கே.திரிபாதி தான். இன்று காவல் துறையில் உள்ள “பீட் ஆபிசர்” “குடிசை பகுதிகளை தத்தெடுத்து இளஞ்சிறார்களை நல்வழிபடுத்தும் திட்டம்” “புகார் பெட்டி” உள்ளிட்ட புதிய முறைகளை தான் திருச்சி காவல் ஆணையராக இருக்கும் போது கொண்டுவந்தார். 1985-ம் ஆண்டு பேட்ச் தமிழக கேடர் ஐபிஎஸ் அதிகாரியான திரிபாதி, ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர்.
டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலையில் எம்.பில், பிச்டி முடித்து அதன் பிறகு ஐபிஎஸ் அதிகாரியானார். 1985- முதல் தமிழகத்தின் 9 மாவட்டங்களில் எஸ்.பியாகவும், பின்னர் டி.ஐ.ஜி-யாக பதவி உயர்வு பெற்று திருச்சி ஆணையராகவும், சென்னை இணை ஆணையராகவும், பின்னர் மதுரை மண்டல ஐஜி-யாகவும் பணியாற்றியவர்.
சிறை துறை, நிர்வாகம், அமலாக்கப்பிரிவு என காவல் துறையின் அனைத்து பிரிவுகளிலும் பணியாற்றி கூடுதல் டிஜிபியாக பதவி உயர்வு பெற்றார். தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபியாகவும், இரண்டு முறை சென்னை காவல் ஆணையராகவும் பணிபுரிந்துள்ளார்.
2001-ல் காவல் துறையில் சிறந்த நிர்வாகத்திற்காக ஸ்காட்லாந்து நாட்டில் இவருக்கு தங்கம் பதக்கம் வழங்கப்பட்டது. மேலும், 108 நாடுகள் பங்கேற்புடன் நடந்த சர்வதேச காவல் துறை மாநாட்டில் இவருக்கு விருது வழங்கப்பட்டது.
மெச்சதகுந்த பணிக்காக 2002-ல் இந்திய குடியரசு தலைவர் விருதையும், சிறந்த நிர்வாகத்திற்காக 2008-ல் பிரதம மந்திரி விருதையும் பெற்றுள்ளார். சட்டம் ஒழுங்கு பிரிவில் நீண்ட காலம் அனுபவம் உள்ள அதிகாரியான ஜே.கே.திரிபாதி அடுத்த இரண்டுகளுக்கு தமிழக டிஜிபியாக நீடிப்பார்.