அரசியல்

அரசு நிலத்தை அபகரித்தவருக்கு தொகுதி ஒதுக்கிய அதிமுக..! : கொந்தளிக்கும் பொதுமக்கள்…

அதிமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடுகள் முடிந்து வேட்பாளர்கள் பட்டியலையும் வெளியிட்டது அதிமுக தலைமை. அதில் சென்னை, வில்லிவாக்கம் சட்டமன்ற தொகுதியில் அதிமுகவின் சட்டமன்ற வேட்பாளராக ஜேசிடி பிரபாகர் பெயரை அறிவித்துள்ளது அதிமுக தலைமை.

வில்லிவாக்கம் பகுதியில் கடந்த சில மாதங்களாகவே இவரது செயல்பாடுகளை கண்டித்து ஆர்ப்பாட்டங்களும், போராட்டங்களும் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. ஏன் ஜேசிடி பிரபாகருக்கு அந்தப் பகுதியில் எதிர்ப்பை காட்டுகிறார்கள் என அப்பகுதி மக்களிடம் விசாரிக்கையில் பல அதிர்ச்சியூட்டும் தகவல்களை நம்மிடம் பகிர்ந்து கொண்டார்கள். மேலும் விசாரிக்கையில் ஜேசிடி பிரபாகர் இப்படி செய்தார் என நமக்கே வியப்பாகவும் அதிர்ச்சியாகவும் இருந்தது.

வில்லிவாக்கம் பாடி மேம்பாலம் அருகே உள்ள எம்டிஎச் (விஜிபி) சாலையில் உள்ள அரசுக்குச் சொந்தமான ஏரி புறம்போக்கு நிலத்தை குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த தினேஷ்குமார் என்பவரும், ஆந்திர மாநிலத்தைச சேர்ந்த ஜி.கே.எம் ரெட்டி குடும்பத்தினரும் ஆக்கிரமித்து கட்டிடங்களை கட்டி உள்ளனர். அந்த கட்டிடங்கள் மாநிகராட்சியிலோ சென்னை பெருநகரு வளர்ச்சிக் குழுமத்திலோ அனுமதி பெறாமல் கட்டி இருக்கிறார்கள். இந்த கட்டிடங்களை எனக்கு குறைவான வாடகைக்கு தாருங்கள் நான் ஆளும் கட்சியில் இருப்பதாலும் சிஎம்டிஏவிலோ மாநகராட்சியிலோ ஏற்கனவே கட்டப்பட்ட கட்டிடங்களுக்கு அனுமதி வாங்கித் தருகிறேன் என்று கூறி கட்டிடங்களை கைப்பற்றி இருக்கிறார்.

அந்த கட்டிடங்களில் தனது மருமகனுக்கு காய்கறி கடையும், மகனுக்கு மதராஸ் ஸ்டோர் என்கிற பெயரில் ஜவுளிக்கடையும் வைத்துக் கொண்டாராம். பிறகு அரசுப் புறம்போக்கு ஏரி நிலத்திற்கு பட்டா வாங்குவதற்காக அமைந்தகரை வட்டாட்சியரையும் அணுகியிருக்கிறார்.

சிஎம்டிஏவில் இந்த கட்டிடங்களுக்கு அனுமதி கேட்டு தாக்கல் செய்த மனுவுக்கு எதிர்ப்புகள் கிளம்பியதால் இந்த கட்டிடங்கள் இருக்கும் இடம் உங்களுக்குச் சொந்தமானதல்ல. இது அரசுக்குச் சொந்தமான இடம் என்றுதான் பதிவேட்டில் உள்ளது என்று திருப்பி அனுப்பி விட்டார்களாம். அனுமதி வாங்கித் தருவதாக ஆக்கிரமிப்பாளர்களிடம் பெரிய தொகையையும் ஜேசிடி பிரபாகர் வசூலித்ததாகவும் தெரிவிக்கிறார்கள்.

மாநகராட்சியிலோ, சிஎம்டிஏவிலோ அனுமதி வாங்காமல் அரசுக்குச் சொந்தமான ஏரி, புறம்போக்கு இடத்தில் கட்டப்பட்ட கட்டிடங்கள் மீதும் ஆக்கிரமிப்பு செய்தவர்கள் மீதும் பல்வேறு புகார்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடத்தில் கொடுக்கப்பட்டும் ஜேசிடி பிரபாகர் ஆளும் கடசியின் பெயரைச் சொல்லி அதிகாரிகளை நடவடிக்கை எடுக்க விடாமல் தடுத்து வருகிறார் என்கிறார்கள். மாநகராட்சி மண்டலம் 8&ன் செயற்பொறியாளர் உள்ளிட்ட அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்காமல், நிலத்தை ஆக்கிரமித்து அனுமதி பெறாமல் கட்டப்பட்ட கட்டிடத்தின் மீது நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் அரசியல்வாதிகளிடம் விலைபோய் விட்டார்கள் என்கிற சந்தேகம் இருப்பதாக அப்பகுதி மக்கள் கூறுகிறார்கள்.

இந்த கட்டிடங்கள் சம்பந்தமாகவும், கட்டிடம் அமைந்துள்ள புறம்போக்கு ஏரி நிலம் சம்பந்தமாகவும் மாநில வருவாய் நிர்வாக ஆணையர், மாவட்ட ஆட்சியர், வருவாய் அதிகாரி, வட்டாட்சியர், மாநகராட்சி ஆணையர் உள்ளிட்ட மாநகராட்சி அதிகாரிகள், சிஎம்டிஏ அதிகாரிகள், மாநில கவர்னர் அலுவலகம் ஆகிய அலுவலகங்களில் புகார்கள் கொடுக்கப்பட்டுள்ளதாம். புறம்போக்கு ஏரி நிலத்தை பதிவு செய்த பதிவுத்துறை அதிகாரிகள் மீதும், அந்தப் பதிவு செய்த பத்திரங்களை ரத்து செய்யவும் பதிவுத்துறை ஐஜியிடம் புகார் கொடுக்கப்பட்டு விசாரணை நடைபெறுவதாகவும் கூறுகிறார்கள்.

தினேஷ்குமார்

இந்த இடத்தை ஆக்கிரமிப்பு செய்த குஜராத்தைச் சேர்ந்த தினேஷ்குமார் பற்றி விசாரிக்கையில் இவரது தொழிலே அரசு நிலங்களை போலியான பத்திரங்கள் தயார் செய்து தனது பெயரிலும் தனது மனைவி பெயரிலும் ஆக்கிரமிப்பு செய்வதுதானாம். வில்லிவாக்கத்தில் புறம்போக்கு ஏரி நிலத்தை ஆக்கிரமிப்பு செய்ததுபோல், தரமணியில் சென்னை பல்கலைகழகத்திற்கு சொந்தமான ஒரு ஏக்கர் 33 சென்ட் நிலத்தை பதிவுத்துறை அதிகாரிகளுக்கு பணத்தைக் கொடுத்து தனது பெயரிலும் தனது மனைவி சந்திரிகா படேல் பெயரிலும் பதிவு செய்து வைத்துள்ளார். ஆனால் அந்த இடம் தமிழக அரசு அரசாணை வெளியிட்டு சென்னை பல்கலைக் கழகத்துக்கு வழங்கப்பட்ட இடம். இந்த இடத்திற்கு போலியான பேப்பர்களை தயார் செய்து பல்கலைக்கழக வளாகத்திற்குள் அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் இடத்தை சந்திரிகா படேலும், தினேஷ்குமாரும் விற்பனை செய்ய முயற்சி செய்து வருகிறார்களாம்.

வில்லிவாக்கத்தில் உள்ள அரசு புறம்போக்கு ஏரி நிலம் 1.49 ஏர்ஸ் நிலம், தரமணியில் உள்ள சென்னை பல்கலைகழகத்திற்குச் சொந்தமான 1 ஏக்கர் 33 சென்ட் நிலம் ஆகிய இரண்டு இடங்களையும், ஜேசிடி பிரபாகர் வில்லிவாக்கம் சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றதும், அதிமுக மந்திரி சபையில் வீட்டு வசதித்துறை, மந்திரியானதும் பட்டா வழங்கி தினேஷ்குமாரோடு பங்கு போட்டுக் கொள்ள திட்டம் தீட்டியிருப்பதாகவும் அப்பகுதி மக்கள் கூறுகிறார்கள். இந்த தகவல் எதிர்கட்சித் தலைவர் கவனத்திற்கு புகாராக தெரிவிக்கப்பட்டுள்ளதாம். அவர்களும் தேர்தல் பிரச்சாரத்தில் இந்த விஷயம் சம்பந்தமாக பிரச்சாரம் செய்ய உள்ளதாகவும் தகவல்.

ஆளும் கட்சியில் எம்எல்ஏவாக இல்லாத போதே ஜேசிடி பிரபாகர் அரசு புறம்போக்கு ஏரி நிலத்தில் அனுமதி இல்லாத கட்டிடங்களை ஆக்கிரமித்து காய்கறி, ஜவுளி வியாபாரம் செய்து வருகிறார். இவர் சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றால் வில்லிவாக்கம் தொகுதி என்னவாகும் என்ற அச்சம் இருப்பதாக அப்பகுதி மக்களும், சமூக ஆர்வலர்களும் புலம்புகிறார்கள். ஏற்கனவே அதிமுக தலைமை அறிவித்த வேட்பாளர்கள் மீது பல்வேறு பகுதிகளில் அதிமுகவினரே அதிருப்தியில் போராடுகிறார்கள். அந்த வகையில் வில்லிவாக்கம் தொகுதியும் சேர்ந்து கொண்டதாகவே தெரிய வருகிறது.

சூரியன்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button