சட்டவிரோத குடிநீர் ஆலைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க, தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு..!
சட்ட விரோதமாக இயங்கும் குடிநீர் ஆலைகள் மீது கடும் நடவடிக்கை எடுத்து, அது தொடர்பான அறிக்கை நான்கு வாரங்களில் தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சட்டவிரோதமாக நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை, கடந்த மார்ச்சில் விசாரித்த நீதிபதி வினீத் கோத்தாரி அமர்வு, கொரோனா பேரிடரை கருத்தில் கொண்டு உரிமம் கோரி விண்ணப்பித்துள்ள அனைத்து குடிநீர் ஆலைகளும் தற்காலிகமாக இயங்க அனுமதி அளித்திருந்தது.
அதேசமயம், உற்பத்தி செய்யும் தண்ணீரில் 15 சதவீதத்தை ஏழைகளுக்கு உதவும் வகையில் அரசுக்கு வழங்க நீதிபதிகள் நிபந்தனை விதித்திருந்தனர்.
தற்போதைய விசாரணையின் போது, இந்த உத்தரவை செயல்படுத்தாத 367 நிறுவனங்களை உடனடியாக மூட உத்தரவிடலாம் என நீதிபதிகள் கூறினர்.
சென்னையில் மட்டும் விதிகளை மீறி அதிகளவில் தண்ணீர் எடுத்து வரும் 40 நிறுவனங்களின் பட்டியலை மனுதாரர் தரப்பு தாக்கல் செய்தது.
அப்போது உரிமம் பெறாமலும் புதுப்பிக்காமலும் இயங்கி வந்த தண்ணீர் நிறுவனங்களுக்கு கடந்த மார்ச் மாதம் வழங்கிய சலுகையை திரும்ப பெற்று கொள்வதாக தெரிவித்த நீதிபதிகள், நிலத்தில் இருந்து எடுக்கப்படும் தண்ணீரை கணக்கிடும் கருவிகள் பொருத்த கட்டணம் தொடர்பாக கொள்கை முடிவு எடுக்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.