அமைச்சராகும் சதன்பிரபாகர் எம் எல் ஏ
இராமநாதபுரம் மாவட்டத்திற்கு அமைச்சரவையில் பிரதிநிதித்துவம் வழங்கும் வகையிலும், தேவேந்திரகுல வேளாளர் சமுதாய வாக்கு வங்கியை தக்கவைத்துக் கொள்ளும் வகையிலும் , பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் சதன்பிரபாகரை அமைச்சராக்க அதிமுக தலைமை முடிவு செய்துள்ளது .
தென் மாவட்டங்களில் ஆளும் அதிமுக மீது தேவேந்திரகுல வேளாளர் சமுதாய மக்கள் அதிருப்தியில் இருக்கிறார்கள் . அதனால் தான் திமுக, பாஜக போன்ற கட்சிகளின் கவனம் தேவேந்திரகுல வேளாளர் சமுதாய வாக்கு வங்கியை நோக்கி செல்வதாகவும், இந்த தகவல்கள் உளவுத்துறை மூலம் அதிமுக தலைமைக்கு வந்ததையடுத்து அந்த சமுதாய மக்களின் வாக்கு வங்கியை அதிமுக தக்கவைத்துக் கொள்வதற்காக பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் சதன்பிரபாகருக்கு தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் பதவி வழங்க அதிமுக தலைமை முடிவு செய்துள்ளது.
சமீபத்தில் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பினார். தமிழகத்தில் கொரோனா சிகிச்சைக்கு அரசு மருத்துவமனையை விரும்பிய முதல் சட்டமன்ற உறுப்பினர் சதன்பிரபாகர் என்று நாற்காலி செய்தி இதழில் கட்டுரை வெளியிட்டு பாராட்டி இருந்தோம்.
இவர் கொரோனா சிகிச்சை பெற்ற போது தேவர் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் இவருக்காக பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் இவருக்காக வழிபாடு நடத்தினார்கள். தேவர் சமுதாயத்தினரின் அன்பைப் பெற்று அந்த சமுதாத்தினரின் செல்லப்பிள்ளையாகவும் வலம் வருகிறார்.
இவரது தந்தை நிறைகுளத்தான் இராமநாதபுரம் மாவட்டத்தில் அனைத்து சமுதாய மக்களின் அன்பையும் பெற்றிருந்ததால் தான் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவருக்கு மாநிலங்களவையில் இடம் கொடுத்து அழகு பார்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதன் பிறகு தமிழகத்தில் பிளாஸ்மா சிகிச்சை ஆரம்பித்தவுடன் முதல் ஆளாக பிளாஸ்மா தானம் செய்து முத்திரை பதித்தார் .
இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் மணிகண்டன் வகித்த தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் பதவியை தற்போது பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் சதன்பிரபாகருக்கு வழங்க முடிவு செய்துள்ளது அதிமுக.
இவருக்கான பி.ஏக்கள் ,பாதுகாவலர்கள் பட்டியலும் தயாராகி விட்டதாக கோட்டை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. இது சம்பந்தமான விரிவான செய்தியை நாற்காலி செய்தி வரும் 1 ஆம் தேதி இதழில் விரிவாக பார்க்கலாம்.