அரசு பணியிலிருந்து உடுமலை கவுசல்யா சஸ்பெண்ட்
இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக கூறி உடுமலை கவுசல்யாவை பணி இடைநீக்கம் செய்து வெலிங்டன் கன்டோன்மெண்ட் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
சாதிய ஆணவப் படுகொலையில் உயிரிழந்த உடுமலை பொறியாளர் சங்கர் இழப்புக்கு பிறகு அவரது மனைவி கவுசல்யா கலைப் பயிற்சிகளை அளிக்கத் தொடங்கியதோடு சமூக ஆர்வலராகவே மாறினார். பின்னர் குன்னூர் வெலிங்டன் கன்டோன்மெண்டில் இளநிலை உதவியாளர் பணி பெற்ற கவுசல்யா, இரண்டு வருடங்களுக்கு பிறகு நிமிர்வு பறையாட்ட பயிற்சி கலைஞர் சக்தி என்பவரை மறுமணம் செய்தார்.
அண்மையில் பிபிசி தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த கவுசல்யா, இந்தியாவை தான் ஏற்றுக் கொள்ளவும் இல்லை, தனக்குள் அந்த உணர்வும் இல்லை என்றும் கருத்து தெரிவித்தார்.
இந்தியாவில் ஒருமொழி தேசம் என்கிற ஒரு விஷயம் கிடையவே கிடையாது எனக்கூறிய அவர், பண்பாட்டு தளத்தில் மக்கள் பிரிந்திருக்கும் நிலையில் எப்படி ஒரு தேசமாக கருதுவது என்கிற பார்வையை நான் மக்களிடமே விடுகிறேன் என்றும் குறிப்பிட்டிருந்தார். ஸ்டெர்லைட் ஆலை, நியூட்ரினோ திட்டம், மீத்தேன் திட்டம் உள்ளிட்டவற்றை செயல்படுத்த நினைக்கும் இந்தியா, தமிழகம் அடிமைப்படுத்தப்பட்ட மாநிலமாகவே வைத்திருப்பதாகவும் கவுசல்யா கூறியிருந்தார்.
இவற்றுக்கு எதிராக இவ்வளவு மக்கள் போராட்டங்களை நடத்தியும் அவற்றை இந்திய அரசு, வேண்டாம் என்று சொல்லி மறுக்கவேயில்லை என சுட்டிக்காட்டிய அவர், விவசாயிகள் டெல்லிக்கே சென்று தங்கள் கோரிக்கைகளை முன்வைத்தும், அவற்றை காதுகொடுத்து கேட்காத மனநிலையில்தான் இந்திய அரசு இருக்கிறது என்றும் குறிப்பிட்டிருந்தார்.
இந்த கருத்துகள் இந்தியா இறையாண்மைக்கு எதிராக இருப்பதாகக் கூறி கவுசல்யாவை பணி இடைநீக்கம் செய்து வெலிங்டன் கன்டோன்மெண்ட் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.