குஜிலியம்பாறை பிரதான சாலையில் அடிக்கடி விபத்து ! கண்டுகொள்ளாத அதிகாரிகள் !
திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறையில் பொதுமக்கள் அன்றாட பயன்படுத்தும் பிரதான சாலையில், போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால், அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு உயிர்ப்பலி அதிகரித்துள்ளது. விபத்துக்களை தடுக்கும் வகையில் அந்த சாலையில் வேகத்தடை அமைத்தும், போக்குவரத்து காவலர்களை நியமித்து வாகன நெரிசலைக் கட்டுப்படுத்த வேண்டி அதிகாரிகளுக்கு பலமுறை கோரிக்கை விடுத்தும் எந்த அதிகாரிகளும் கண்டுகொள்ளவில்லை என அப்பகுதியினர் புலம்பி வருகின்றனர்.
குறிப்பாக வட்டாட்சியர் அலுவலகம், வட்டார வளர்ச்சி அலுவலகம், பேரூராட்சி அலுவலகம், காவல்நிலையம் என முக்கியமான நான்கு அலுவலகங்கள் ஒரே இடத்தில் அருகருகே இயங்கி வருகிறது. பொதுமக்கள் அன்றாட தங்களது அத்தியாவசிய தேவைகளுக்காக வந்து செல்லும் முக்கியமான சாலையில், இந்த அலுவலகங்கள் இருப்பதால் சாலையின் இரு புறங்களிலும் ஏராளமான வாகனங்களை நிறுத்தி வைத்துள்ளனர்.

மேலும் நெடுஞ்சாலையில் சென்றால் சுங்கக் கட்டணம் செலுத்த வேண்டும் என்பதற்காக, கனரக வாகனங்கள் உள்ளிட்ட பிற வாகனங்களும், இந்த சாலையின் வழியாக வேகமாக செல்வதால், சாலையை கடக்கும் அப்பாவி பொதுமக்கள் விபத்தில் சிக்கி உயிரிழக்க நேரிடுகிறது. இது சம்பந்தமாக அதிகாரிகள் மத்தியில் பலமுறை கோரிக்கை விடுத்தும் எந்த அதிகாரிகளும் கண்டுகொள்ளவில்லை. ஆகையால் மாவட்ட ஆட்சியர் தலையிட்டு உடனடியாக இப்பகுதியில் வேகத்தடை அமைப்பதோடு, போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்கு மாற்று ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
– கே.எம்.எஸ்