அதிமுக தொண்டனின் உள்ளக்குமுறல்
கடலூர் திமுக எம்பி ரமேஷ் அவரது முந்திரி தொழிற்சாலையில் பணிபுரிந்த தொழிலாளி கோவிந்தராசுவை எம்பி ரமேஷும் அவரது ஆட்களும் அடித்து கொலை செய்த விவகாரத்தை தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் எடப்பாடி பழனிச்சாமி கையில் எடுத்து கொண்டு அந்த குடும்பத்திற்கு நியாயம் கேட்டு போராடியிருக்கலாம்..அதையும் செய்யவில்லை… திமுக தலைவர் ஸ்டாலின் முதல்வராக பதவி ஏற்ற நாளில் இருந்தே.. திமுகவினரின் அராஜகம் தமிழகத்தில் அதிகரித்து விட்டது.
தற்போது திமுக எம்பி ஒருவரே தொழிலாளி ஒருவரை அடித்து கொலை செய்திருக்கும் சம்பவம் தமிழக மக்களுக்கு இந்த ஆட்சியில் பாதுகாப்பு இருக்குமா என்ற அச்சத்தை உண்டாகியுள்ளது…? இது போன்ற விவகாரத்தில் எதிர்க்கட்சி என்ற முறையில் நியாயம் கேட்டு எதிர்த்து அரசியல் செய்திருக்க வேண்டாமா?
அதோடு இல்லாமல் நேரடியாக பாதிக்கப்பட்ட அந்த குடும்பத்திற்கு தமிழகத்தின் எதிர்கட்சி தலைவர் என்ற முறையில் சந்தித்து ஆறுதல் கூறி, கட்சி சார்பில் நிதியுதவி அளித்திருந்தால் அரசியல் களமே தமிழகத்தில் மாறியிருக்கும்.
ஆனால் மாறாக அதிமுக ஏதும் செய்யவில்லை…இதுவே அதிமுக ஆட்சியாக இருந்திருந்தால்..திமுக இந்த சம்பவத்தை அஸ்திரமாக பயன்படுத்தி அதிமுகவுக்கு எதிராக அரசியல் செய்திருக்கும். திமுக எதிர்கட்சியாக இருந்தபோது ஒவ்வொரு அரசியல் நகர்வையும் துல்லியமாக பயன்படுத்திக் கொண்டே வந்தது.
நீட் விவகாரத்தில் தற்கொலை செய்து கொண்ட அரியலூர் அனிதா விவகாரம் முதல் சாத்தான்குளம் காவல் துறையினரால் தாக்கப்பட்டு உயிரிழந்த தந்தை மகன் இறப்பு வரை அதிமுகவை வசைபாடி திமுக எதிர்ப்பு அரசியல் செய்து மக்கள் மனங்களில் மாற்றத்தை கொண்டு வந்தது.
ஆனால் அண்ணன்கள் இரட்டை குழல் துப்பாக்கிகளான எடப்பாடி பழனிச்சாமியும், ஓ.பன்னீர் செல்வமும் கடலூர் திமுக எம்பி ரமேஷ் விவகாரத்தை அரசியல் செய்து பயன்படுத்த தெரியாமல் கோட்டை விட்டனர் என்றே கூற தோன்றுகிறது. அது ஏன் என்றே தோன்றவில்லை..!
ஒரு வேலை ஆளும் கட்சி தங்கள் மீது அரசியல் அழுத்தம் கொடுத்தால்தான் என்ன.? இல்லையெனில் வழக்குகள் தொடுத்தால்தான் என்ன..? நம்முடைய புரட்சித்தலைவி அம்மா காணாத வழக்கா..! அதில் காணாத வெற்றியா..! உங்கள் பின்னால் மாபெரும் தலைவர்கள் விட்டுச்சென்ற மாபெரும் இயக்கம் உண்டு என்பதை உணர்ந்து செயல்பட்டாலே போதும்… நீங்கள் இந்த இயக்கத்தை தலைமையேற்று நடத்த தகுதி இல்லாதவர்களாக மாற நேர்ந்தால்.. இப்படிப்பட்ட தலைமையை நம்பி தொண்டர்கள் எப்படி அரசியல் செய்வார்கள்…
திமுக தலைவர் ஸ்டாலின் எதற்கெடுத்தாலும் அரசியல் செய்கிறார் என்று முதல்வராக இருந்த எடப்பாடியார் கூறியதற்கு, அரசியல் கட்சி அரசியல் செய்யாமல் அவியலா செய்யும் என்று திமுக பதிலளித்தது.
இதே திமுக எதிர்கட்சியாக இருந்திருந்தால் அய்யகோ பாருங்கள் ஆளும் கட்சி எம்பி ஒருவரே ஒரு தொழிலாளியை அடித்து கொலை செய்திருக்கிறார்கள். இதுபோன்ற கொலைகார ஆட்சி தேவையா.? என்று உள்ளாட்சி தேர்தல் நடைபெற்ற ஒன்பது மாவட்டங்களிலும் பரப்புரை செய்து அதிமுகவை ஓட விட்டிருப்பார்கள்.
ஆனால் அதிமுக தலைமை கிணற்றில் விழுந்த கல் போன்று கிடந்ததால் ஆளும் திமுக விஸ்வரூப வெற்றி பெற்று உள்ளது.
அதிமுக அரசியல் செய்யாமல் போனால் அம்மா வளர்த்த கட்சி எம்ஜிஆர் ஆரம்பித்த கட்சி 50 வருடம் கொண்டாடும் இந்த நேரத்தில் அடுத்த 10 ஆண்டுகளுக்குகூட நீடிக்க முடியாமல் போகும். அப்படி போனால் அது தமிழகத்திற்கும் நல்லதல்ல..
இனியாவது அரசியல் செய்வீர்களா.? செய்வீர்களா.?
– சூரியன்