சொந்த நிலத்தை தானமாக வழங்கி, கால்வாய் அமைத்துக் கொடுத்த “காலிங்கராயன்” வரலாற்றை பேசுகிறதா ? காலிங்க ராயன் படத்தின் திரைவிமர்சனம்

சன் சைன்ஸ் ஸ்டூடியோ நிறுவனம் சார்பில், பாரதி மோகன் தயாரித்து, இயக்கியுள்ள படம் “காலிங்கராயன்”. இப்படத்தில் உதய் கிருஷ்ணா, தென்றல், குஷி, சைலஜா, மருது செழியன், ஆனந்த் பாபு, மீசை ராஜேந்திரன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
கதைப்படி… மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பழங்குடியினர் வசித்துவரும் மலை கிராமத்தில் உள்ள அருவியில், ஒரு பெண் துணிகளை துவைத்துக் கொண்டிருக்கும் போது, துப்பாக்கியால் சுடப்பட்ட நிலையில், ஒரு இளைஞன் தண்ணிக்குள் விழ, அந்தப் பெண் பதறிப்போய் அக்கம்பக்கத்து ஆட்கள் துணையோடு, நாட்டு வைத்தியரிடம் கொண்டு செல்கிறார்கள். வைத்தியர் ஆனந்த் பாபு நாடி பிடித்து பார்த்துவிட்டு, மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு அறிவுறுத்த, பின்னர் போக்குவரத்து வசதியின்மை காரணமாக, அவரே மருத்துவம் பார்த்து உயிரைக் காப்பாற்றுகிறார். ஆனால் நினைவு திரும்ப மூன்று மாதங்கள் ஆகிறது.

அந்த மூன்று மாதங்களும் நேரம் தவறாமல் அவருக்கு சரியான மருந்தை கொடுத்து, அனைத்து பணிவிடைகளையும் செய்து அந்தப் பெண்ணே அக்கறையுடன் பார்த்துக் கொள்கிறார். இந்நிலையில் நினைவு திரும்பிய நிலையில், இவர்கள் இருவரையும் இணைத்து, தவறாக பேசி வருகின்றனர். இதற்கிடையில் மலைப் பகுதிகளில் தீவிரவாத கும்பல் நடமாட்டம் இருப்பதாகவும், குண்டு பாய்ந்த நிலையில் யாராவது வந்தார்களா என காவல்துறையினர் கிராம மக்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
குண்டடிபட்ட நிலையில் உயிர் பிழைத்த அந்த இளைஞர் யார் ? அவரது பின்னணி என்ன ? அவருக்கும் அந்த மலைவாழ் பெண்ணிற்குமான உறவு எத்தகையது என்பது மீதிக்கதை…

எந்தவிதமான எதிர்ப்பும் இல்லாது மனிதாபிமானத்துடன் உதவி செய்யும் மலைவாழ் பழங்குடியின மக்களின் வாழ்வியலோடு, விவசாயம், குடிநீர் தேவைகளுக்காக பழங்குடியின மக்களுக்கு தனது சொந்த நிலத்தை தானமாக வழங்கி, கால்வாய் அமைத்துக் கொடுத்த ஜமீன் காலிங்கராயனின் வரலாற்றை இன்றைய தலைமுறையினர் தெரிந்துகொள்ள வேண்டும் என்கிற கருத்தையும் சொல்லியிருக்கிறார் இயக்குநர்.
மேலும் பழங்குடியினரின் விளைநிலங்களை அபகரிப்பதற்காக அரசியல்வாதிகள் செய்யும் அடாவடிகளையும் தோலுரித்து காட்டியுள்ளார்.
நல்ல கதையோடு கலமிறங்கிய இயக்குநர், திரைக்கதையில் கவணம் செலுத்தி இருக்கலாம்.