பல்லடம் அருகே… ஆறு மணிக்கு அதிரவைக்கும் வெடிச்சத்தம் ! அதிர்ச்சியில் பொதுமக்கள்..!

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே மாலை சுமார் ஆறு மணியானதும் அலாரம் வைத்தது போல், தொடர்ச்சியாக, சிறிது இடைவெளி விட்டு அதிர வைக்கும் வெடிச்சத்தம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பல்லடத்தை அடுத்துள்ள செம்மிபாளையம் ஊராட்சிக்குட்பட்ட குப்புசாமிநாயுடுபுரத்தில் பிரபல நூற்பாலை அமைந்துள்ளது. மேலும் இங்கு சுமார் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் குடியிருந்து வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த சில தினங்களாக மாலை சுமார் ஆறு மணி ஆனதும் மேற்கு பகுதியில் சூரியன் மறைந்த பிறகு ரம்மியமாக காணப்படும். மாலை வேளைகளில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பறவைகள் மேற்கு நோக்கி அணி வகுத்து பறப்பதும், காலையில் கிழக்கு நோக்கி பறவைகள் பறப்பதும் காண்போரின் கண்ணுக்கு விருந்தாக அமையும். இதனிடையே திடீரென மாலை பயங்கர சத்தத்துடன் மேற்கு பகுதியில் உள்ள தோப்பில் வெடிக்கும் சத்தம் பொதுமக்களை அதிர வைத்துள்ளது. மேலும் தொடர்ச்சியாக வெடிசத்தம் கேட்பதால் மாலை நேரம் கூடு தேடி வரும் பறவைகள் ஆயிரக்கணக்கில் அலறிய படி கூட்டம் கூட்டமாக வானில் வட்டமடிக்கிறது.

மேலும் அதிக சத்தத்துடன் கூடிய வெடிகள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டிருக்கும் நிலையில், இது போன்ற விஷமிகளின் செயல் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. அருகில் உள்ள கோடங்கிபாளையத்தின் கல்குவாரி வெடிச்சத்தம் கட்டுப்படுத்தப்பட்ட நிலையில் மர்ம வெடிச்சத்தம் குறித்து காவல்துறை விசாரணை மேற்கொண்டால் மட்டுமே வெடியின் வீரியத்தை தவிர்க்க முடியும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது..