பல்லடம் அருகே.. மனைவியை கொலை செய்து, கணவன் தூக்கிட்டு தற்கொலை
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த கரைப்புதூர் ஊராட்சிக்குட்பட்ட லட்சுமி நகர் நால்ரோட்டில் வசித்துவருபவர் சிலம்பரசன் (32). தர்மபுரி மாவட்டம் பென்னாகரத்தை சேர்ந்த சிலம்பரசனுக்கு கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்பு அகிலாண்டேஸ்வரி (28) என்பவருடன் திருமணம் நடந்து இரண்டு குழந்தைகள் உள்ளனர். கடந்த 3 ஆண்டுகளாக லட்சுமி நகர் நால் ரோட்டில் கறிக்கடை மற்றும் ஹோட்டல் வைத்து நடத்தி வந்துள்ளார்.
இதனிடையே நேற்று இரவு வழக்கம் போல் கடையை அடைத்துவிட்டு கணவன் மனைவி மற்றும் பெண் ஆகிய மூவரும் தூங்கச்சென்றுள்ளனர். காலை உறவினர் மணிகண்டன் வந்து பார்த்தபோது வீட்டில் ரத்த வெள்ளத்தில் அகிலாண்டேஸ்வரி முதுகு கைகளில் வெட்டுப்பட்டும், சிலம்பரசன் தூக்கில் தொங்கியபடி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து உடனடியாக சம்பவம் குறித்து பல்லடம் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார். தகவலை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் சிலம்பரசன் மற்றும் அகிலாண்டேஸ்வரி ஆகிய இருவரின் உடலை கைப்பற்றி உடல்கூறாய்விற்காக திருப்பூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை க்கு அனுப்பி வைத்துள்ழனர்.
பின்னர் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதல்கட்ட விசாரணையில் குடும்பத்தகராறு காரணமாக கட்டிய மனைவியை ஈவு இரக்கமின்றி வெட்டி கொலை செய்து தானும் தற்கொலை செய்திருப்பது தெரியவந்திருக்கிறது. இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.