சிதம்பரம் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட அரியலூர் மாவட்டம் பொன்பரப்பி பகுதியில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனின் சின்னமான பானையை சிலர் உடைத்ததாக ஏற்பட்ட மோதலில் ஒருவர் தாக்கப்பட்டார். இதனால் மற்றொரு தரப்பினர் மக்களவைத் தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருந்த நேரத்தில் பொன்பரப்பி கிராம குடியிருப்பில் புகுந்து 20க்கும் மேற்பட்ட ஓட்டுவீடுகளின் மேற்கூரையை உடைத்து சேதப்படுத்தினர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த தாக்குதலில் இருசக்கர வாகனமும் தீக்கிரையாக்கப்பட்ட நிலையில், பெண் உள்பட 5க்கும் மேற்பட்டோர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதனையறிந்து அங்கு விரைந்த காவல்துறையினர் நிலைமையை கட்டுக்குள் கொண்டுவந்து, தாக்குதல் தொடர்பாக 25க்கும் மேற்பட்டோர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இதுதொடர்பாக, இரு பிரிவையும் சேர்ந்தவர்கள் செந்துறை காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர். இந்நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் அளித்த புகாரின்பேரில் 12 பேரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில், ஒரு பிரிவினரை மட்டும் போலீஸார் கைது செய்வதாகக் கூறியும், அதைக் கண்டித்தும், மற்றொரு பிரிவைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் பொன்பரப்பியில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து வந்த அரியலூர் மாவட்ட எஸ்.பி.ஸ்ரீனிவாசன், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் செந்துறை – ஜெயங்கொண்டம் சாலையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மோதலில் காயமடைந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினரை தமிழக காங்கிரஸ் கட்சி செயல் தலைவரும், திருவள்ளூர் மக்களவைத் தொகுதி வேட்பாளருமான ஜெயக்குமார் சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் அரியலூரில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:பாமகவினர் அதிகம் உள்ள பகுதிகளில் இதுபோன்ற வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்த வண்ணம் உள்ளன. அவர்கள் தலித் மக்கள் மீது தாக்குதல்- வன்முறையில் ஈடுபடுகின்றனர். வாக்குச்சாவடியை கைப்பற்றும் நோக்கத்திலேயே பொன்பரப்பியில் வன்முறையை நிகழ்த்த முயன்றனர். இவ்வாறு அவர் கூறினார்.
இதனிடையே, அப்பகுதியில் செய்தி சேகரிக்கச் சென்ற கலைராஜன் ( நியூஸ் 18 செய்தியாளர்) உள்ளிட்டோர் மீதும் விசிகவினர் சிலர் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்நிலையில், அரியலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் செய்தியாளர் கலைவாணனைச் விசிக தலைவர் திருமாவளவன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
பின்னர் தாக்குதலுக்கு வருத்தமும் கோரினார். மேலும் தாக்கிய கட்சியினர் மீது தகுந்த நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதி அளித்துள்ளார்.
மேலும் பொன்பரப்பி கிராமத்தில் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்தை கண்டித்து, ஏப்ரல் 24ஆம் தேதி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்த இருப்பதாக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் அறிவித்துள்ளார். அரியலூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அனைத்து மாவட்டங்களிலும் கூட்டணிக் கட்சிகளை ஒருங்கிணைத்து ஏப்ரல் 24ஆம் தேதி தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தப் போவதாக கூறியுள்ளார். மேலும் கொடூரத் தாக்குதல் குறித்து உரிய நடவடிக்கை எடுக்காத தமிழக அரசுக்கும், காவல்துறைக்கும் திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதனைதொடர்ந்து வாக்குப்பதிவின்போது நடந்த தாக்குதல் சம்பவம் குறித்து அரியலூர் மாவட்ட ஆட்சியரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான விஜயலட்சுமியைச் சந்தித்த திருமாவளவன் விரிவாக விளக்கினார். பின்னர் பொன்பரப்பி கிராமத்தில், 4 வாக்குச்சாவடிகளில் மறுதேர்தல் நடத்த வேண்டுமெனெ கோரிக்கையும் விடுத்தார். அதற்கு விஜயலட்சுமி மறுப்பு தெரிவித்தார்.
இந்நிலையில் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ செய்தியாளர் சந்திப்பின் போது, இது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்தார். அப்போது அரியலூர் பொன்பரப்பில் மறுவாக்குப் பதிவு அவசியம் இருக்காது என்று தெரிவித்தார். மேலும் அங்கு இருதரப்பினர்க்கு மட்டுமே பிரச்சனை ஏற்பட்டது என்று குறிப்பிட்ட அவர், வாக்குப்பதிவு நடந்த இடத்தில் பிரச்சனை ஏதும் நடக்கவில்லை என்று விளக்கம் அளித்துள்ளார்.