தமிழகம்

போலி ஆவணங்கள் மூலம் நிலங்கள் அபகரிப்பு… : காவல்துறை நடவடிக்கையால் பரபரப்பு..!

திருச்சி மாவட்ட போலீஸாருக்கு பொதுமக்களிடமிருந்து போலி ஆவணம் தயாரித்து நிலங்களை அபகரித்து உள்ளதாக வந்த புகாரை தொடர்ந்து, திருச்சி மாவட்ட எஸ்.பி வருண்குமார், புதுக்கோட்டை எஸ்.பி, திருச்சி மாநகர ஆணையர் ஆகியோர் இணைந்து, ‘ஆபரேஷன் அகழி’ என்ற பெயரில் கட்டப்பஞ்சாயத்து செய்து சொத்துகளை அபகரிக்கும் நபர்களை மடக்கி வருகிறார்கள். அந்த வகையில், திருச்சி மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் ஆபரேஷன் அகழி என்ற பெயரில் போலீஸார் அதிரடி சோதனை நடத்தி ஆவணங்களை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக, திருச்சி மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாருக்கு வந்த தகவலின் அடிப்படையில் நில மோசடி தொடர்பாக திருச்சி அரியமங்கலம், பால்பண்ணை அருகில் உள்ள லட்சுமிபுரம் இரண்டாவது தெருவைச் சேர்ந்த மோகன் பட்டேல் என்பவரின் வீட்டில் திருச்சி மாநகர போலீஸார் சோதனை மேற்கொள்ள சென்றுள்ளனர்.

அப்போது, வீட்டில் உள்ளவர்கள் போலீஸாரை சோதனை செய்ய அனுமதிக்கவில்லை. இரவு நேரம் என்பதால் போலீஸார் வீட்டின் உள்ளே செல்லாமல் மீண்டும் காலையில் சோதனை மேற்கொள்ள திட்டமிட்டனர். இதனை தொடர்ந்து அன்றைய தினம் இரவு முழுவதும் வீட்டை சுற்றி போலீஸார் காவல் பணிக்கு அமர்த்தப்பட்டனர். இந்த நிலையில் மறுநாள் 12 மணி நேரம் காத்திருந்தும் திறக்கப்படாததால், அன்றும் காத்திருந்தனர். பின்னர் போலீஸார் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்நிலையில், திருச்சி மாவட்ட குற்றப்பிரிவு டி.எஸ்.பி பழனி தலைமையிலான போலீஸார் நீதிமன்ற ஆணை பெற்று மோகன் பட்டேல் வீட்டில் சோதனை நடத்தச் சென்றனர்.

அப்போது, வீட்டின் வெளி கேட் பூட்டப்பட்டிருந்தது. வீட்டினுள் இருந்த நபர்கள் கதவைத் தட்டி நீண்ட நேரம் ஆகியும் திறக்காததால், கிராம நிர்வாக அலுவலர் பாலாம்பிகா முன்னிலையில் போலீஸார் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து சோதனை நடத்தினர். மதியம் இரண்டு முப்பது மணிக்கு ஆரம்பித்த சோதனை தொடர்ந்து 7 மணி நேரமாக நடைபெற்றது. மேலும், மோகன் பட்டேலின் வீட்டில் உள்ள அலுவலகத்தில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களை போலீஸார் கணக்கெடுத்து பதிவு செய்து அவரின் மகள் பூர்ணிமா பட்டேலிடம் கையெழுத்திடுமாறு கேட்டுக்கொண்டனர். அதற்கு, அவர் மறுத்ததாக கூறப்படுகிறது. மேலும், அங்கு கைப்பற்றப்பட்ட ஆவணங்களை போலீஸார் பாதுகாப்புடன் எடுத்துச் சென்றனர். மேலும், வீட்டில் உள்ள லாக்கரை திறக்க போலீஸார் வலியுறுத்தியபோது, வீட்டில் உள்ளவர்கள் தங்களிடம் சாவி இல்லை எனக்கோரி திறக்க மறுத்ததாகச் சொல்லப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, போலீஸார் சுமார் 500 கிலோ எடை கொண்ட லாக்கரை அங்கிருந்து தகர்த்து நீண்ட போராட்டத்திற்குப் பிறகு வெளியே தூக்கி வந்தனர். பின்னர், கிராம நிர்வாக அலுவலர் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டது. இதனிடையே நள்ளிரவு 12 மணி கடந்ததை தொடர்ந்து மோகன் பட்டேலின் மகள் பூர்ணிமா பட்டேல் லாக்கரை எடுத்துச் செல்ல அனுமதிக்க முடியாது என போலீஸாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரப்பரப்பு நிலவியது. தொடர்ந்து, காவல் துறைக்கு சொந்தமான மீட்பு வாகனம் (கிரேன்) உதவியுடன் லாக்கரை தூக்கி காவல் வாகனத்தில் வைத்து அனுப்பி வைத்தனர். இந்த லாக்கர் நீதிபதி முன் திறக்கப்பட்டு அதில் உள்ள ஆவணங்கள் கைப்பற்றப்படும் என்று சோதனையில் ஈடுப்பட்ட போலீஸார் தெரிவித்துள்ளனர். சாவி இல்லை என்று லாக்கரை திறக்க மறுத்ததால் போலீஸார் அந்த லாக்கரை கிரேன் மூலம் தூக்கிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button