இந்தியாவை ‘பாரத்’தாக மாற்றும் முயற்சி..! – காவி நிற BSNL லோகோவால் சர்ச்சை…
திருவள்ளுவர் தொடங்கி இந்திய அணி கிரிக்கெட் ஜெர்சி, தூர்தர்ஷன் சேனல் லோகோ, ஜி-20 மாநாடு லோகோ, வந்தே பாரத் ரயில் என ஒவ்வொன்றுக்கும் காவி பெயிண்ட் அடிக்கும் கலாசாரத்தை பா.ஜ.க தொடர்ந்து செய்துகொண்டிருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டிவருகின்றன. அந்த வரிசையில், இந்திய அரசின் தொலைத்தொடர்பு நிறுவனமான பி.எஸ்.என்.எல் லோகோவை காவி நிறத்தில் மாற்றி அறிமுகப்படுத்தியிருக்கிறது பா.ஜ.க அரசு!
கடந்த அக்டோபர் 22-ம் தேதி டெல்லியில் உள்ள பி.எஸ்.என்.எல் தலைமையகத்தில், பிஎஸ்.என்.எல் புதிய லோகோ மற்றும் ஏழு புதிய சேவைகள் அறிமுக விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை தலைமையேற்று நடத்திய மத்திய தகவல் தொடர்புத்துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, பி.எஸ்.என்.எல் ஐபிடிவி, ஸ்பேம்-ஃப்ரீ நெட்வொர்க், டைரெக்ட் டு டிவைஸ் கனெக்டிவிட்டி, என்கிரிப்டட் கம்யூனிகேஷன் ஃபார் டிஸாஸ்டர்ஸ், பைபர் டு தி ஹோம் யூசர்ஸ்களுக்கான வைஃபை ரோமிங் முதலிய ஏழு புதிய சேவைகளை தொடங்கி வைத்தார். மிக முக்கியமாக, காவி நிறத்திலான புதிய பி.எஸ்.என்.எல் லோகோவை அறிமுகப்படுத்தினார்.
ஏற்கெனவே இருந்த பழைய லோகோ நீலம், சிவப்பு நிறங்களுடன் கனெக்டிங் இந்தியா' என்று இருந்த நிலையில், புதிய லோகோவின் வண்ணம் பெரும்பான்மையாக காவி நிறத்திலும், இந்தியாவுக்கு பதிலாக,
கனெக்டிங் பாரத்’ என்ற வாசகம் இடம்பெற்றிருக்கிறது. ஏற்கெனவே, இந்தியா என்ற பெயரை பாரத் என்று பெயர்மாற்றம் செய்யவேண்டும் என பா.ஜ.க தலைவர்கள் பேசியதும், எதிர்க்கட்சிகள் தங்கள் கூட்டணிக்கு இந்தியா கூட்டணி' எனப் பெயர்வைத்த நிலையில், கடந்த ஆண்டு ஜி-20 நாடுகளின் தலைவர்களுக்கு இந்திய குடியரசுத் தலைவர் சார்பில் அனுப்பப்பட்ட அழைப்பிதழில்
பிரெசிடென்ட் ஆஃப் பாரத்’ என்று குறிப்பிட்டிருந்ததும் விவாதததை ஏற்படுத்தியிருந்தது.
மத்திய அரசின் இந்த காவி வண்ணமயமாக்கல் முயற்சிக்கு காங்கிரஸ் உள்ளிட்ட பிரதான எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றன. குறிப்பாக, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு.செல்வப்பெருந்தகை, “இத்தேசத்தில் உள்ள அனைத்து பொதுத்துறைகளும் காவிமயமாக்கப்படுவது ஏன்? வந்தே பாரத் ரயில், டிடி நியூஸ் சேனல் லோகோவைத் தொடர்ந்து தற்போது ஒன்றிய பா.ஜ.க. அரசு பி.எஸ்.என்.எல். லோகோவையும் காவி நிறத்திற்கு மாற்றியுள்ளது. முன்பிருந்த லோகோவில் இந்தியாவை இணைப்போம் என்றிருந்தது தற்போது பாரதத்தை இணைப்போம் என்றும் மாற்றப்பட்டுள்ளது. மேலும், அதில் பயன்படுத்தப்பட்டிருக்கும் நிறங்கள் பா.ஜ.க.வின் கொடியின் நிறத்தை ஒத்திருக்கிறது.
புதியதாக கட்டிய நாடாளுமன்றத்திற்குள் நுழைந்தால் எங்கும் காவி நிறம். அதே போல நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பணியிலிருக்கும் ஊழியர்களின் சீருடைகள் காவி நிறத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. இவ்வாறு பா.ஜ.க. அரசு பல்வேறு பொதுத்துறை நிறுவனங்களில் தனது கட்சி நிறமான காவியைப் புகுத்தி, அரசு நிறுவனங்களை காவி மயமாக்கும் நடவடிக்கைக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் வன்மையான கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறேன்!” என கண்டித்திருக்கிறார்.
அதேபோல சி.பி.ஐ(எம்) மதுரை தொகுதி எம்.பி சு.வெங்கடேசன், “தொலைதொடர்பு சந்தையை தனியாருக்கு தந்துவிட்டு BSNL-க்கு “புதிய லோகோ வை தந்து மகிழ்ந்துள்ளது ஒன்றிய அரசு. காவி நிறம்.. .”இந்தியாவை” இணைக்கிறோம் என்பதற்குப் பதிலாக “பாரத்”ஐ இணைக்கிறோம் என்று மாற்றம். திருவள்ளுவரா.. வந்தேபாரத்தா… பி.எஸ்.என்.எல்லா என எல்லாத்துக்கும் காவி பெயிண்ட் அடிப்பது மட்டும்தான் ஒன்றிய அரசின் முழுநேர தேசப்பணி!” என குற்றம்சாட்டியிருக்கிறார்.
தொடர்ந்து தி.மு.க எம்.எல்.ஏ இனிகோ இருதயராஜ், “ டெல்லியில் உள்ள பி.எஸ்.என்.எல் தலைமை அலுவலகத்தில் நடந்த விழாவில் ஒன்றிய தகவல் தொடர்புத்துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா புதிய பிஎஸ்என்எல் லோகோவை வெளியிட்டார். முழுவதும் காவி வர்ணத்தில் இரண்டு அம்புக்குறிகளும் தேசியக் கொடி நிறத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் காவி வட்டத்தின் நடுவே இந்திய வரைபடமும் அதில் இடம்பெற்றிருக்கிறது. மேலும் பழைய லோகோவில் Connecting India என்ற வாசகம் இடம்பெற்றிருக்கும். தற்போது அது மாற்றப்பட்டு Connecting Bharat என்று மாற்றப்பட்டுள்ளது. காவி நிறம் பா.ஜ.கவின் அடையாளத்தினைக் குறிக்கும் என்பதால் பி.எஸ்.என்.எல். லோகோவிலும் காவி நிறம் இடம்பெற்றிருப்பது மக்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அரசியல் களத்தில் தடுமாற்றங்களைச் சந்தித்துக் கொண்டிருக்கும் பாஜக, பல நிறுவனங்களின் அடையாளங்களான லோகோக்களில், நிற மாற்றங்களை ஏற்படுத்தி மகிழ்ந்து கொண்டிருக்கிறது” என விமர்சனம் செய்திருக்கிறார்.
அதேபோல, மனிதநேய ஜனநாயகக் கட்சித் தலைவர் தமிமுன் அன்சாரி, “BSNL நிறுவனத்தின் அடையாள சின்னத்தை காவி நிறத்திற்கு மாற்றியது ஏன்?அரசியல் களத்தில் தடுமாறுவதால், நிறத்தில் அரசியல் செய்கிறீர்களா? Connecting India என்ற வாசகம் Connecting Bharat என்றும் மாற்றப்பட்டுள்ளது. I.N.D.I.A கூட்டணி எழுச்சியுறுவதால் அந்த வார்த்தை கசக்கிறதா?” என சரமாரியாகக் கேள்வி எழுப்பியிருக்கிறார்.
இந்தநிலையில், பி.எஸ்.என்.எல் லோகோ சர்ச்சை குறித்து பத்திரிகையாளர்களின் கேள்விக்கு பதிலளித்த முன்னாள் ஆளுநரும் பா.ஜ.க மூத்த தலைவருமான தமிழிசை சௌந்தரராஜன், “காவி என்பது நாட்டில் உள்ள வண்ணம், நமது தேசிய கொடியில் உள்ள வண்ணம்! பி.எஸ்.என்.எல் லோகோவை மாற்றியதில் எந்த உள்நோக்கமும் இல்லை!” எனத் தெரிவித்திருக்கிறார்.