நிறம் மாறிய நிலத்தடி நீர் ! கரையேறுமா கரைப்புதூர் ஊராட்சி ? அச்சத்தில் பொதுமக்கள் !
திருப்பூர் மாவட்டம் பல்லடம் தாலுக்காவில் அமைந்துள்ளத கரைப்புதூர் ஊராட்சியில் லட்சக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர். இந்த ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் மிகப்பெரிய பின்னலாடை மற்றும் சாய சலவை ஆலைகள் இயங்கி வருகிறது. அதிக அளவில் நிறுவனங்கள் இயங்கி வருவதால் அருகில் ஏராளமான குடியிருப்புக்களும் அமைந்துள்ளன. இந்நிலையில் கரைப்புதூர் ஊராட்சிக்குட்பட்ட லட்சுமி நகர் பகுதியை அடுத்துள்ளது அபிராமி நகர். இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக வீடுகளில் உள்ள ஆழ்குழாய் கிணற்றில் இருந்து வரும் குடிநீர் நிறம் மாறி வருவதோடு துற்நாற்றம் வீசுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும் மூன்று வீதிகளை கொண்ட அபிராமி நகர் பகுதியில் வீதி வீதிக்கு கலர் மாறி தண்ணீர் வருவதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். ஒரு வீதியில் உள்ள வீட்டில் சிவப்பு நிறத்திலும், மற்றொரு வீதியில் மஞ்சள் நிறத்திலும், கிணற்றில் கருப்பு நிறத்தில் தண்ணீர் நிறம் மாறி காட்சி அளிக்கிறது.
இது குறித்து அப்பகுதியில் உள்ள சக்திவேல் கூறும்போது.. கடந்த சில நாட்களாக இது போன்று நிலத்தடி நீர், நிறம் மாறி வருவது குறித்து ஊராட்சி நிர்வாகம், மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திடம் புகார் கொடுத்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. நிறம் மாறி வரும் தண்ணீரில் குளித்ததால் தோல் பாதிப்பு ஏற்படுவதாக கூறினார். மேலும் பாச்சாங்காட்டுப்பாளையத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் பூபாலன் கூறும்போது.. அபிராமி நகர் குடியிருப்பு பகுதியில் உள்ள ஆழ்குழாய் கிணற்றில் உள்ள நிலத்தடி நீர் நிறம் மாறி சாய கழிவு நீராக மாறி, பொதுமக்களுக்கு சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது, இது குறித்து மாவட்ட நிர்வாகத்திட்ம் புகார் மனு அளிக்க உள்ளதாகவும், நடவடிக்கை தாமதமானால் பொதுமக்களை திரட்டி ஆர்பாட்டம் நடத்தப்படும் என தெரிவித்தார்.
மேலும் அப்பகுதியில் குடியிருக்கும் பெண்மணி ஆவேசத்துடன் குடத்தை எடுத்து வந்து அருகில் உள்ள நிறுவனத்தில் இருந்து வெளியேறும் கரும்புகையினால் குடம் கருப்பாக நிறம் மாறிவிட்டதாகவும், தாங்கள் குடியிருக்க முடியாத சூழல் உருவாகி உள்ளதாகவும் தெரிவித்தார். மாசுக்கட்டுப்பாடு அதிகரிகள் உடனடியாக போர்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொண்டு பொதுமக்களின் அச்சத்தை போக்கவேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கை.