“போலி பட்டா வழங்கும் அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்ய வேண்டும்” : தலைமைச் செயலாளருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
நெல்லையை சேர்ந்த சண்முகவேல் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல மனுவினை தாக்கல் செய்திருந்தார். அதில், “எனது சகோதரர் நெல்லையில் 2007-ல் ஒரு வீடு மற்றும் ரைஸ் மில் விலைக்கு வாங்கி பத்திரப் பதிவு செய்தார். எனது சகோதரர் மும்பையில் இருந்ததால் எனது பொறுப்பில் சொத்துக்கள் இருந்தன.
இந்நிலையில் எனது சொத்துகளின் பத்திரம் மற்றும் பட்டாவை அரசு அதிகாரிகள் வேறு ஒருவருக்கு மாற்றி சட்டவிரோதமாக பத்திரப்பதிவு செய்து பட்டா பெற்றுள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்யபட்டுள்ளது. எனது சொத்துக்களுக்கான ஆவணங்களை போலியாக தயாரித்து பட்டா மாற்றம் செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்“ என அந்த மனுவில் கூறியிருந்தார்.
இதேபோல் வள்ளியூர் பகுதியிலிருந்த எனது சகோதரர் சொத்துக்களை போலியாக பட்டா தயாரித்து விற்பனை செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என நெல்லையை சேர்ந்த ரவிக்குமார் என்பவரும் மனுதாக்கல் செய்திருந்தார்.
இந்த இரு மனுக்களையும் விசாரித்த நீதிபதி மகாதேவன், “மனுதாரர்களின் புகார் மனுக்கள் குறித்து மாவட்ட ஆட்சியர் ஆறு வாரத்திற்குள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பட்டா தொடர்பாக புகார் கிடைக்கபெற்றால் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரிப்பதில்லை. இதனால் பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
இனிவரும் காலங்களில் போலி பட்டா தொடர்பாக புகார் அளித்தால் வருவாய்துறை அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு நடத்தி உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும். போலி பட்டா தொடர்பாக அதிகாரிகள் மீது புகார் வந்தால் உடனடியாக துறைரீதியான நடவடிக்கை எடுத்து சஸ்பெண்ட் செய்ய வேண்டும் எனத் தலைமைச் செயலர் அந்தந்த மாவட்ட ஆட்சியர்களுக்கு சுற்றறிக்கை அனுப்ப வேண்டும்” என்று தெரிவித்தார். மேலும் போலி பட்டா புகார்கள் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஜூலை 3 ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கினை ஒத்திவைத்தார்.