முறைகேடு செய்த கோவில் நிர்வாகிகள் ! கண்டுகொள்ளாத அறநிலையத்துறை அதிகாரிகள் !
திருப்பூர் மாவட்டம், தாராபுரம் வட்டம், மூலனூர் அடுத்துள்ள புதுப்பை கிராமத்தில் அங்காளம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலை தேன்குறிச்சி நாடு கோ வம்ச பண்டாரங்கள், தேன்கரசு நாடு கொங்கு நாவிதர்கள், விஸ்வகர்மா சூரியகுல ஆசாரியர்கள் ஆகிய மூன்று சமுதாயத்தினர் சுமார் 750 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் குலதெய்வமாக வழிபட்டு வருகின்றனர். இந்த மூன்று சமுதாயத்தினரின் முன்னோர்கள் காலந்தொட்டு அனைவரும் ஒற்றுமையாக இக்கோவிலை குலதெய்வமாக வழிபட்டு வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த எட்டு ஆண்டுகளாக அப்பகுதியை சேர்ந்த ராஜேந்திரன், நாட்ராயசாமி கோவிலின் செயல் அலுவலரும், இக்கோவிலின் தக்காருமான திலகவதி ஆகிய இருவரும் பல்வேறு முறைகேடுகளில் ஈடுட்டு வருவதாக புகார்கள் எழுந்துள்ளது.
இது தொடர்பாக இக்கோவிலை குலதெய்வமாக வழிபட்டு வரும் மேலே கூறப்பட்டுள்ள சமூகத்தினரிடம் விசாரித்தபோது… ராஜேந்திரன் என்பவர் கடந்த எட்டு ஆண்டுகளாக அறக்கட்டளை பெயரில் போலியான ரசீதுகளை அச்சடித்து பல லட்சக்கணக்கான பணத்தை வசூலித்து முறைகேடு செய்துள்ளார். இந்த முறைகேடுகளுக்கு கோவிலின் தக்கார் திலகவதியும், செயல் அலுவலரும் உடந்தையாக இருந்ததோடு, காலங்காலமாக அங்காலம்மனை குலதெய்வமாக வழிபட்டு வரும் எங்களுடைய கோரிக்கைகள் எதையும் ஏற்காமல் அலட்சியப்படுத்தியதோடு ஒருதலைப்பட்சமாக செயல்பட்டு வந்தனர். ஆகையால் கடந்த மே 22 ஆம் தேதி திருப்பூர் மாவட்ட இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு கொடுக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் செந்தில்குமார், தக்கார் திலகவதியை அழைத்து கண்டித்ததோடு, தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுத்து நியாயமாக நடந்து கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளார். பின்னர் சில மாதங்கள் அமைதியாக இருந்துவந்த திலகவதி, உதவி ஆணையர் பதவி உயர்வு பெற்று இடமாறுதலாகி சென்றதும்.. மீண்டும் ராஜேந்திரனோடு கூட்டு சேர்ந்து கொண்டு மோசடியில் ஈடுபடுபவர்களுக்கு உடந்தையாக இருந்ததோடு, அப்பகுதியை சேர்ந்த ஓய்வுபெற்ற கிராம நிர்வாக அலுவலர் தேவராஜ், ரமேஷ் ஆகிய இருவரையும் சேர்த்துக் கொண்டு, இக்கோவிலை குலதெய்வமாக வழிபடும் மூன்று சமூகத்தினரையும், பூசாரிகளையும் மிரட்டல் விடுத்து வந்துள்ளனர்.
மேலும் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவிலில் நிர்வாக ரீதியாக ஏற்பட்டுள்ள மோசடிகள் குறித்து, சமூக ஆர்வலர் பழனி சதீஷ் என்பவர் ராஜேந்திரன் மற்றும் திலகவதியுடம் கேள்வி எழுப்பியபோது, அவரை சாதிப் பெயரைச் சொல்லி அநாகரிகமான வார்த்தைகளை சொல்லி திட்டியதோடு, தீர்த்துக்கட்டி விடுவதாக கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். மேலும் இவர்களின் அடாவடிகளால் அப்பாவி ஜனங்களை அடிமையாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள புதுப்பை அங்காளம்மன் திருக்கோவில் நிர்வாகத்தில் ஏற்பட்டுள்ள முறைகேடுகள் குறித்தும், முறைகேடு செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள கோவில் தக்கார் திலகவதி, ராஜேந்திரன், தேவராஜ், ரமேஷ் ஆகியோர் மீது இந்து சமய அறநிலையத்துறை உயர் அதிகாரிகள் முறையான விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கிருஸ்துராஜ் இது சம்பந்தமாக விரிவான விசாரணை மேற்கொண்டு மூன்று சமூகத்தினரின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சாமானிய மக்களின் கோரிக்கைகளுக்கு செவி சாய்த்து தீர்வு காண்பாரா மாவட்ட ஆட்சியர் ? காத்திருப்போம்...