தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் மீது தாக்குதல்: TNJPWA கண்டனம்
இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி தாலுகா தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் சந்திரசேகரனை பாட்டாளி மக்கள் கட்சி மேற்கு மாவட்ட தலைவர் தங்கராஜ் குண்டர்களுடன் சேர்ந்து தாக்கியுள்ளார். தொலைக்காட்சியில் அன்புமணி நிகழ்ச்சி குறித்து தவறாக செய்தி ஒளிபரப்பியதாகக் கூறி, செய்தியாளர் சந்திரசேகரை அவரது அலுவலகத்தில் வைத்து கொலை வெறியுடன் தாக்கி, மிரட்டல் விடுத்துள்ளனர். உடன் இருந்த செய்தியாளரையும் தாக்கியுள்ளனர். தாக்குதலில் இருவரும் பலத்தக் காயமடைந்தது மட்டுமின்றி, அவர்களது தாக்குதலில் மடிக்கணினி மற்றும் அலுவலகத்திலிருந்த பொருள்கள் பலத்த சேதத்திற்குள்ளானதில் பெரும் இழப்பும் ஏற்பட்டுள்ளது.
இது குறித்து தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு நல சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “சமீப காலமாக ஊடகத் துறையினர், பல்வேறு வகையிலும் பல்வேறு தரப்பினராலும் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றனர். ஊடக நிறுவனங்கள் நேரடியாக மிரட்டலுக்கு ஆளாவதோடு, செய்தியாளர்களும் குண்டர்களால் தாங்கொனாத் துன்பத்திற்கு ஆளாகி வருகிறார்கள்.
கட்சி பாகுபாடின்றி அனைத்து அரசியல் கட்சிகளும், செய்தியாளர்கள் மீது தாக்குதலில் ஈடுபடுவது மிகவும் கண்டிக்கதக்கதாக உள்ளதோடு வேதனைத் தருவதாகவும் உள்ளது.
செய்தியாளர்களில் பலர் அன்றாடங்காய்ச்சிகளாக காலநேரமின்றி பல இடையூறுகளுக்கிடையில் செய்திகளைச் சேகரித்து பொதுமக்களுக்குக் கொண்டு சேர்க்கும் பணியை செய்து வருகின்றனர். இந்நிலையில், எந்த ஒரு தரப்பு ஆதரவு இல்லாத நிலையில், பல்வேறு தரப்பின் தாக்குதலுக்குள்ளாவது மிகுந்த கவலையளிப்பதாக உள்ளது.
காலம், நேரம், இடம், பொருள், லாபம், நஷ்டம் எதுவுமின்றி சேவையை நோக்கமாகக் கொண்டு பணியாற்றி வரும் செய்தியாளர்களுக்கு, நமது நாட்டில் பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. கருத்துக்களை, கருத்துக்களால் எதிர்கொள்ள முடியாத தெளிவில்லாத சித்தாந்தவாதிகளாகவே இன்றைய அரசியல்வாதிகள் உள்ளனர். ஒருவர் கூறும் செய்திக்கு தக்க வகையில் பதில் கூறமுடியாத காடையர்கள், செய்தியாளர்கள் மீது கொலை வெறித் தாக்குதலில் ஈடுபட்டு, அச்சுறுத்தலில் ஈடுபடுகின்றனர்.
இந்தக் கொலை வெறித்தாக்குதலில் ஈடுபட்ட பாமக நிர்வாகி மற்றும் குண்டர்களை உடனடியாக காவல்துறையினர் கைது செய்து அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் செய்தியாளர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பரமக்குடி செய்தியாளர் சந்திரசேகர் மீது கொலை வெறித்தாக்குதலில் ஈடுபட்டதற்கு, தமிழ்நாடு பத்திரிக்கையாளர்கள் பாதுகாப்பு நல சங்கம் கடும் கண்டனத்தையும் தெரிவித்துக் கொள்கிறது.”
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.