தொடரும் ரேஷன் அரிசி கடத்தல் ! நிரந்தர தீர்வுதான் என்ன ?.!
ரேஷன் அரிசி கடத்தலைத் தடுக்கும் நோக்கில், குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுப் பிரிவு போலீசார், தமிழகம் முழுவதும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பொதுமக்களுக்கு இலவசமாக தமிழ்நாடு அரசு வழங்கும் அரிசியை, ரேஷன்கடை விற்பனையாளர்களிடம் குறைந்த விலைக்கு வாங்கி, ஆந்திர மாநிலத்திற்கு கொண்டுசென்று அதிக விலைக்கு விற்பனை செய்து வருவதை, சிலர் தொழிலாக செய்து வருகின்றனர்.
இந்நிலையில் சென்னை வடக்கு பிரிவு, குடிமைப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு ஆய்வாளர் தாம்சன் சேவியருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், எண்ணூர் பகுதியில் அத்திப்பட்டு மெயின்ரோடு, கேம்ப் ரோடு சிக்னல் ஆகிய இடங்களில் நடைபெற்ற வாகன சோதனையில், TN 18 X 1921 பொலேரோ பிக்அப் வாகனத்தில், அரசின் அனுமதி சீட்டு இல்லாமல் சுமார் 2050 கிலோ ரேஷன் அரிசி மூட்டைகள் இருந்துள்ளது. பின்னர் அந்த வாகன ஓட்டுநரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் எண்ணூர், அத்திப்பட்டு பகுதிகளில் ரேஷன் அரிசியை குறைந்த விலைக்கு வாங்கி, ஆந்திர மாநிலம் நெல்லூரைச் சேர்ந்த பிரவீன் குமார் ரெட்டி என்பவருக்கு, திருவள்ளூர் மாவட்டம், பெரிய ஓபளாபுரத்தைச் சேர்ந்த மதன் குமார் என்பவர் அனுப்புவதாக தெரிவித்த தகவலின் அடிப்படையில், வழக்குப்பதிவு செய்து மதன் குமாரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். மேலும் இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட பிரேம்குமார் ரெட்டி இரு தினங்களுக்கு முன் கும்மிடிப்பூண்டி பேருந்து நிலையத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதாவது தமிழகம் முழுவதும் எல்லையோர மாவட்டங்கள் வழியாக, வெளிமாநிலங்களுக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் வந்து கொண்டுதான் இருக்கிறது. அதேபோல் அதிகாரிகளும் புதிது புதிதாக குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு நியமிக்கப் படுகின்றனர். ஆனாலும் எத்தனை அதிகாரிகள் வந்தாலும் ரேஷன் அரிசி கடத்தலை முற்றிலுமாக தடுக்க முடியவில்லையே என ஒரு அதிகாரியிடம் கேட்டபோது, இந்த துறையில் பணியாளர்கள் பற்றாக்குறை நீண்ட காலமாக இருந்து வருகிறது. அரசாங்கம் அதிகாரிகளை மட்டுமே நியமனம் செய்கிறது. பணியாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவில்லை என்கிறார்.
-கே.எம்.எஸ்