53ம் ஆண்டு துவக்க விழா.. அதிமுகவின் பலத்தை நிரூபிப்பாரா எடப்பாடி பழனிச்சாமி..?
நடிகர் எம்.ஜி. ராமச்சந்திரனால் துவங்கப்பட்ட அண்ணா திராவிட முன்னேற்ற கழகம், இன்றளவும் திமுகவிற்கு சிம்ம சொப்பனமாகவே திகழ்ந்து வருகிறது. அண்ணாவின் கொள்கைகளையும், திமுக எதிர்ப்பையும் கொள்கைகளாக தாங்கி நிற்கும் அதிமுகவின் அரசியல் பாதையில், ஏற்றங்களும் உண்டு, இறக்கங்களும் உண்டு. திமுக எதிர்ப்பு, அண்ணாவின் வழி, சமூகநீதி, மாநில உரிமை என கடந்த 52 ஆண்டுகளில் அதிமுக கையில் எடுத்த அரசியல் கணக்குகள் ஏராளம்.
அண்ணாவின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்ட எம்ஜிஆர், தன்னை திராவிட முன்னேற்றக் கழகத்தின் அடிப்படை உறுப்பினராக இணைத்துக் கொண்டதோடு, தான் நடிக்கும் படங்களில் வசனங்கள் மூலமாக திமுகவின் கொள்கைகளை மக்களிடம் கொண்டு சேர்த்தார். திமுகவின் பிரச்சார பீரங்கியாக இருந்த எம்ஜிஆர், கருத்து வேறுபாடு காரணமாக ஒரு கட்டத்தில் திமுகவிலிருந்து நீக்கப்பட்டார். அதன்பிறகு அண்ணாவின் பெயரை தாங்கிய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் என்கிற இயக்கத்தை தொடங்கி, குறுகிய காலத்திலேயே அதிமுகவை மாபெரும் அரசியல் கட்சியாக வளர்த்து, 1977 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார். அன்றைய தினத்திலிருந்து எம்ஜிஆர் மறைவு வரை, அவரை எதிர்த்து அரசியல் செய்ய மிகவும் சிரமப்பட்ட திமுகவிற்கு, மறுபடியும் ஆட்சிக்கு வருவது ஏறக்குறைய ஒரு கனவாகவே மாறிவிட்டது.
52 ஆண்டுகளில், 32 ஆண்டுகள் ஆட்சி அதிகாரத்தில் இருந்தது அதிமுக. இதன் மூலம் தமிழ்நாட்டை அதிக முறை ஆட்சி செய்த கட்சி என்கிற பெருமையையும் தக்கவைத்துக் கொண்டது அதிமுக. தமிழக அரசியல் கட்சிகள், மத்திய அமைச்சரவையில் இடம் பெறுவதற்கு வழி வகுத்ததும் அதிமுக தான். இன்றளவும் அரசியலுக்கு வரும் நடிகர்களுக்கு ரோல்மாடலே எம்ஜிஆர் தான். ஒவ்வொரு முறையும் அதிமுக சறுக்கல்களை சந்திக்கும்போது, அதிலிருந்து மீண்டு மாபெரும் வெற்றியை பதிவு செய்தது தான் அதிமுகவின் வரலாறு. எம்ஜிஆரின் மறைவுக்குப் பிறகான சறுக்கல்களில் இருந்து மீண்டு, மாபெரும் வெற்றியை பதிவு செய்து அதிமுகவின் அடுத்த அத்தியாயத்தை தொடங்கினார் ஜெயலலிதா. அதிரடி முடிவுகளுக்கு பெயர் போன ஜெயலலிதா, எம்ஜிஆர் கையில் எடுத்த திமுக எதிர்ப்பை தீவிரமாக கையிலெடுத்தார். அதே சமயம் சமூகநீதி, மாநில உரிமை போன்ற அண்ணாவின் கொள்கைகளை அதிமுக கைவிடவில்லை. 69 சதவீத இட ஒதுக்கீட்டை உச்ச நீதிமன்றம் வரை சென்று பெற்று தந்தது அதற்கு உதாரணம்.
பட்டியல் இனத்தைச் சேர்ந்த தனபாலை சபாநாயகர் என்ற உயரிய பொறுப்பில் அமரச் செய்ததன் மூலம், சமூக நீதியை ஆட்சி மற்றும் கட்சியிலும் ஜெயலலிதா கடைபிடித்ததாக மக்களை பேச வைத்தார். மாநில உரிமைகளில் சமரசம் இல்லாத போக்கையும் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக கடைபிடித்தது. காவிரி பிரச்சனை தொடங்கி முல்லைப் பெரியாறு பிரச்சனை வரைக்கும், ஜெயலலிதா நடத்திய சட்டப் போராட்டங்களை தமிழ்நாட்டின் உரிமைகளை நிலைநாட்டியது அதிமுக. இந்தியா முழுவதும் நீட் தேர்வு அமுல்படுத்தப்பட்ட போதும், ஜெயலலிதா உயிரோடு இருக்கும் வரையில் தமிழ்நாட்டில் நீட் தேர்வு நடத்தப்படவில்லை. ஜெயலலிதா வழங்கிய சைக்கிள் மற்றும் லேப்டாப் மாணவர்களின் வாழ்வாதாரமாகவே மாறியது. ஜெயலலிதா கொண்டு வந்த தொட்டில் குழந்தை திட்டம் சர்வதேச அளவில் பாராட்டப்பட்டது. இன்றளவும் அதிமுக மக்கள் மத்தியில் உயிர்ப்போடு இருப்பதற்கு அதிமுகவின் மக்கள் நலத் திட்டங்கள் முக்கிய காரணமாகவே இருக்கிறது. மக்கள் நலத்திட்டங்களில் திமுக, அதிமுகவினருக்கு இடையிலான போட்டி தமிழ்நாட்டின் நலனை மையப்படுத்தியே இருந்தது.
இன்றளவும் தமிழ்நாட்டின் குக்கிராமங்கள் வரை அதிமுகவின் கிளை கொடிக்கம்பங்கள் இருந்து வருகிறது. அரை நூற்றாண்டை கடந்தும் அதிமுக இவ்வளவு பெரிய மக்கள் இயக்கமாக இருப்பதற்கு முக்கிய காரணமே அதன் கட்டமைப்பு தான். தேர்தல்களில் படுதோல்விகளை சந்தித்தாலும், அடுத்தடுத்த தேர்தல்களை எதிர்கொள்ளக்கூடிய திறன் கொண்ட இயக்கம் அதிமுக என்கிற அசைக்க முடியாத நம்பிக்கையை கொண்டிருக்கிறது. 2014 தேர்தலில் அதிமுக தனித்துப் போட்டியிட்டு, சுமார் 45 சதவீத வாக்குகளை பெற்றது தமிழக மக்களவைத் தேர்தல் வரலாறுகளில் இவ்வளவு வாக்குகளை வாங்கியது அதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக, தொடர் தோல்விகளையும், நெருக்கடிகளையும் சந்தித்து வரும் நிலையில், அதிருப்தியில் இருந்து மீண்டு வந்து, அதிமுகவின் பலத்தை எடப்பாடி பழனிச்சாமி நிரூபிப்பாரா? என்கிற எதிர்பார்ப்பும் அதிமுக தொண்டர்கள் மத்தியில் இருந்து வருகிறது. அதிமுகவின் இடத்தை பிடித்து விடலாம் என தேசிய கட்சிகள் முதல் மாநில கட்சிகள் வரை நினைக்கும் நிலையில், அந்தக் கட்சிகள் அதிமுகவின் கட்டமைப்பை கொண்டுள்ளதா என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.
தமிழ்நாட்டின் அரசியல் களம் மாறுகிறது என்கிற கருத்துகள் இருந்தாலும், இன்றளவும் தமிழக அரசியலில் அதிமுக & திமுக என தொடர்வதும், அதிமுக அதே வலிமையுடன் மாநில அரசியலில் பயணிப்பதும் மாறவில்லை என சொல்லப்படுகிறது. எம்ஜிஆர் ஜெயலலிதா என்கிற ஆளுமைகள் இல்லாத நிலையில், 53 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அதிமுக, அதே வலிமையுடன் தமிழ்நாட்டு அரசியலில் தொடர்ந்து வலம் வருமா? என்கிற கேள்விக்கு காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.