கணவனை நடுரோட்டில் கொடூரமாக கொன்று நாடகமாடிய மனைவி..! : அதிர்ச்சி சம்பவம்…
திருப்பூர் மாவட்டம் அவினாசியை அடுத்த காசிகவுண்டன்புதூர் அருகே உள்ள தாமரை கார்டன் பகுதியில் குடியிருந்து வந்தவர் ரமேஷ் (45), ஊட்டியை அடுத்த குழிச்சோலை பகுதியை சேர்ந்த ரமேஷ் தனது மனைவி விஜயலட்சுமி (34) மற்றும் இரு மகள்களுடன் வசித்து வருகிறார். மேலும் கார் கன்சல்டிங் மற்றும் பைனான்ஸ் தொழில் செய்து வரும் ரமேஷ் வழக்கம் போல் காலை சுமார் 5.45 முதல் 6.45 வரை வாக்கிங் செல்வதை வழக்கமாக கொண்டுள்ளார்.
இந்நிலையில் வீட்டின் அருகே காலை வழக்கம் போல் 6 மணிக்கு வீட்டில் இருந்து வாக்கிங் கிளம்பிய ரமேஷிற்கு தான் திரும்ப வரப்போவதில்லை என அப்போது தெரியாது. இதனிடையே காலை சுமார் 6.45 மணிக்கு வீட்டின் அருகே குடியிருந்து வரும் லத்ச என்பவர் பதற்றத்துடன் விஜயலட்சுமியின் வீட்டிற்கு வந்து, தனது கணவர் கோபாலன் கோயிலுக்கு சென்றுகொண்டிருந்த போது, அவினாசி பைபாஸ் சாலையில் ரமேஷ் மர்ம நபர்களால் கொடூரமாக வெட்டப்பட்டு ரத்தவெள்ளத்தில் உயிருக்கு போராடிவருவதாக தனது கணவர் தகவல் தெரிவித்ததாக கூறினார்.
இதனால் பதற்றமடைந்த விஜயலட்சுமி பின்னர் உறவினர்களுக்கு தகவல் கொடுத்துவிட்டு கோவை தனியார் மருத்துவமனைக்கு சென்று பார்த்தபோது மருத்துவர்கள் ரமேஷ் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த செய்தியை கேட்டு கதறி அழுத விஜயலட்சுமியை தேற்றி ஆறுதல் கூறினர். இந்நிலையில் பல்லடம் அருகே மூவர் கொலை நடந்து சில தினங்களிலேயே பைனான்ஸ்சியர் படுகொலை பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
இதனை அடுத்து 4 தனிப்படைகள் அமைத்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். முதல்கட்டமாக சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்த போலீசார் சந்தேகத்தின் பேரில் சிலரிடம் விசாரணை மேற்கொண்டனர்.
இதனிடையே கடந்த 4 ஆம் தேதி பிடிபட்ட திருவாரூரை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் (35), மன்னார்குடியை சேர்ந்த அஜீத்(27), சிம்பு (27), சரண் (24) மற்றும் தேனி மாவட்டம் சில்லுவார்பட்டியை சேர்ந்த ஜெயபிரகாஷ் (45) ஆகிய ஐந்து பேரிடம் தனிப்படையினர் நடத்திய தீவிர விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
விசாரணையில் மேற்படி கூலிப்படையை சேர்ந்த 5 பேரையும் வெள்ளியம்பாளையத்தை சேர்ந்த அரவிந்த் (27) என்பவர் பைனான்சியர் ரமேஷை கொலை செய்ய ரூபாய் 8 லட்சம் பேசி பணம் கொடுத்து அழைத்துச்சென்று வாக்கிங் சென்றுகொண்டிருந்த ரமேஷை கொடூரமாக வெட்டிச்சாய்த்தது தெரியவந்தது.
மேலும் போலீசார் நடத்திய விசாரணையில் கட்டிய மனைவியே தனது கள்ளக்காதலனுடன் சேர்ந்து ஸ்கெட்ச் போட்டு கூலிப்படைக்கு பணம் கொடுத்து கொடூர கொலை செய்த அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியானது. இதனை அடுத்து மனைவி விஜயலட்சுமி மற்றும் சையது இர்பான் (25) ஆகிய இருவரை கைது செய்து போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் பைனான்சியர் ரமேஷின் மனைவி விஜயலட்சுமிக்கு அருகே சிப்ஸ் கடை நடத்தி வரும் சையத் இர்பானுக்கும் கடந்த 3 ஆண்டுகளாக தொடர்பு இருந்ததாகவும், இதை தெரிந்து விஜயலட்சுமியை துன்புறுத்தியதாக கூறப்படுகிறது.
இதனை அடுத்து ரமேஷை தீர்த்துக்கட்ட இர்பானுடன் ஸ்கெட்ச் போட்ட விஜயலட்சுமி கூலிப்படை அமர்த்த தனது 20 சவரன் நகையை இர்பானிடம் கொடுத்து அடகு வைத்து அதில் இருந்து வந்த ரூ. 9 லட்சத்து 60 ஆயிரத்தில் இருந்து ரூ. 8 லட்சத்தை அரவிந்த் மூலமாக ஜெயபிரகாஷை தொடர்புகொண்டு கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனை அடுத்து 8 பேரையும் கொலை நடந்த 4 நாட்களில் கைது செய்த தனிப்படை போலீசார் நீதிபதி முன் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் இந்த கொலை வழக்கில் தொடர்புடைய ஜெயபிரகாஷ் முக்கிய கட்சியின் நிவாகியாவார். கட்டிய மனைவியே ஸ்கெட்ச் போட்டு கணவனை போட்டு தள்ளிய சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.