திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் ஒன்றியத்திற்கு உட்பட்ட காரத்தொழுவு, துங்காவி ஆகிய இரண்டு ஊராட்சி நிர்வாகத்தை நிர்வகித்த உள்ளாட்சி பிரதிநிதிகள் தங்களது பதவிக்காலத்தில், சாக்கடை கழிவுநீரை முறையாக கொண்டு செல்ல வழிவகை செய்யப்படாமல் இருந்துள்ளனர்.
இது சம்பந்தமாக அப்பகுதியினர் கூறுகையில்.. துங்காவி ஊராட்சிக்கு உட்பட்ட உடையார்பாளையம் பகுதியிலுள்ள மக்கள் பயன்படுத்தும் சாக்கடை கழிவுநீரை வெளியேற்ற, காரத்தொழுவு ஊராட்சிக்கு உட்பட்ட எல்லையிலுள்ள சாக்கடை கழிவுநீர் கால்வாயில் இணைப்பதற்கு சம்பந்தப்பட்ட நிர்வாகம் அனுமதிக்காத நிலையில், சம்பந்தப்பட்ட துங்காவி ஊராட்சி நிர்வாகமும் அதனை சரிசெய்வதில் அக்கறை காட்டவில்லை.
துங்காவி ஊராட்சிமன்ற தலைவரான உமாதேவி காளீஸ்வரன் தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு, ஊராட்சிக்குட்பட்ட எந்த பகுதிக்கும் வரவில்லை. ஊராட்சிமன்ற தலைவரின் அனைத்து பணிகளையும், அவரது கணவர் அதிமுகவை சேர்ந்த காளீஸ்வரனே கவனித்து வந்துள்ளார். அதிலும் ஊராட்சியில் எவ்வளவோ அடிப்படை பிரச்சனைகள் இருந்தபோதிலும், தனக்கு வருமானம் உள்ள வேலைகளை மட்டும் செய்து முடித்துள்ளார். குறிப்பாக கான்கிரீட் பணிகள், குழாய் அமைப்பது, ரியல் எஸ்டேட் பிளாட் அப்ரூவல் வழங்குவது, சிறு, குறு தொழில் செய்பவர்களுக்கு ரசீது வழங்குவது என பணம் கிடைப்பதில் மட்டும் கவனம் செலுத்தியதோடு, கடந்தகாலத்தில் சொல்லும்படியான மக்கள் பணிகள் எதுவும் செய்யவில்லை என்பதே நிதர்சனம் என்கிறார்கள் அப்பகுதியினர்.
துங்காவி ஊராட்சிக்கும், காரத்தொழுவு ஊராட்சிக்கும் இடையிலான எல்லை பகுதியில் சாக்கடை கழிவுநீரை அப்புறப்படுத்துவதில் சிக்கல் உள்ளதாக, ஏற்றுக்கொள்ள முடியாத காரணங்களை கூறினாலும், அதில் பெரிய அளவில் அரசியல் காழ்ப்புணர்ச்சி இருப்பதை பலரும் அறிந்துள்ளனர். அந்த பகுதியில்
சாக்கடை கழிவுநீர் தெருவை ஆக்கிரமித்துள்ளதால், நடந்து செல்லும் பொதுமக்கள் முதல் அப்பகுதி வாசிகள் என தொற்றுநோய் ஏற்படும் என அச்சத்தில் உள்ளனர். இந்தப் பிரச்சினை சம்பந்தமாக பலமுறை இரண்டு ஊராட்சி நிர்வாகத்திடமும், முறையிட்டும் அவர்கள் அதை காதில் கூட வாங்கவில்லை என்கின்றனர்.
துங்காவி ஊராட்சி செயலர் இளங்கோவன் நிதானமாக அலுவலகம் வருவதே பெரும்பாடாக உள்ளது. காரத்தொழுவு ஊராட்சி செயலர் தினேஷ் பெரும்பாலான அலுவலக நாட்களில் அலுவலகம் வருவதே இவ்லை. எப்போது தொடர்பு கொண்டாலும் வெளியில் இருப்பதாகவே பதிலளிப்பார். இந்த இரண்டு ஊராட்சி செயலாளர்களா மக்களின் பிரச்சினைகளை அதிகாரிகளின் கவனத்திற்கு எடுத்துச் சென்று தீர்க்கப்போகிறார்கள் ?
தெருவில் தேங்கிய சாக்கடை கழிவுநீர் தற்போது நாட்டுக்கல்பாளையம் தார்சாலையில் கழிவுநீர் தேங்குவதால், வாகன ஓட்டிகள் முதல் பலர் பாதிக்கப்படுகின்றனர். இது சம்பந்தமாக அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து முழுமையான தீர்வு காண வேண்டும் என்பதே அப்பகுதியினரின் கோரிக்கையாக உள்ளது.