சினிமா

தனிமனித விமர்சனம் செய்யும் யூடியூபர்கள்..! : நீதிமன்றம் சென்ற தயாரிப்பாளர்கள் சங்கம் !

தமிழ் சினிமா தொடங்கிய காலம் முதல் இன்றளவும் திரைப்படத் துறையினருக்கும், செய்தி ஊடகங்களுக்கும் இடையில் இணக்கமான நல்லுறவும், மோதலும் இருந்து வருகிறது. எம்.கே.தியாகராஜ பாகவதர் காலத்தில் தனிமனித விமர்சனம், மிரட்டல் நடவடிக்கைகளில் பத்திரிகையாளர் லட்சுமிகாந்தன் ஈடுபட்டதால் அவர் கொலை செய்யப்பட்டதாகவும், அதன் காரணமாக நடிகர்கள் தியாகராஜ பாகவதரும், என்.எஸ். கிருஷ்ணன் இருவரையும் காவல் துறை கொலைக் குற்றசாட்டில் கைது செய்தது வரலாறு. அதன் பின் கடந்த நூறாண்டுகளில் தமிழ் சினிமாவில் அது போன்ற சம்பவங்கள் நிகழவில்லை. ஆனால் ஆபாச செய்திகளை, தனிமனிதர்களின் அந்தரங்க தகவல்களை உண்மையும், பொய்யும் கலந்து வெளியிடும் மஞ்சள் பத்திரிகைகள் எல்லா காலங்களிலும் இருந்து வந்திருக்கிறது.

அச்சு ஊடகம், காட்சி ஊடகம், இணைய ஊடகம் என முப்பரிமாண வளர்ச்சியில் செய்தி ஊடகங்கள் விஸ்வரூப வளர்ச்சி அடைந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இந்த நிலையிலும் மஞ்சள் பத்திரிகை கலாச்சாரம் யுடியூப் நடத்தும் தனி நபர்களால் கடைப்பிடிக்கப்படுகிறது என்கிற குற்றசாட்டு தொடர்ச்சியாக திரைப்பட துறை சார்ந்தவர்களால் கூறப்பட்டு வந்தது. அதற்கு எதிராக தனி நபராக, அமைப்பாக சட்டரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. ஆனால் மேலும் தங்களை பற்றி நாலாந்தர செய்திகள் வராமல் இருக்க திரைத்துறையினர் கரன்சிகள் மூலம் மஞ்சள் பத்திரிகையாளர்களை கவனித்த சம்பவங்களும் கடந்த காலங்களிலும், நிகழ்காலத்திலும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன என கூறப்படுகிறது.

அந்த பலவீனமே திரைப்படங்களை நேர்மையாக விமர்சிப்பதை கடந்து அந்த படம் சம்பந்தமான திரைக்கலைஞர்களையும், தயாரிப்பாளர்கள் குறித்தான தனிமனித விமர்சன தாக்குதல்கள் யூ டியூப் தளங்கள் மூலம் நிகழ்த்தப்பட்டு வருகின்றன என்கின்றனர் நேர்மையான மூத்த ஊடகவியலாளர்கள். இதனை எப்படி சமாளிப்பது, சரி செய்து ஒழுங்குபடுத்துவது என்பதில் திரைப்பட தயாரிப்பாளர்கள், திரைக்கலைஞர்களுக்கிடையே ஒருமித்த கருத்தும், திரைத்துறை சார்ந்த சங்கங்களுக்கிடையே ஒற்றுமை இன்மையும் இல்லாத சூழலை தங்களுக்கு சாதகமாக யூடியூப்பர்களை பயன்படுத்தி வந்தனர் என்கின்றனர் திரையரங்க உரிமையாளர்கள்.

இந்த ஆண்டு கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் வெளியான இந்தியன் – 2, சூர்யா நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் வெளியான கங்குவா ஆகிய படங்கள் யூடியூப்பர்களால் கடுமையாக விமர்ச்சிக்கப்பட்டன. கமல்ஹாசன், சூர்யா இருவரும் தனிப்பட்ட முறையில் நாலாந்தரமாக விமர்சிக்கப்பட்டார்கள்.


கங்குவா படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா, அவரது திரைப்பட ஆலோசகர் தனஞ்ஜெயன் இருவரையும் தனிப்பட்ட முறையில் விமர்சனம் செய்தனர் வலைத்தளங்களில் கங்குவா விமர்சனத்தில். இதற்கு எதிராக முதலில் குரல் கொடுத்தார் திரையரங்குகள் உரிமையாளர்கள் சங்க தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம். திரையரங்க வளாகத்தில் புதிய படங்கள் வெளியாகும் நாளன்று பார்வையாளர்களிடம் பேட்டி எடுப்பதை தடுக்க வேண்டும். படம் வெளியாகி முதல் மூன்று நாட்களுக்குள் விமர்சனம் செய்யப்படுவதை தவிர்க்க சட்டரீதியான நடவடிக்கையை தயாரிப்பாளர்கள் சங்கம் எடுக்கவேண்டும் என கோரிக்கை வைத்தார்.

அதனைத்தொடர்ந்து நடப்பு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை பதிவு செய்தது. பின்னர் தலைவர் பாரதிராஜா கையெழுத்திட்ட அறிக்கை ஒன்றை நவம்பர் 18 ஆம் தேதிஅன்று வெளியிட்டது. தலைவர் பாரதிராஜா ஒப்புதல் இல்லாமல் அவரது கையெழுத்தை பயன்படுத்தி அச்சங்கத்தின் பொருளாளர் தனஞ்ஜெயன் அந்த அறிக்கையை வெளியிட்டு ஊடகங்களை மிரட்டுகிறார். இவர் தமிழ்சினிமாவிற்கு ஆபத்தானவர் என சிலர் யூடியூபில் பேசினார்கள். ஊடகங்களுக்கு எதிராக தயாரிப்பாளர்களை திசை திருப்புகிறார் என்கிற பிம்பத்தை கட்டமைக்க யூ டியூப்பர்கள் முயற்சித்தனர். பாரதிராஜா ஒப்புதலுடன் அறிக்கை வெளியிடப்பட்டது என்று டிசம்பர் 5 ஆம் தேதி சங்கத்தின் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது.

அதில் திரைப்படங்களின் விமர்சனங்களை பேஸ்புக், எக்ஸ் தளம், இன்ஸ்டாகிராம், யூ-டியூப் போன்ற சமூக வலைத்தளங்களில் பதிவிட திரைப்படம் வெளியான மூன்று நாட்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்ற, நீதிமன்றத்தில் நமது சங்கத்தின் கோரிக்கை, சமீப காலங்களில் சில ஊடகங்கள் தனிப்பட்ட வன்மத்துடன், சில திரைப்படங்களுக்கு எதிராக விமர்சனம் செய்து வருவதையும், தனி மனித தாக்குதல் செய்து வருவதையும் தடுக்கவே தவிர, ஒட்டுமொத்தமாக அனைத்து ஊடங்கங்களுக்கும் எதிரானது அல்ல. அப்படிப்பட்ட சிலரை மட்டுமே தடுக்க முடியாத காரணத்தினால் தான், ஒட்டுமொத்தமாக மூன்று நாட்களுக்கு விமர்சனங்கள் வெளியிட தடை கேட்டு நீதிமன்றம் சென்று இருக்கிறோம். இதே காரணத்திற்காகத்தான், ஏற்கனவே மலையாள திரைப்பட உலகமும் நீதிமன்றம் சென்றுள்ளது.

பாரம்பரியமான பத்திரிகைகள், தொலைக்காட்சிகள் அவர்களின் இணையதளங்களில் எப்போதும் திரைப்படங்களை, திரைப்படம் சம்பந்தப்பட்டவர்களை தரம் தாழ்த்தி விமர்சிப்பது இல்லை. சில ஊடகங்கள்/ஊடகவியலாளர்கள் தவிர, மீதம் அனைத்து ஊடகங்களும், ஊடகவியலாளர்களும் திரைப்பட உலகிற்கு ஆதரவாக இருக்கிறார்கள், பல திரைப்படங்களின் வெற்றிகளுக்கு ஆதரவாக இருந்திருக்கிறார்கள் என்பதை நாங்கள் பல முறை திரைப்பட நிகழ்வுகளில் சொல்லி இருக்கிறோம். மீண்டும் இங்கு சொல்ல விரும்புகிறோம். சங்கத்தின் இந்த முயற்சி அனைத்து ஊடங்களுக்கும் எதிரானது அல்ல. ஒட்டுமொத்தமாக அனைவரையும் புறக்கணிப்பது சங்கத்தின் நோக்கம் இல்லை.

அதே போல, அப்படிப்பட்ட நடுநிலையான ஊடகங்களின் ஆதரவை எதிர்பார்த்திருக்கும் திரைப்பட தயாரிப்பாளர்களுக்கும் எதிரானது அல்ல, நமது சங்கத்தின் இந்த செயல்பாடு. எனவே வழக்கு மன்றத்தில் இது குறித்து ஒரு சரியான வழிமுறை (Guidelines) வரும் வரை, தயாரிப்பாளர்கள் அந்த திரைப்படத்திற்கான PRO-வுக்கு பரிந்துரைக்கும், டெலிவிஷன், பத்திரிக்கை, யூ-டியூப் (YouTube) சேனல்கள், வலைத்தளங்கள், சோசியல் மீடியா Influencer-கள், Press Show-வுக்கு வந்து, திரைப்படங்களை பார்த்து விமர்சனங்களை வெளியிடுவதில், எந்த எதிர்ப்பும் சங்கத்திலிருந்து இல்லை என்பதை தெரிவித்து கொள்கிறோம்.
எனவே திரைப்பட தயாரிப்பாளரின் அனுமதியோடு Press Show-வுக்கு மேலே குறிப்பிட்டவர்கள் வந்து திரைப்படங்களை பார்த்து விமர்சனம் செய்யலாம். விரைவில் சட்டரீதியாக, நீதிமன்றத்தில் இதற்கு ஒரு தீர்வும் எட்டப்படும் என்று நம்புகிறோம்.
தயாரிப்பாளர்களின் நலன் காக்கவே நமது சங்கம் இந்த முயற்சியை எடுத்துள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button