அரசு வேலை வாங்கித் தருவதாக பணம் வசூலித்த பேரூராட்சி தலைவி !

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு வட்டாரத்தில் உள்ள கயத்தாறு பேரூராட்சியில், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு பிரச்சாரம் மற்றும் கொசு மருந்து தெளித்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள, பேரூராட்சியின் தலைவர் சுப்புலட்சுமி தலைமையிலான நிர்வாகம் தற்காலிக ஊழியர்களாக மூன்று பெண்களை நியமனம் செய்துள்ளது. சந்தனமாரி, அகிலா, நந்தினி உள்ளிட்ட ஊழியர்களை நிரந்தர ஊழியர்களாக நியமனம் செய்வதாகக் கூறி பேரூராட்சி தலைவர் பணம் வாங்கிக்கொண்டு ஏமாற்றி வருவதாக சமூக வலைதளங்களில் வெளியான ஆடியோ அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுசம்பந்தமாக விசாரித்தபோது, தற்காலிக ஊழியராக பணிபுரியும் சந்தனமாரி என்கிற பெண்ணிடம், நீ நான்கு பிள்ளைகளை வைத்துக்கொண்டு ஏன் கஷ்டப்படுகிறாய், ஒரு லட்ச ரூபாய் கொடு நான் இந்த வேலையை நிரந்தரமாக்குகிறேன் என பேரூராட்சி தலைவர் சுப்புலட்சுமி கூறியுள்ளார். பின்னர் சந்தனமாரி ஒரு லட்சம் பணத்தை சுப்புலட்சுமியிடம் கொடுத்துள்ளார். அப்போது இந்தப் பணம் எனக்கு இல்லம்மா, அமைச்சர் கீதா ஜீவன் அக்காவிற்கு கொடுக்க வேண்டும். இந்த ஆட்சி இருக்கும்வரை இந்த வேலை உனக்கு நிச்சயம், பின்னர் எனது மாமனார் சின்ன பாண்டி ( திமுக கயத்தாறு கிழக்கு ஒன்றிய செயலாளர் ) மூலமாக நிரந்தர ஊழியராக நியமனம் செய்கிறேன் என்று கூறியிருக்கிறார்.

பின்னர் அந்த வேலைக்கான சம்பளத்தை மாதந்தோறும் வழங்காமல் இழுத்தடித்ததோடு, மூன்று மாதங்களுக்கு ஒருமுறை வங்கி கணக்கில் செலுத்தியுள்ளனர். ஏற்கனவே குடும்ப கஷ்டத்திற்காகத்தான் இந்த வேலைக்கே வந்துள்ளோம். வேலை பார்த்ததற்கான சம்பளம் சரிவர வராததால் விரக்தியடைந்த அந்த பெண்கள் வேலைக்குச் செல்வதை நிறுத்திவிட்டு, பேரூராட்சி தலைவரிடம் கொடுத்த பணத்தை திருப்பி கேட்டுள்ளனர். அப்போது பேரூராட்சி தலைவர் சுப்புலட்சுமி அவரது கணவர் ராஜதுரை இருவரும் பணத்தை திருப்பி கொடுக்காமல், சந்தனமாரியை மிரட்டும் தொனியில் பேசி அனுப்பியுள்ளனர்.
அமைச்சர் கீதா ஜீவன், திமுக ஒன்றிய செயலாளர் சின்ன பாண்டி ஆகியோர் பெயரையும், பதவியையும் பயன்படுத்தி பேரூராட்சி தலைவர் சுப்புலட்சுமி செய்யும் அடாவடி செயலைக் கண்டித்து அரசியல் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபடவும் தயாராகி வருகின்றனர்.
– கே.எம்.எஸ்


