சட்டவிரோதமாக ஊடுருவிய 27 வங்க தேசத்தினர் கைது ! போலி ஆவணங்களை கைப்பற்றி தீவிர விசாரணை !
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த கரைப்புதூர் ஊராட்சிக்குட்பட்ட அருள்புரம் பகுதியில் இயங்கி வருகிறது பிரபலமான பி டெக்ஸ் பனியன் நிறுவனம். இந்நிறுவனத்தில் சட்டவிரோதமாக வங்க தேசத்தை சேர்ந்தவர்கள் ஏராளமானோர் பணி அமர்த்தப்பட்டிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. தகவலை அடுத்து அதிரடியாக பி டெக்ஸ் நிறுவனத்திற்குள் சென்று சோதனையிட்டதில் 27 வங்க தேசத்தினர் பணியில் இருந்தது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து அனைவரையும் பல்லடம் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்ததில் வங்க தேசத்தின் போக்ரா மாவட்டத்தை சேர்ந்த சலீம் (26), ரிடோய் (23), ரிமோன்(21), ஜைருல் அலி (30), ஆசிக் ஹசன்(20), அஸ்ரபுல்(26), பிலால் அலி (32), கரீம் சோடார் (31), ரப்பி(21), முகமது குத்தூஸ் (40), முகமது அபில் (22), முகமது ராணா (24), முகமது பரூக் (27), முகமது ஜோனாப் அலி (20), முகமது பிரோஸ் (21), முகமது சல்மான் (28), சோபில்குல் ரோனி (24), சலீம் (26), அகிகுல் இஸ்லாம் (26), மோமின் (22), முகமது ஜெல்ஹக் (23), ரோஜாப் அலி (26), பிபுல் (25), சைதி ஹசன் (23), ரோஹப் (26), முகமது சோபுஜ் (24), முகமது ஹசதுல் (26) ஆகிய 27 பேர் இந்தியாவிற்குள் ஊடுருவி பின்னர் நீண்ட நாட்களாக போலி ஆவணங்கள் மூலம் பி டெக்ஸ் நிறுவனத்தில் சேர்ந்து தொழிலாளர்களாக வேலை செய்ததும் தெரிய வந்தது. பின்னர் அனைவரையும் கைது செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேபோல் திருப்பூர் முருகம்பாளையத்தில் வங்க தேசத்தை சேர்ந்த முகமது சோபுஜ் (34), அயூப் (35) ஆகிய இருவர் ராயல் கிளாசிக் நிறுவனம் மோகன் காம்ப்ளக்சில் பணியில் இருந்தபோது கைது செய்து வீரபாண்டி காவல் நிலையம் அழைத்துச்சென்றனர். போலீசாரின் அதிரடி சோதனையில் ஒரே நேரத்தில் வங்க தேசத்தினர் 29 பேர் கைது செய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் நிறுவனங்கள் எச்சரிக்கையுடன் செயல்படாமல் அவர்கள் அளிக்கும் போலி ஆவணங்களை சரிபார்க்காமல் பணி அமர்த்துவது தேசத்தின் பாதுகாப்பிற்கே அச்சுறுத்தலை ஏற்படுத்தும். எனவே வெளி மாநில தொழிலாளர்களின் ஆவணங்களை சரிபார்க்க வருவாய்துறை அதிகாரிகளை ஒன்றினைத்து ஆன்லைன் மூலமாக ஆவணங்களை சரிபார்க்கவேண்டும். அவ்வாறு மேற்கொண்டால் போலி ஆவணங்களை எளிதாக அடையாளம் கண்டு நடவடிக்கை எடுக்க முடியும்.