நீலகிரியில் அதிகரிக்கும் போலிகள் ! பத்திகையாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்த ஆட்சியர் !
நீலகிரி மாவட்டத்தில் பத்திரிகையாளர்கள் என்கிற பெயரில், சில போலி நபர்கள் தொழில் முனைவோர்கள், விவசாயிகள் மற்றும் பொதுமக்களை மிரட்டுவதும், அவர்களைப் பற்றிய தகவல்களை, பொய்யான செய்திகளை சமூக வலைத்தளங்களில் பரப்பியும், பணம் கேட்டு மிரட்டியும், குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வருவதால், மாவட்ட நிர்வாகத்திற்கு தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளதாம்.
இந்நிலையில் கூடலூர் பகுதியை சேர்ந்த ரெனால்ட் மற்றும் ரத்தீஷ் ஆகிய இருவர் மசினகுடி பகுதியில் இயங்கி வரும் தனியார் விடுதியில் இலவசமாக அறை மற்றும் பணம், மது தர வேண்டும். இல்லையென்றால் ஓட்டலை பற்றி அவதூறாக பத்திரிகையில் வெளியிடுவோம் என கைபேசி மூலமாக, ஓட்டலுக்கு வரும் வாடிக்கையாளர்களை புகைப்படம் எடுத்து மிரட்டி உள்ளனர். அதனைத்தொடர்ந்து தனியார் விடுதியின் மேலாளர் ஆன்லைன் மூலம் மாவட்ட ஆட்சியருக்கு புகார் மனு அளித்துள்ளார். இது குறித்த சிசிடிவி காட்சிகள் மற்றும் புகைப்படங்களையும் மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பி வைத்துள்ளார்.
ஏற்கனவே பத்திரிகையாளர்கள் என்கிற பெயரில் மிரட்டுபவர்கள் மீது தகுந்த ஆதாரத்துடன் புகார் அளித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்திருந்த நிலையில், மசினகுடி பகுதியில் பத்திரிகையாளர்கள் என்று கூறி தனியார் விடுதியில் பணம் கேட்டு மிரட்டியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.