திருக்குறளும், திருவள்ளுவரும் திராவிட இயக்கத்தினருக்கு மட்டுமே சொந்தமா?
திருக்குறளுக்கும் திராவிட இயக்கத்திற்கும் என்ன சம்பந்தம். திருவள்ளுவரின் வரலாற்றை மாற்றி எழுதியதா திராவிட இயக்கம்? திருக்குறளும், திருவள்ளுவரும் திராவிட இயக்கத்தினருக்கு மட்டுமே சொந்தமா? என்பன போன்ற கேள்விகளோடு இன்னும் பல கேள்விகள் திருக்குறள், திருவள்ளுவர் திராவிட இயக்கம் ஆகிய மூன்றை சுற்றியும் எழுப்பப்படுகின்றன. இந்தக் கேள்விகளுக்கெல்லாம் விடைதேடுவதோடு திராவிட இயக்கத்திற்கும் திருக்குறளுக்கும் உள்ள நெருக்கமான தொடர்பை இன்றைய இளைய தலைமுறைக்கு அறிமுகம் செய்து வைக்கும் முயற்சியே இந்தக் கட்டுரை.
திராவிட இயக்கத்திற்கும் திருக்குறளுக்குமான உறவு முறையான வழிகளில் தான் ஆரம்பமானது. ஆம் திருக்குறளுக்கு பரிமேலழகரின் உரையே பொருத்தமானது என்ற கருத்துக்கள் மேலோங்கி எழுந்து ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருந்த காலகட்டத்தில் அந்த உரைக்கு மாற்றாகவே திருக்குறளுக்கான உண்மை விளக்கமாக திராவிட இயக்கத்தினர் திருக்குறளுக்கு உண்மை உரைகளை எழுதத் தொடங்கினர். பரிமேலழகரின் உரை பலராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலையில் அதை மறுத்தோ அல்லது அதற்கு மாற்றாகவோ வேறு உரைகளை திராவிட இயக்கத்தினர் எழுத வேண்டிய அவசியம் எங்கிருந்து எழுந்தது என்ற கேள்வி எழலாம். அதற்கு திராவிட இயக்கத்தினர் கொடுத்த பதில்களில் ஒற்றை வரிச்சாரம் பரிமேலழகர் திருக்குறளை மனுதர்மத்தின் பார்வையில் இருந்து அணுகினார் என்பதுதான். வடமொழி வல்லுனரான பரிமேலழகர் திருக்குறளை வடமொழி இலக்கியமாகவே பார்த்தார். வடமொழி வேதத்தின் பிரதியாகவே அணுகினார். வர்ணாசிரமத்தை வலியுறுத்தும் நூலாகவே அதனை பிரச்சாரம் செய்தார் என்பதே திராவிட இயக்கத்தினரின் விமர்சனம்.
அதனால்தான் வள்ளுவத்தின் வேரை விளக்கம் என்ற வாள் கொண்டு அறுத்தார் பரிமேலழகர் என்றார் மொழி ஞாயிறு தேவநேயப் பாவாணார். அந்த அளவிற்கு பரிமேலழகரை நிராகரித்ததற்கு முக்கியமான காரணம் அறம் என்ற சொல்லுக்கு மனுவே அறம் என்ற பரிமேலழகரின் விளக்கம்தான். அதேபோல் ஆறிருள் என்ற சொல்லுக்கு நரகம் என்று பொருள் என்று சொன்ன பரிமேலழகர் செய்தொழில் என்பதற்கு வண்ணம்தோறும் வேறுபடும் தொழில் என்று விளக்கம் தந்தார். முக்கியமாக மறைமொழி என்ற சொல்லுக்கு மந்திரம் என்று அர்த்தம் சொன்னார். இவையெல்லாமே வைதீக பார்வை என்பது திராவிட இயக்கத்தினரின் கருத்து.
வள்ளுவத்தின் உண்மையை உள்ளது உள்ளபடி சொல்லாமல் வடமொழி சிந்தனையையும் வடநாட்டு பண்பாட்டு கூறுகளையும் வர்ணதர்மத்தையும் திருக்குறளின் மீது வலுக்கட்டாயமாக திணித்திருக்கிறார் பரிமேலழகர் என்ற விமர்சனத்தை முன்வைத்து திராவிட இயக்கத்தினர் வெறுமனே விமர்சனத்தோடு ஒதுங்கவில்லை. மாறாக தங்கள் பார்வையில் இருந்து திருக்குறளுக்கு புதிய உரைகளை எழுதினர். அந்த உரைகள் அனைத்தும் பரிமேலழகரின் உரையிலிருந்து முற்றிலும் மாறுபட்ட வகையில் புதிய கோணத்தில் எழுதப்பட்டன. அந்த வரிசையில் திருக்குறளுக்கு உருவான முதல் திராவிட இயக்க உரையை எழுதியவர் புலவர் குழந்தை. அதற்கு வித்திட்டவர் திருக்குறளை கடுமையாக விமர்சித்தவர் என்று சொல்லப்பட்ட பெரியார் என்பதுதான் இங்கே கவனிக்கத் தக்க அம்சம். பெரியார் புராணங்களை விமர்சித்தார். அவற்றின் தெய்வீகத் தன்மையை ஏற்கவில்லை. இராமாயணம், மகாபாரதத்தை முற்றாக நிராகரித்தார். புராதன இலக்கியங்களில் புரட்டுக்கள் நிறைந்திருப்பதாக சொல்லி அவற்றை நிராகரிக்குமாறு மக்களைக் கேட்டுக் கொண்டார். அந்த வரிசையில் தான் கடவுள், பாவம், புண்ணியம், இம்மை, மறுமை, தேவலோகம், நரகலோகம், பெண்ணடிமை, மன்னராட்சி போன்றவற்றை தூக்கிப்பிடித்த குறள்களையெல்லாம் கடுமையாக விமர்சித்தார் பெரியார். அதேசமயம் பெரியார் திருக்குறளை முற்றும் முழுதாக நிராகரிக்கவில்லை. திருக்குறளின் இன்னபிற முற்போக்கு பகுத்தறிவுச் சிந்தனைகளையெல்லாம் பெரியார் ஆதரிக்கவே செய்தார். குறிப்பாக நாவலர், சோமசுந்தர பாரதியாரின் பேச்சுக்களை பற்றி அறிந்த பிறகு திருக்குறளை பரப்ப வேண்டியதைப் பற்றிய அவசியத்தை தான் உணர்ந்ததாக பெரியாரே பதிவு செய்திருக்கிறார்.
பா.வே. மாணிக்க நாயக்கரும் திருக்குறள் பற்றி பெரியாருடன் உரையாடியவர்களில் முக்கியமானவர். அதன்நீட்சியாகவே திருக்குறள் பற்றிய மாநாடுகள் நடத்திய பெரியார் திருக்குறளுக்கு புதிய உரை எழுத வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். பெரியாரின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையிலேயே திருக்குறளுக்கு உரை எழுதினார் புலவர் குழந்தை. ஆம் இராவண காவியத்தின் வழியாக புகழ் பெற்ற அதே புலவர் குழந்தைதான் திருக்குறளுக்கு முதல் திராவிட இயக்க உரையை எழுதியவர். 1949 ஆம் ஆண்டு நடந்த குறள் மாநாட்டில் பேசிய பெரியார் திருக்குறள் அதிக அளவிலான மக்களுக்கு போய் சேர வேண்டும் என்பது முக்கியம். அதற்கு அதன் உண்மையான விளக்கம் சொல்ல வேண்டியது மிகவும் முக்கியம் என்ற கருத்தை முன்வைத்ததோடு திருக்குறளுக்கு புத்துரைகள் எழுதுமாறு தமிழ் அறிஞர்களுக்கு அழைப்பு விடுத்தார். அதேவேகத்தில் திரு.வி.கல்யாணசுந்தரனார் தலைமையில் திருக்குறளுக்கு உரை எழுதும் குழு ஒன்றையும் அமைத்தார் பெரியார். அந்தக்குழுவில் இடம்பெற்றவர்களில் நாவலர் நெடுஞ்செழியனும் ஒருவர். பெரியார் விடுத்த அழைப்பை தனக்கான அழைப்பாக ஏற்றுக்கொண்ட திருக்குறள் ஆர்வலரான புலவர் குழந்தை தனது நுட்பமான தமிழாற்றலைக் கொண்டு திருக்குறளுக்கு உரை எழுதினார். புலவர் குழந்தை எழுதிய திருக்குறள் உரையின் முக்கியமான அம்சம் வள்ளுவர் பயன்படுத்திய சொற்களுக்கு பரிமேலழகர் கொடுத்த வைதீக பொருட்களுக்கு மாற்றாக பகுத்தறிவுச் சொற்களை பயன்படுத்தியதுதான். திருக்குறளுக்கு மதச்சார்பு உரைகளுக்கு தோற்றுவாய் பரிமேலழகர் உரை என்றால் பகுத்தறிவு உரைகளுக்கான ஆரம்ப புள்ளியை வைத்தது புலவர் குழந்தையின் திருக்குறள் உரைதான். புலவர் குழந்தையைத் தொடர்ந்து புரட்சிக் கவிஞர் பாரதிதாசன், நாவலர் நெடுஞ்செழியன், அறிஞர் கு.ச.ஆனந்தன், கலைஞர் மு.கருணாநிதி உள்ளிட்ட திராவிட இயக்க சிந்தனையாளர்கள் பலரும் வெவ்வேறு காலகட்டத்தில் திருக்குறளுக்கு உரை எழுதினர். குறிப்பாக திருக்குறள் உண்மைப் பொருள் என்ற தலைப்பில் அறிஞர் கு.ச.ஆனந்தன் திருக்குறளுக்கு உரை எழுதினார். 1986 ல் வெளியான அந்த நூலில் அறத்துப்பால், பொருட்பாலுக்கு மட்டும் உரை இடம் பெற்றன. இன்பத்துப்பாலை தவிர்த்து விட்டார் கு.ச.ஆனந்தன். திருக்குறளின் மூன்றாவது திராவிட இயக்க உரையை எழுதியவர் நாவலர் நெடுஞ்செழியன்.
& சூரியன்
தொடரும்…