தமிழகம்

ஆன்லைன் ரம்மிக்கு விரைவில் தடை சட்டம்?

ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி சந்துரு தலைமையில், ஆன்லைன் ரம்மிக்கு எதிராக அவசரச் சட்டம் இயற்றுவது தொடர்பாக குழு அமைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், இணையதள சேவைகளைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை நாள்தோறும் பன்மடங்கு அதிகரித்து வரும் நிலையில், ஆன்லைன் ரம்மி விளையாட்டில் ஈடுபடுவோரின் எண்ணிக்கையும் அதிகரிக்கத் தொடங்கியது. இதில் பணத்தை இழப்போர் தற்கொலை செய்து கொள்ளும் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எனவே, ஆன்லைன் ரம்மியை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.

கடந்த அதிமுக ஆட்சியில் ஆன்லைன் ரம்மி விளையாட்டிற்கு எதிராகச் சட்டம் ஒன்று இயற்றப்பட்டது. இந்தச் சட்டத்தை ரத்து செய்யக் கோரி சில நிறுவனங்கள் தாக்கல் செய்த மனுக்களை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், இச்சட்டம் போதுமான காரணங்கள் மற்றும் ஆதாரங்களின்றி பிறப்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்து, அதனை ரத்து செய்தது.

மேலும், அச்சட்டத்தை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தபோது, சட்டம் நிறைவேற்றப்படுவதற்கான அறிவியல் பூர்வமான தரவுகளை விளக்கத் தவறியதாகவும் கருத்து தெரிவித்திருந்தது. இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனு இதுவரை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை.

அதேபோல், கேரளா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் ஆன்லைன் ரம்மி விளையாட்டிற்கு எதிராகக் கொண்டு வரப்பட்ட சட்டங்களும் அந்தந்த மாநில உயர்நீதிமன்றங்களால் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், ஆன்லைன் ரம்மி விளையாட்டின்பால் ஈர்க்கப்பட்டு, அதில் பணத்தை இழந்து உயிரை மாய்த்துக் கொள்ளும் துயரமான நிகழ்வுகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன. இது தொடர்பாக மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் குறித்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக் கூட்டமானது தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.

அதில், ஆன்லைன் ரம்மி விளையாட்டினால் ஏற்படக்கூடிய நிதியிழப்பு மற்றும் தற்கொலை உள்ளிட்ட பெரும் ஆபத்தை விளைவிக்கும் தன்மையைக் கண்டறியவும், இவ்விளையாட்டுகளினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை உரிய தரவுகளுடன் ஆராயவும், இதுபோன்ற விளையாட்டுகளை விளையாடத் தூண்டும் விளம்பரங்கள் சமூகத்தில் ஏற்படுத்தும் தாக்கங்களை கூர்ந்தாய்வு செய்து. அவற்றை உரிய முறையில் கட்டுப்படுத்தவும், இரண்டு வாரங்களுக்குள் தனது பரிந்துரைகளை அரசுக்கு அளிக்க ஓய்வு பெற்ற சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கே.சந்துரு தலைமையில் ஐஐடி தொழில்நுட்ப வல்லுநர் டாக்டர் சங்கரராமன், ஸ்நேஹா அமைப்பின் நிறுவனரும் உளவியலாளருமான டாக்டர் லட்சுமி விஜயகுமார், காவல்துறை கூடுதல் இயக்குநர் வினித் தேவ் வான்கடே ஐபிஎஸ் ஆகியோர் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது.

இக்குழு அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் இச்சமூகப் பிரச்சனைக்கு உடனடித் தீர்வு காண வேண்டிய அவசியம் கருதி, அவசரச் சட்டம் விரைவில் இயற்றப்படும். இதன் மூலம் இச்சட்டம் பிற மாநிலங்களுக்கும் வழிகாட்டிடும் வகையில் முன் மாதிரிச் சட்டமாக அமையும் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button