தமிழகம்

அரசு வேலைக்கு போலி பணி நியமன ஆணை… : சிக்கிய சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர்..!

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் காவல் நிலைய ஆய்வாளாராக ஏசு ராஜசேகரன், கடந்த 8 மாதங்களாக பணியில் இருந்து வருகிறார். இவர், கன்னியாகுமரி மாவட்டம், புதுக்கடை காவல் நிலையத்தில் ஆய்வாளராகப் பணிபுரிந்த போது அரசுவேலை வாங்கித் தருவதாக 27 பேரிடம் ரூ.1.47 கோடி பணம் பெற்றுக் கொண்டு போலி பணி நியமன ஆணைகளை வழங்கியுள்ளார். இது குறித்து ஏசு ராஜசேகரன் மற்றும் அவரது மனைவி என அறிமுகப்படுத்திக் கொண்ட கனகதுர்கா ஆகியோர் மீது கன்னியாகுமரி மாவட்டம், மார்த்தாண்டம் கொடுங்குளம் பகுதியைச் சேர்ந்த லலிதா என்பவர், நாகர்கோவில் எஸ்.பி அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார்.

அந்த புகார் மனுவில், “ஆய்வாளர் ஏசு ராஜசேகரன், புதுக்கடை காவல் நிலையத்தில் பணிபுரிந்தபோது அறிமுகமானார். எனது மகன் விஷாலுக்கு அரசுப் பள்ளியில் இளநிலை உதவியாளர் பணியை பெற்றுத் தருவதாக உறுதியளித்தார். அதோடு 50 பேருக்கு இளநிலை உதவியாளர் பணியும், 10 பேருக்கு ஆசிரியர் பணியும் உள்ளதாகக் கூறினார்.

இதை நம்பி எனது மகன் உள்பட 3 பேருக்கு அரசு வேலை வாங்கித் தருவதற்காக அவரது வங்கிக் கணக்கிற்கு ரூ.8 லட்சம் அனுப்பி வைத்தேன். நெல்லை மாவட்டத்தில் உள்ள பள்ளி ஒன்றில் பணியில் சேர பணி நியமன ஆணை வந்தது. அதே போல் மற்ற 2 பேருக்கும் பணி நியமன ஆணை வந்தது. இதனை நம்பி 27 ஏழை, எளிய மாணவர்களுக்கும் அரசு வேலை கிடைக்கும் என நினைத்து ரூ.1.47 கோடியை ஏசு ராஜசேகரனின் வங்கிக் கணக்கிற்கு அனுப்பி வைத்தேன்.

27 பேருக்கும் பணி நியமன ஆணை தனித்தனியே கிடைத்தது. பின்னர் ஏசு ராஜசேகரனிடமிருந்து எந்த தகவலும் வரவில்லை. அவரது மொபைல் எண்ணும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இதனால், சந்தேகம் அடைந்து அந்த பணி நியமன ஆணையை அரசு அதிகாரி ஒருவரிடம் காண்பித்து கேட்ட போது அது போலியானது எனத் தெரிய வந்தது. மோசடி செய்த ஏசு ராஜசேகரன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், இழந்த பணத்தையும் மீட்டுத்தர வேண்டும்” எனக் கூறப்பட்டிருந்தது.

இது தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வந்த நிலையில், மருத்துவ விடுப்பில் சென்றுவிட்டாராம். இந்த நிலையில் சங்கரன்கோவிலில் உள்ள அவரது இல்லத்திற்கு கன்னியாகுமரி டி.எஸ்.பி மகேஷ்குமார் தலைமையிலான போலீஸார் விசாரணைக்கு அழைத்துச் செல்ல வந்தனர். இந்த தகவலறிந்து ஏசு ராஜசேகரன், கன்னியாகுமரி மாவட்ட எஸ்.பி முன்பு ஆஜராகி இந்த மோசடிக்கும் தனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என எழுத்துப் பூர்வமாக எழுதிக் கொடுத்துள்ளார்.

இந்த நிலையில், சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஏசு ராஜசேகரனை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி நெல்லை சரக டி.ஐ.ஜி மூர்த்தி உத்தரவிட்டுள்ளார்.

இதில், ஏசு ராஜசேகரனின் மனைவி என கூறப்படும் கனகதுர்கா இதே போல் தேனி மாவட்டத்திலும் மோசடி புகாரில் சிக்கியுள்ளாராம். ரூ.1.11 கோடி மோசடி செய்த கனகதுர்காவை தேனி குற்றப்பிரிவு போலீஸார், திண்டுக்கல்லில் கைது செய்துள்ளனர். அந்த விசாரணையில்தான் ஏசு ராஜசேகரனுடன் இணைந்து கன்னியாகுமரியில் 27 பேரிடம் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button