அரசியல்

எந்த காலத்திலும் தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொள்ள மாட்டோம்… : அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உறுதி

மதுரையில் அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்ற விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி, வீட்டுமனை பட்டா, புதிய ரேஷன் கார்டு, மகளிர் சுய உதவிக் குழு கடன் 292.14 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் மூர்த்தி, பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், மதுரை எம்.பி., சு.வெங்கடேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நலத்திட்ட உதவிகளை வழங்குவதற்கு முன்னதாக பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “இந்தியாவிலேயே உயர்கல்வியில் சிறந்த மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. அரசு பள்ளியில் பயின்ற மாணவர்கள் தான் உயர்கல்வியில் முதல் இடத்தைப் பிடித்து வருகின்றனர். அரசுப்பள்ளியில் படித்த மாணவர்கள் ஐஐடி, என்ஐடி, ஐஐஎம் போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் சேர்ந்து படிக்கின்றனர். தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் படித்த ஏராளமானோர் உலகின் முன்னணி நிறுவனங்களில் பணியாற்றுகின்றனர்.

திமுக அரசின் பல்வேறு மகளிர் நலன் திட்டங்களால் தமிழ்நாட்டில் பெண்கள் தலை நிமிர்ந்து நிற்கிறார்கள். மகளிர் சிரமப்படக்கூடாது, குழந்தைகள் பசியோடு பள்ளிக்கு வரக்கூடாது என்பதற்கே காலை உணவுத் திட்டம். மகளிர் இலவச பயண திட்டத்தின் கீழ் தமிழ்நாடு முழுவதும் 520 கோடி ரூபாய் மதிப்பில் பயணங்களை பெண்கள் மேற்கொண்டுள்ளனர்.

மதுரையில் மட்டுமே ரூ.21 கோடி மதிப்பில் இலவச பயணங்களை பெண்கள் மேற்கொண்டுள்ள்ளனர். காலை உணவுத் திட்டத்தை அரசுப் பள்ளியில் மட்டுமின்றி அரசு உதவிப்பெறும் பள்ளிகளுக்கும் நீட்டித்துள்ளார் முதல்வர். காலை உணவுத் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு நாளும் சுமார் 20 லட்சம் குழந்தைகள் தமிழ்நாட்டில் பயனடைந்து வருகின்றனர். மதுரையில் மட்டும் தினந்தோறும் 80,000 பள்ளி குழந்தைகள் காலை உணவுத் திட்டத்தில் பயன்பெற்று வருகின்றனர். புதுமைப் பெண், தமிழ் புதல்வன் திட்டத்தின் மூலம் மாதம் 7 லட்சம் மாணவ, மாணவிகள் பயன்பெற்று வருகின்றனர். மதுரையில் மட்டும் 15,000 மாணவ, மாணவிகள் புதுமைப் பெண், தமிழ் புதல்வன் திட்டத்தில் பயன்பெற்று வருகின்றனர். கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் ஓராண்டில் 1.18 கோடி பெண்கள் பயன்பெற்று வருகின்றனர். மதுரையில் மட்டும் 4.62 லட்சம் பெண்கள் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் பயன்பெற்றுள்ளனர்” என்றார்.

அதனைத் தொடர்ந்து, மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற அனைத்து துறை சார்ந்த அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தினார்.

அதில் துறை சார்ந்த அதிகாரிகளிடம், தமிழக அரசின் திட்டங்களை மக்களிடையே கொண்டு சேர்ப்பது மற்றும் பிற துறைகளில் உள்ள குறைபாடுகளை கேட்டு அவற்றை நிவர்த்தி செய்வதற்கான ஆலோசனைகளை வழங்கினார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த உதயநிதி ஸ்டாலின், “முதல்வரின் அறிவுறுத்தலின் பேரில் மதுரை மாவட்டத்திற்கு வருகை தந்து மாவட்டத்தினுடைய சிறப்பு திட்ட செயலாக்க துறை மூலம் பொது மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கினோம். தற்போது பல்வேறு அரசு அதிகாரிகளுடன் திட்டம் குறித்து ஆய்வு நடத்தினோம். கடந்த முறை திட்டங்கள் குறித்து செப்டம்பரில் ஆய்வு நடத்தியது தொடர்ந்து தற்போது ஆட்சியர் அலுவலகத்தில் கடந்தாண்டு செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் எந்த அளவு நடைபெற்று வருகிறது.? எவ்வளவு பணிகள் முடிவுற்றது.? எந்தெந்த பணிகளில் சுணக்கம் உள்ளது குறித்து அதிகாரிகளிடம் கேட்டு அறிந்தோம். அதிகாரிகள் சிறப்பாக செயல்பட்டு இருக்கிறார்கள்” என்றார்.

மேலும், உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களுக்கு பதிலளித்து பேசுகையில், எடப்பாடியின் வெள்ளை அறிக்கைக்கு தமிழக முதல்வர் ஏற்கனவே பதிலளித்திருக்கிறார். திருப்பி திருப்பி அதையே கேட்டால் என்ன செய்வது? மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் முதல்வருக்கு கோரிக்கை வைத்தது குறித்த கேள்விக்கு? அதை எப்போதும் ஏற்றுக் கொள்ள மாட்டோம். இது குறித்து முதல்வர் அதற்கு பதில் அளித்து விட்டார். எந்த காலத்திலும் தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்றார்.

– நமது நிருபர்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button