மாவட்டம்

உடுமலையில் போக்குவரத்து நெரிசல் ! கண்டுகொள்ளாத அதிகாரிகள் !

திருப்பூர் மாவட்டத்தில் உடுமலை நகரம் அதிக மக்கள் தொகை கொண்ட நகரமாகும். இங்கு பல்வேறு தொழில் நிறுவனங்களை உள்ளடக்கிய நகரம் என்பதால் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் இப்பகுதிக்கு வந்து செல்கின்றனர். குறிப்பாக உடுமலை மத்திய பேருந்து நிலையத்தின் இருபுறங்களிலும் உள்ள பழனி – பொள்ளாச்சி தேசிய நெடுஞ்சாலை பகுதியில் அதிகமான கனரக வாகனங்கள், இலகுரக வாகனங்கள், கார் மற்றும் இருசக்கர வாகனங்கள் அதிகளவில் இந்த சாலையில் சென்று வருகிறது.

உடுமலை நகரத்திலிருந்து பழனி, பொள்ளாச்சி, கோவை போன்ற பிற பகுதிகளுக்கு வேலைக்குச் செல்லும் நபர்கள் தங்களது இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களை உடுமலை மத்திய பேருந்து நிறுத்தத்திற்கு முன்பாக நிறுத்திவிட்டுச் சென்று விடுவதால், அப்பகுதியில் வாகன நெரிசல் ஏற்படுகிறது. மேலும் மத்திய பேருந்து நிலையம் எதிரில் உள்ள UKP காம்ப்ளக்ஸ் என்ற தனியாருக்கு சொந்தமான வளாகத்தில் ஏராளமான கடைகள் இயங்கி வருகிறது. இங்குள்ள கடைகளுக்கு பொருட்கள் வாங்க வரும் பொதுமக்களும் தங்களது இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் வருவதால் இந்த இடத்தில் எப்போதுமே வாகன நெரிசலுக்கு உள்ளாகின்றன.

உடுமலை நகரத்தில் எப்போதும் பரபரப்பாக இயங்கும் இந்த இடத்தில் நகராட்சி நிர்வாகம் சரியான கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும். அத்துடன் போக்குவரத்து காவல்துறையினர் கூடுதலாக கண்காணிப்பு பணிகளில் ஈடுபட வேண்டும்.  கடைகளில் பொருட்கள் வாங்க வரும் பொதுமக்கள் வாகனங்களை நிறுத்துவது மட்டுமல்லாமல், வெளியூர் செல்லும் நபர்கள் வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் உரிய கட்டணம் செலுத்தி வாகனத்தை நிறுத்தாமல், சாலையோரத்தில் நிறுத்தி செல்வதால் பல்வேறு இடையூறுகள் ஏற்படுவதாக பலரும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

மேலும் கடந்த சில வருடங்களுக்கு முன் இதே இடத்தில் சாதி மறுப்பு திருமணம் செய்த காரணத்திற்காக வாகனங்களை நிறுத்தி விட்டு கொலை சம்பவம் ஏற்பட்ட இடம் என்பதை காவல்துறையும், நகராட்சி நிர்வாகமும் எளிதில் மறந்திருக்க மாட்டார்கள்.  இதுபோன்ற பிரச்சனைகளுக்கு உட்பட்ட இடங்களை எப்போதும் காவல்துறை தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button