பல்லடத்தில் 8 லட்சம் மதிப்புள்ள குட்கா கடத்திய 8 பேர் கைது
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் சட்டவிரோதமாக குட்கா கடத்திய ஒரு பெண் உட்பட 8 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். கேரளாவிலிருந்து பல்லடத்திற்கு குட்கா கடத்தப்படுவதாக பல்லடம் போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலையடுத்து, கோவை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் பல்லடம் அண்ணா நகர் ரிலையன்ஸ் பங்க் அருகே சந்தேகத்திற்கு இடமாக பொலீரோ ஜீப்பும், இருசக்கரவாகனமும் சுற்றிவருவதை மறைந்திருந்து காவல்துறையினர் கண்காணித்துள்ளனர். பின்னர் பல முறை அங்கும் இங்குமாக சுற்றியபடி இருந்த வாகனங்களை பின் தொடர்ந்து, பிக் அப் ஜீப் ஒன்று வேகமாக வந்துளது. அதனைத்தொடர்ந்து அதிரடியாக வாகனங்களை நிறுத்தி சோதனையிட்டபோது பிக் அப் ஜீப்பில் குட்கா மூட்டை, மூட்டையாக இருந்தது கண்டறியப்பட்டுள்ளது.
பின்னர் ஜீப்,பொலீரோ மற்றும் இருசக்கர வாகனத்தை கைப்பற்றிய போலீசார் கடத்தலில் தொடர்புடைய ஒரு பெண் உட்பட 8 பேரை கைது செய்து காவல்நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டுள்ளனர். விசாரணையில் கம்மாளப்பட்டியை சேர்ந்த கார்த்திகா மற்றும் பொன் வேல்ராஜ் ஆகியோர் சட்டவிரோதமாக குட்கா வாங்கி விற்பனை செய்து வருவதாக தெரிய வந்துள்ளது. மேலும் கர்நாட்காவிலிருந்து கடத்திவரப்படும் குட்கா பொருட்களை, கேரளாவில் பதுக்கி வைத்து, பின்னர் பல்லடத்திற்கு கடத்தி விற்பனை செய்ததும் தெரிய வந்தது. மேலும் போலீச்சரின் நடமாட்டத்தை கண்காணிக்க ஒரு ஜீப்பும் இரு சக்கர வாகனத்தையும் பயன்படுத்தியது தெரியவந்துள்ளது.
இந்நிலையில் பிடிபட்ட 800 கிலோ குட்காவின் மதிப்பு 8 லட்சம் எனவும் கூறப்படுகிறது. இதனை அடுத்து கடத்தலில் தொடர்புடைய கார்த்திகா, பொன்வேல் ராஜ் மற்றும் கேரளாவை சேர்ந்த சதீஷ்குமார், சுனில்,ராகுல், ரமேஷ், சதீஷ், வினீஷ் ஆகிய 8 பேரை கைது செய்து கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட ஜீப், பிக் அப் வேன், ஹோண்டா பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்த போலீசார் 8 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.