“எமன் கட்டளை” படத்தின் திரைவிமர்சனம்

செல்லம்மாள் மூவி மேக்கர்ஸ் நிறுவனம் சார்பில் எஸ்.ஏ கார்த்திகேயன் தயாரிப்பில், எஸ். ராஜசேகர் இயக்கத்தில், அன்பு மயில்சாமி, அர்ஜுனன், சந்திரிகா ரேவதி, ஆர். சுந்தர்ராஜன், டி.பி. கஜேந்திரன், நளினி, நெல்லை சிவா உள்ளிட்டோர் நடிப்பில் வெளிவந்துள்ள படம் “எமன் கட்டளை”.
கதைப்படி… அன்பு மயில்சாமி, அர்ஜுனன் ஆகிய இருவரும் சினிமாவில் இயக்குநராக எடுத்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்ததால், ஒரு திருமண மண்டபத்தில் மணமகள் அறையில் வைத்திருந்த நகைகளை திருடிச் செல்கின்றனர். இதனால் அந்தப் பெண்ணின் திருமணம் நின்று போகிறது. பின்னர் செய்த தவறை உணர்ந்து மனம் வருந்தி தற்கொலை செய்து கொள்கிறார் அன்பு மயில்சாமி. இவரது ஆன்மா மேலோகம் சென்றதும், நீ செய்த தவறால் தான் அந்தப் பெண்ணின் திருமணம் நின்றுபோனது. அதனால் நீதான் அந்தப் பெண்ணின் திருமணத்தை நடத்த வேண்டும் என சில கட்டளைகளை வித்து பூலோகத்திற்கு அனுப்புகிறார் எமன்.

மேலோகத்திலிருந்தது பூலோகம் வருகிறார் அன்பு மயில்சாமி. பின்னர் எமனின் கட்டளைப்படி அந்தப் பெண்ணின் திருமணத்தை நடத்த முற்படுகிறார்.
திருமணம் நடந்ததா ? இயக்குநர் ஆகும் அவர்களது லட்சியம் என்னானது என்பது மீதிக்கதை…
படத்தில் அன்பு மயில்சாமி, சந்திரிகா ரேவதி, அர்ஜுனன் ஆகிய மூவரும் தங்களது இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். இயக்குநர் ராஜசேகர் நாடக வடிவில் காமெடி கலந்த திரைக்கதையுடன், கலகலப்பாக கதையை நகர்த்திச் செல்ல முயற்சித்துள்ளார். திரைக்கதையில் இன்னும் கவனம் செலுத்தியிருக்கலாம்.
படத்தில் ஒவ்வொரு கதாப்பாத்திரமும் அனுபவம் வாய்ந்த சார்லி, டி.பி. கஜேந்திரன், நளினி, நெல்லை சிவா, வையாபுரி, டெல்லி கணேஷ், அனு மோகன், சங்கிலி முருகன், கராத்தே ராஜா, ஷகிலா உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். அனைவரும் அவரவருக்கு கொடுக்கப்பட்ட பணிகளைச் சிறப்பாக செய்திருக்கிறார்கள்.