தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக மெகா கூட்டணி அமைத்து போட்டியிடும் என்று முதல்வர் எடப்பாடி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் அறிவித்தனர்.
அதிமுக கூட்டணியில் பாஜ, பாமக, தேமுதிக இடம் பெற்றுள்ளதை அதிமுக தொண்டர்கள் பெரும்பாலானவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. இதற்கு அவர்கள் கூறும் காரணம், ஜெயலலிதா இருக்கும்போது பகிரங்கமாக எதிர்த்த இந்த மூன்று கட்சிகளுடன் தற்போதைய அதிமுக தலைவர்கள் கூட்டணி அமைத்துள்ளது தவறு என்கின்றனர்.
இதுகுறித்து அதிமுக தொண்டர்கள் கூறும் தகவல்கள் வருமாறு: பாமக தலைவர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ஆகியோர் அதிமுக ஆட்சியை கடுமையான வார்த்தைகளில் விமர்சித்திருக்கிறார்கள். இனி திராவிட கட்சிகளுடன் எப்போதும் கூட்டணி இல்லை என்று ராமதாஸ் கூறினார். இது முழுக்க முழுக்க சந்தர்ப்பவாத கூட்டணி ஆகும். கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக அதிமுகவையும், ஜெயலலிதாவையும் நேரடியாக விமர்சனம் செய்துவிட்டு தற்போது கூட்டணியில் பாமக இணைந்திருப்பதில் உள்நோக்கம் உள்ளது.
அடுத்து, கடந்த 3 ஆண்டு காலம் மத்திய பாஜ அரசு அதிமுகவுக்கு பல்வேறு சோதனைகளை அளித்துள்ளது. பல அமைச்சர்களை ஊழல் குற்றச்சாட்டில் விசாரிக்கிறார்கள், தலைமை செயலகத்திற்குள் ரெய்டு நடத்தியது, இந்த அரசின் கீழ் பணிபுரியும் பல அதிகாரிகள் ஊழல் குற்றச்சாட்டில் விசாரணை வளையத்திற்குள் இருக்கிறார்கள். இதனையெல்லாம் கடந்து, சென்றாண்டு சென்னையில் அமித்ஷா, நேரடியாக தமிழக அரசை ஊழல் அரசு என்று குற்றம் சாட்டினார். இப்படி ஜெயலலிதா நேரடியாக எதிர்த்த கட்சியை இன்று அதிமுக கூட்டணியில் சேர்த்துள்ளனர். இதற்கெல்லாம் ஒரு படி மேலே சென்று தேமுதிகவை அதிமுக தலைவர்கள் காலில் விழுந்து கெஞ்சி கூட்டணியில் சேர்த்துள்ளார்கள் என்றுதான் நினைக்க தோன்றுகிறது. 2011ம் ஆண்டு அதிமுகவுடன் தேமுதிக கூட்டணி சேர்ந்ததால் விஜயகாந்த் எதிர்க்கட்சி தலைவர் ஆனார். ஆனால், அதே விஜயகாந்த் ஒரே ஆண்டில் சட்டப்பேரவையில் ஜெயலலிதாவை எதிர்த்தார். நாக்கை கடித்து மிரட்டும் தொணியில் அதிமுக எம்எல்ஏக்களை அடிக்க பாய்ந்தார்.
விஜயகாந்த் மனைவி பிரேமலதாவோ, தேமுதிகவால்தான் அதிமுக தற்போது ஆட்சியில் இருக்கிறது என்றார். 37 அதிமுக எம்பிக்கள் டெல்லி சென்றும் ஒரு பிரயோஜனமும் இல்லை என்றார். ஜெயலலிதாவை பெயர் சொல்லி பேசினார். ஆனால் இன்று ஜெயலலிதா மரணம் அடைந்த பிறகு, அவரது கொள்கையை பின்பற்றுகிறோம் என்று கூறி, அவர் கூறியதற்கு மாறாக செயல்படுகிறார்கள். இப்படி ஜெயலலிதா நேரடியாக எதிர்த்த அல்லது ஜெயலலிதாவை எதிர்த்து தமிழகத்தில் அரசியல் நடத்திய பாமக, பாஜ, தேமுதிக கட்சிகளுடன் இன்று அதிமுக கூட்டணி வைத்துள்ளது. இதை எப்படி அதிமுக தொண்டர்களாகிய நாங்கள் ஏற்றுக்கொள்வோம்.
தேர்தல் களத்தில் எப்படி இந்த கூட்டணி கட்சிகளுடன் இணைந்து வேலை செய்ய முடியும் என்று தலைவர்கள் சிந்தித்து பார்த்தார்களா? ஏதோ, மெகா கூட்டணி அமைப்போம் என்று கூறி விட்டு அதிமுக தொண்டர்களும், பொதுமக்களும் ஏற்றுக்கொள்ளாத ஒரு நையாண்டி கூட்டணியை இன்று தமிழகத்தில் அமைத்துள்ளார்கள். இது கண்டிப்பாக அதிமுகவுக்கு எதிரான வாக்குகளையே பெற்றுத்தரும் என்று அவர்கள் கூறினர்.
இதுகுறித்து அதிமுக மூத்த நிர்வாகி ஒருவர் கூறும்போது, “அதிமுகவின் இரண்டாம் நிலை மற்றும் மாவட்ட நிர்வாகிகளுக்கு பாஜகவுடன் கூட்டணி வைப்பதில் எந்த உடன்பாடும் இல்லை. அவர்கள் அதிருப்தியிலே இருக்கிறார்கள். இதனை அதிமுக முன்னணி தலைவர்களும் உணர்வார்கள். ஆனால், அதிமுக தலைவர்களுக்கு வேறு நிர்ப்பந்தம் இருக்கிறது. அவர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை மத்திய புலனாய்வு அமைப்புகள்தான் விசாரிக்கின்றன. இந்த நிர்பந்தத்தின் அடிப்படையில்தான் இவர்கள் ஒன்று சேர்ந்து இருக்கிறார்கள்” என்று தெரிவித்தார்.