நிலமோசடி கும்பலின் தலைவன் கைது ! கூட்டுச் சேர்ந்த அதிகாரிகள் ! கண்டுகொள்ளாத காவல்துறையினர் !
கடந்த சில மாதங்களாக கிரம்மர் சாண்டகிரன் பவுண்டேசன் சங்கத்தின் சொத்துக்களை போலி ஆவணங்கள் மூலம் அபகரிக்க முயன்றதாக, தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு மாவட்டங்களில் புகார்கள் எழுந்துள்ள நிலையில், மோசடிக் கும்பலின் தலைவன் கமலேஷ்வரன் தனது கூட்டாளியுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
இது சம்பந்தமாக பல்வேறு தரப்பினரிடமும் விசாரணை மேற்கொண்டபோது.. கிரம்மர் சாண்டகிரன் பவுண்டேசன் சங்கத்திற்கு சொந்தமான பலகோடி மதிப்புள்ள இடங்களை போலி ஆவணங்கள் மூலம் அபகரிக்க, மோசடிக் கும்பலுடன் அரசு அதிகாரிகளும் கூட்டுச் சேர்ந்து செயல்பட்டுள்ளதாக வெளியான தகவல் பதிவுத்துறையையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
அதாவது பட்டுக்கோட்டையில் பால் சாண்டகிரன் என்பவர் கடந்த 1957 ஆம் ஆண்டு அப்பகுதி மக்களின் வளர்ச்சிக்காக கிரம்மர் சாண்டகிரன் பவுண்டேசன் என்கிற பெயரில் ஒரு அமைப்பை ஆரம்பித்து தொடர்ந்து நடத்தி வந்துள்ளார். பின்னர் 1972 ஆம் ஆண்டு அவர் மரணம் அடைந்ததைத் தொடர்ந்து, 1974 ஆம் ஆண்டு வரை சுவன் சாண்டகிரன் என்பவர் தலைவராக செயல்பட்டு வந்துள்ளார். பின்னர் அவர் தனது சொந்த ஊரான சுவீடன் நாட்டிற்கு சென்று விட்டாராம். அதன்பிறகு தலைவராக இருந்த பாதிரியார் தர்மராஜ் பட்டுக்கோட்டையில் இருந்து திருச்சிக்கு குடிபெயர்ந்து, திருச்சியை தலைமையிடமாகக் கொண்டு அந்த அமைப்பை நடத்தி வந்துள்ளார். தற்போது பாதிரியார் ஆப்ரகாம் தாஸ் தலைவராக செயல்பட்டு வருகிறார். இந்த அமைப்பிற்கு சொந்தமாக தமிழகம் முழுவதும் கோடிக்கணக்கான சொத்துக்கள் உள்ளது. மேலும் தேவாலயங்கள், கல்வி நிறுவனங்களும் செயல்பட்டு வருகிறது.
இதனையறிந்த சிலர் கிரம்மர் சாண்டகிரன் பவுண்டேசன் அமைப்பின் சொத்துக்களை அபகரிக்க அதிகாரிகள் துணையோடு பல்வேறு சதித்திட்டங்களை தீட்டியுள்ளனர். அதாவது கிருஸ்தவ அமைப்பிற்கு சொந்தமான இடத்திற்கு, கோவை வீர கேரளம் பகுதியைச் சேர்ந்த கமலேஷ்வரன் கடந்த 2015 ஆம் ஆண்டு கிரம்மர் சாண்டகிரன் பவுண்டேசன் அலுவலகம், ஜெர்மன் நாட்டிலிருந்து தன்னை தலைவராக நியமித்து கடிதம் வந்ததாகக் கூறி, திருச்சி மாவட்ட பதிவுத்துறை பதிவாளரிடம் போலியான கடிதத்தை கொடுத்துள்ளார். பின்னர் கோவை தொண்டாமுத்தூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் கிரம்மர் சாண்டகிரன் பவுண்டேசன் என்கிற பெயரில் டிரஸ்ட் ஒன்றையும் ஆரம்பித்துள்ளார்.
அதனைத்தொடர்ந்து கிரம்மர் சாண்டகிரன் பவுண்டேசன் அமைப்பிற்குச் சொந்தமான சொத்துக்களுக்கு தான்தான் தலைவர் என அறிவித்து, தமிழகம் முழுவதும் பலகோடிகளை முன் பணமாக வசூலித்துக் கொண்டு, கோவை, தேனி, மதுரை, கொடைக்கானல் பகுதிகளில் கிரயம் செய்து தருவதாக மோசடியில் ஈடுபட்டதாக புகார்கள் எழுந்துள்ளது. மேலும் போலி ஆவணங்கள், போலியான ரப்பர் ஸ்டாம்ப் போன்றவற்றையும் தயாரித்து அதிகாரிகள் துணையோடு மோசடியில் ஈடுபட்டதும் தெரியவந்துள்ள நிலையில், தற்போது அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்துள்ளனர். சில இடங்களில் கமலேஷ்வரன் மீது ஆதாரங்களுடன் புகார்கள் கொடுக்கப்பட்டும், காவல்துறையினர் வேண்டுமென்றே காலதாமதம் படுத்தி வருவதாகவும் தெரியவருகிறது.
இந்த நிலமோசடியின் பின்னணியில் யார் யார் ? இதற்கு துணைபோன அதிகாரிகள் யார் யார் ? உண்மையும் பின்னணியும்… விரிவான தகவல்கள் வரும் இதழில்….