முதல்வருக்கு சவால் விடும் தியாகராஜன் : கராத்தே ஆசிரியர்களின் கோரிக்கை..!
தமிழ்நாடு முழுவதும் சுமார் 10 லட்சம் பேர் கராத்தே வீரர்கள் உள்ள பெரிய விளையாட்டாக திகழ்ந்து வருகிறது. கடந்த 1974 ஆம் ஆண்டு அன்றைய தமிழக முதல்வர் கருணாநிதி ஆட்சியில் சிவந்தி ஆதித்தனாரை தலைவராக கொண்டு கராத்தே பயிற்சியாளர் ஆர்.வி.டி.மணியின் முயற்சியால் அகில இந்திய கராத்தே சங்கம் ஓய்வுபெற்ற ஐ.பி.எஸ். அதிகாரி சக்திவேல் தலைமையில் தமிழ்நாடு கராத்தே சங்கம் துவங்கப்பட்ட்டது.
பின்னர் தாய் சென்சாய் மோசஸ் திலக் தலைவராக செயல்பட்டுவந்துள்ளார். அப்போது தான் கராத்தே கலைக்கு புதிய விதிகளை ஏற்படுத்தி விளையாட்டு கராத்தே பிரிவை உருவாக்கினார். இதனால் கராத்தே கற்பதற்கு அதிக அளவில் ஆர்வமுடன் பங்கெடுத்தனர்.
இந்நிலையில் கடந்த 2006 ஆம் ஆண்டு சென்னை மேயராக கராத்தே தியாகராஜன் இருந்தபோது அகில இந்திய கராத்தே போட்டியை சென்னையில் மிக பிரமாண்டமாக நடத்திக்காட்டினார். இதனை அடுத்து சங்கத்தின் சார்பில் பதவிகள் வழங்கப்பட்டன. இதனை அடுத்து அரசியல் களமானது கராத்தே அமைப்பு பின்னர் பல்வேறு குழப்பங்கள் சச்சரவுகளை அடுத்து புதிதாக தியாகராஜனை தலைவராக கொண்டு செயலாளர் பரத்சர்மாவுடன் இணைந்து கராத்தே அசோசியேசன் ஆப் இந்தியா சங்கத்தை உருவாக்கினர்.
அதன்பிறகு கடந்த 2018 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தியாகராஜனுக்கும் பரத்சர்மாவிற்கும் ஏற்பட்ட தகராறில் சங்கம் பிளவுபடும் சூழல் உருவானதை அடுத்து இந்திய ஒலிம்பிக் சங்கம் கராத்தே விளையாட்டிற்கு அளித்திருந்த அங்கீகாரத்தை ரத்து செய்தது. மேலும் இந்திய இளைஞர் விளையாட்டு மேம்பாட்டு ஆணையமும் தனது அங்கீகாரத்தை ரத்து செய்ததை அடுத்து தற்போது கராத்தே இந்தியா ஆர்கனைசேசன் பெயரில் கம்பெனி பதிவு சட்டத்தின் கீழ் பதிவு செய்து பழையபடி பஞ்சாயத்து ஓடிக்கொண்டிருக்கிறது. மேலும் கராத்தே அமைப்பில் பெல்ட் டெஸ்ட் நடத்தியது, நடுவர் தேர்வு உள்ளிட்டவைகள் மூலமாக சுமார் 1200 கோடி ஊழல் நடந்திருப்பதாக மும்பை போலீசில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் கராத்தே தியாகராஜன் மற்றும் பரத்சர்மா உள்ளிட்ட மூவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் பரத்சர்மா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு தற்போது வழக்கு நடந்து வருகிறது. இந்நிலையில் தமிழ்நாடு கராத்தே சங்கம் பெயரை பயன்படுத்தி கராத்தே ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடமும் லட்சக்கணக்கில் பணம் வசூலிப்பதாக புகார் எழுந்துள்ளது.
தற்போது சென்னை அடையாறில் தமிழ்நாடு மாநில அளவில் கராத்தே போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் சுமார் 2000 மாணவர்கள் கலந்துகொண்டதாக கூறப்படுகிறது. இவர்களிடம் இருந்து தலா ரூபாய் 1200 வீதம் சுமார் 24 லட்சத்தை சுலையாக அள்ளிச்சென்றதாக கூறப்படுகிறது. மேலும் சுமார் 600 பேர் நடுவர்களாக தேர்வு பெற ஆள் ஒன்றிற்கு ரூபாய் 3500 வரை செலுத்தியுள்ளனர்.
மேலும் கராத்தே சங்கத்தில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதாக பலமுறை முதல்வர் பிரிவிற்கு புகார் மனு அளித்த ஆசிரியர் ஒருவர் கூறும்போது, கராத்தே விளையாட்டை அரசியல்வாதியான தியாகராஜனிடமிருந்து காப்பாற்றவேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
மேலும் அவர் கூறுகையில் இல்லாத இந்திய போட்டிக்காக தமிழ்நாடு கராத்தே சங்கம் மூலமாக மாநில போட்டிகள் நடத்துவது முழுக்க வியாபார நோக்கில் தான் எனவும், இந்த போட்டியினால் எந்தவித பிரயோஜனமும் இல்லை எனவும் தெரிவித்தார். மேலும் அவர் குறிப்பிடுகையில் அரசியல் களமாகியுள்ள கராத்தே கலையை மீட்டெடுத்து தமிழக அரசு சார்பில் அதிகாரிகளை நியமித்து ஒழுங்கு படுத்தி வழிமுறைகளை வகுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக தான் சார்ந்த கராத்தே அமைப்பின் பயிற்சியாளர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட, நடுரோட்டில் பொதுமக்கள் கல்லால் அடித்து தர்மடி கொடுத்த போதும்கூட பாதிக்கப்பட்ட பள்ளி மாணவிகளுக்கு ஆறுதலாக எந்த ஒரு அறிக்கையும் விடாமல் இருந்ததும், மாணவிகளிடம் தவறாக நடந்த கராத்தே பயிற்சியாளர்கள் மீது இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமலும், கண்டனத்தை பதிவு செய்யாமல் வசூலில் குறியாக இருக்கும் கராத்தே தியாகராஜன் தமிழ்நாடு முதல்வருக்கு சவால் விட்டு அரசியல் லாபம் தேடுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
எனவே தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளிலும் உள்ள கராத்தே பயிற்சியாளர்கள் குறித்து பள்ளிக்கல்வித்துறை சார்பில் தகவல்களை சேகரிப்பதோடு மாநில அளவில் சிலம்ப விளையாட்டிற்கு அளித்துள்ள இட ஒதுக்கீட்டை வழங்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
மேலும் தனியாக விசாரணை குழு அமைத்து உரிய விசாரணை மேற்கொண்டு கராத்தே சங்கங்கங்கள் மூலம் நடந்திருப்பதாக கூறப்படும் கோடிக்கணக்கான ஊழல் குறித்தும் அதற்கு உறுதுணையானோர் மீதும் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கராத்தே ஆசிரியர்களும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் காலை ஒரு கட்சி மதியம் ஒரு கட்சி இரவு ஒரு கட்சி என கூடுவிட்டு கூடு பாய்பவர் மீது வழக்கு தொடுத்தாலும் எத்தனை கிலோமீட்டர் வேண்டுமானாலும் ஓடத்தாயாராக இருப்பதாகவும், ஏற்கனவே மாதக்கணக்கில் ஓடி ஒளிந்த அனுபவம் உள்ளதாகவும் அனுபவமுள்ள வட்டாரங்கள் தகவல்கள் தெரிவிக்கின்றன.
– நமது நிருபர்