தமிழகம்

கட்டண கொள்ளையில் தனியார் பள்ளிகள்

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் சுமார் இருபதுக்கும் மேற்பட்ட தனியார் மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயங்கி வருகிறது. இந்தப் பள்ளிகளில் அரசு நிர்ணயித்த கல்விக் கட்டணத்தை விட பல மடங்கு அதிகமாக மாணவர்களின் பெற்றோர்களிடம் வசூல் செய்து கல்விக் கட்டணக் கொள்ளையில் தனியார் பள்ளிகள் ஈடுபடுவதாக புகார்கள் குவிந்த வண்ணம் உள்ளது.

இதுகுறித்து அப்பகுதியில் உள்ள பொதுமக்களும் பெற்றோர்களம் நம்மிடம் கூறுகையில்..

இந்தப் பகுதியில் இருபதுக்கும் அதிகமான தனியார் பள்ளிகள் இயங்கி வருவதால் பெரும்பாலான பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை அரசுப்பள்ளியில் சேர்ப்பதை தவிர்த்து தனியார் பள்ளிகளில் தங்கள் குழந்தைகளை படிக்க வைப்பதையே கௌரவமாக கருதுகிறார்கள். அரசுப் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகள் கலர் கலராக பள்ளிச் சீருடையிலும், தங்கள் குழந்தைகள் ஆங்கிலம் பேச வேண்டும் என்ற மோகத்தாலும் தங்களது குழந்தைகளை தனியார் பள்ளிகளில் சேர்க்க விரும்புகிறார்கள். சிதம்பரத்தை சுற்றியுளள ஏராளமான கிராமங்களில் பெரும்பாலும் விவசாயத்தை மட்டுமே நம்பி வாழும் பெற்றோர்கள் நாம் பட்ட கஷ்டம் போதும் நமது குழந்தைகளாவது நன்றாக படித்து உயர்பதவிக்கு வரவேண்டும் என்ற கனவுடன் தங்களது குழந்தைகளை அரசுப் பள்ளியில் சேர்ப்பதை தவிர்த்து தனியார் பள்ளிகளில் சேர்க்கிறார்கள்.

இவ்வாறு தங்களது குழந்தைகளின் எதிர்காலம் கருதி தனியார் பள்ளிகளில் சேர்க்கும் பெற்றோர்களின் இன்றைய நிலையை பார்க்கும்போது பரிதாபமாகவே இருக்கிறது.

எல்கேஜி முதல் பனிரெண்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களிடம் ஐந்தாயிரம் முதல் எண்பதாயிரம் ரூபாய் வரை கல்விக் கட்டணமாக வசூலிக்கிறார்கள். தாங்கள் வசூல் செய்யும் பணத்திற்கு முறையான ரசீது பெரும்பாலான பள்ளிகள் கொடுப்பது இல்லை. குழந்தைகளுக்குத் தேவையான அடிப்படை வசதிகளையும் செய்து கொடுக்க வில்லை. இங்கு படிக்கும் குழந்தைகள் விளையாடத் தேவையான இடவசதியும் இல்லை. மாணவர்களின் உடல் ஆரோக்கியத்தை வலுப்படுத்தும் வகையில், வருடந்தோறும் விளையாட்டுதுறைக்கு தனியாக தமிழக அரசு பணம் ஒதுக்குகிறது. ஆனால் விளையாட இடமே இல்லாத போது விளையாட்டுத்துறை ஒதுக்கும் பணம் எவ்வாறு பயன்படுத்தப் படுகிறது என்பது தெரியவில்லை.

தனியார் பள்ளிகள் துவங்குவதற்கு குறிப்பிட்ட அளவு இடவசதி இருந்தால் மட்டுமே அங்கீகாரம் வழங்கப்பட வேண்டும் என்ற விதி இருந்தும் அதிகாரிகள் தங்களின் வசதியை மட்டுமே பெருக்கிக் கொண்டு அரசின் விதிமுறைகளை பின்பற்றாமல் அங்கீகாரம் வழங்கி விடுகிறார்கள். அதேபோல் குறிப்பிட்ட கால வரையறைக்குள் அதிகாரிகள் பள்ளிகளை ஆய்வு செய்து மாணவர்களின் கல்வித்தரத்தையும், ஆசிரியர்களின் நடவடிக்கைகளையும் உயர்அதிகாரிளிடம் அறிக்கைகளாக தரவேண்டும். ஆனால் ஆய்வு செய்ய வரும் அதிகாரிகள் ஆய்வுப் பணியை மேற்கொள்ளாமல் தனியார் பள்ளி உரிமையாளர்களை தனியாக பார்த்து அவர்கள் கொடுக்கும் அறிக்கைகளையே அதிகாரிகளிடம் வழங்குகிறார்கள்.

பெரும்பாலான பள்ளிகளில் முறையான பயிற்சி இல்லாத நபர்களையே குறைந்த சம்பளத்தில் பணியில் சேர்த்திருக்கிறார்கள். இதனால் மாணவர்களின் எதிர்காலம் தான் பாதிக்கப்படுகிறதே தவிர தனியார் பள்ளிகளுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை. கல்வித்துறை அதிகாரிகள் சிதம்பரம் பகுதிகளில் இயங்கும் தனியார் பள்ளிகளில் முறையான அனுமதி பெற்றுத்தான் பள்ளிகள் இயங்குகிறதா? என்பதை சோதனையிட வேண்டும். அதேபோல் தமிழக அரசின் இலவச கட்டாய கல்வித் திட்டத்தை தனியார் பள்ளிகள் கடைபிடிக்கிறார்களா? அல்லது அதற்கும் பணத்தை வாங்கிக் கொண்டுதான் இடம் ஒதுக்குகிறார்களா? என்பதையும் சோதனை செய்ய வேண்டும் என்பதே பெரும்பாலான பெற்றோர்களின் கோரிக்கையாக இருக்கிறது. இனிமேலாவது அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

& அருள்ராஜ்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button