பெண்கள் தங்கும் விடுதியில் ரகசிய கேமரா பொருத்திய தொழிலதிபர் பகீர் பின்னணி!
சென்னை ஆதம்பாக்கத்தில் அனுமதியின்றி நடத்தப்பட்ட பெண்கள் தங்கும் விடுதி ஒன்றில், ரகசிய காமிரா வைத்து, அங்கு தங்கி இருந்த பெண்களை ஆபாசமாக படம் எடுத்த, விடுதி உரிமையாளர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். படுக்கை அறை, குளியல் அறை என 10 இடங்களில் இருந்து ரகசிய காமிராக்கள் கைப்பற்றப்பட்டள்ளது.
குளியல் அறையுடன் கூடிய 3 படுக்கை அறை கொண்ட இந்த பெண்கள் விடுதியில் 7 பெண்கள் தங்கி, கல்லூரி மற்றும் மென்பொருள் நிறுவனங்களில் பணிபுரிந்து வந்தனர். சம்பவத்தன்று மென்பொறியாளர் ஒருவர் குளித்து விட்டு தனது தலைமுடியை உலர வைப்பதற்காக, ஹேர் டிரையர் மெஷினில் உள்ள வயரை 3-பின் பிளக்கில் சொருக முயற்சித்தார். அந்த பின்னில் வயரை சொருக இயலவில்லை. அதன் உள்ளே ஏதோ பொருள் அடைத்து இருப்பது போன்று உணர்ந்ததால் சந்தேகம் அடைந்த அவர், ஸ்குரூடிரைவர் மூலம் அந்த 3-பின் பிளக்கை கழற்றிப் பார்த்தபோது, உள்ளே ரகசிய காமிரா பொருத்தப்பட்டிருந்தது.
இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவர், தன்னுடைய தொழில் நுட்ப அறிவை பயன்படுத்தி, வேறு எங்காவது ரகசிய காமிராக்கள் இருக்கின்றனவா? என்பதை கண்டறிய முற்பட்டார். அதன்படி தனது செல்போனில் ஹிடன் கேமரா டிடெக்டர் என்ற ஆப்-பை டவுன்லோடு செய்தார்.
அதன் மூலம் ஒவ்வொரு இடமாக தேடியபோது, படுக்கை அறையில் மாட்டப்பட்டிருந்த கடிகாரம், மின் விளக்கு, திரைச்சீலைகளை இணைக்கும் கம்பிகளின் முகப்பு, குளியலறை 3-பின் பிளக், ஷவர் குழாய் என 10 காமிராக்கள் பொருத்தப்பட்டு இருப்பதைக் கண்டறிந்தார்.
இதையடுத்து, தங்கள் விடுதியில் பொருத்தப்பட்டிருந்த ரகசிய காமிராக்கள் குறித்து ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் அவர் புகார் அளித்தார். காவல்துறையினர் விரைந்து வந்து அனைத்து ரகசிய காமிராக்களையும் கைப்பற்றி ஆய்வு செய்தனர்.
அந்த காமிராக்கள் அனைத்தும் சப்தம் கேட்டால் தானாக இயங்கும் தன்மை கொண்ட, வாய்ஸ் மூலம் இயங்கும் வயர்லெஸ் காமிராக்கள் என்றும், ஒவ்வொரு காமிராவிலும் 20 திரைப்படங்களை சேமித்து வைக்கும் திறன் கொண்ட மெமரிகார்டு பொருத்தப்பட்டிருப்பதும் தெரியவந்தது.
இதையடுத்து அந்த விடுதியின் உரிமையாளரான, சிட்லப்பாக்கத்தை சேர்ந்த சஞ்சய்யை பிடித்து விசாரித்த போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளிச்சத்துக்கு வந்தன. கேரளாவை பூர்வீகமாகக் கொண்ட சஞ்சய் பொறியாளருக்கு படித்திருந்தாலும், வீடுகளை வாடகைக்கு எடுத்து மேல்வாடகைக்கு விடும் தொழில் செய்து வந்தார்.
அந்தவகையில், சென்னை ஆதம்பாக்கத்தில் உள்ள வீட்டை, அண்ணா நகரைச் சேர்ந்த ஒருவரிடம் இருந்து வாடகைக்கு பெற்றுள்ளார் சஞ்சய். அந்த வீட்டின் ஒவ்வொரு அறையிலும் ரகசிய காமிராக்களை பொருத்திய சஞ்சய், 3 அறைகளை படம் எடுத்து இணையத்தில் பணிபுரியும் பெண்களுக்கு வாடகைக்கு விடப்படும் என்று விளம்பரப்படுத்தி உள்ளார்.
இதனை பார்த்து விட்டு கடந்த செப்டம்பர் மாதம் ஒரு பெண் வந்துள்ளார். அவரை தொடர்ந்து மேலும் 6 பெண்கள் அக்டோபர் மாதம் சேர்ந்துள்ளனர். அந்த வீட்டை பெண்கள் தங்கும் விடுதியாக மாற்றியுள்ளார். அவ்வப்போது பராமரிப்பு பணி மேற்கொள்வதாக கூறி, பெண்கள் 7 பேரும் விடுதியில் இல்லாத நேரத்தில் அந்த வீட்டிற்குள் செல்லும் சஞ்சய் அந்த ரகசிய காமிராக்களில் பதிவான காட்சிகளை எடுத்துக் கொள்வதோடு, அந்த காமிராக்களுக்கு சார்ஜ்ஜும் ஏற்றி வந்துள்ளார்.
இதனால் அந்த காமிராக்கள் தொடர்ந்து செயல்பாட்டில் இருந்துள்ளன. கைப்பற்றப்பட்ட காமிராக்கள் அனைத்தும் இருட்டிலும் படம் பிடிக்கும் சக்திவாய்ந்தவை என்று கூறப்படுகிறது. இவர் எத்தனை வீடியோக்கள் எடுத்தார், அதனை எங்கெங்கு வைத்துள்ளார் என்று விசாரிக்கும் காவல்துறையினர், அவரிடம் இருந்து லேப்டாப், ஸ்மார்ட்போன் மற்றும் ஸ்மார்ட் வாட்ச் ஆகியவற்றையும் பறிமுதல் செய்துள்ளனர்.
இந்த சம்பவம், வெளியூரில் இருந்து சென்னையில் தங்கி வேலைபார்க்கும் பெண்களிடம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் காவல்துறையினர் விசாரிக்கும் போது தப்பி ஓட முயன்றதால் வழுக்கி விழுந்த சஞ்சய்யின் கால் முறிந்து போனதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே ரகசிய காமிராவைத்து பெண்களை படம் பிடித்த வக்கிர புத்தி கொண்ட சஞ்சய் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அவனை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த நபர் ரியல் எஸ்டேட் மோசடி வழக்கில் ஏற்கனவே கைது செய்யப்பட்டவர்.
பெண்கள் தங்கும் விடுதிகளில் எங்கு வேண்டுமானாலும் கண்ணுக்கு எளிதில் புலப்படாத ரகசிய காமிராக்கள் பொருத்தப்பட வாய்ப்புள்ளது, வைஃபை மூலம் அவற்றை உலகின் எந்த மூலையில் இருந்தும் செல்போனில் இயக்க முடியும், படங்களையும் வீடியோக்களையும் டவுன்லோடு செய்ய முடியும் என்று அதிர வைக்கிறார்கள் காமிரா தொழில்நுட்ப வல்லுனர்கள்.
பெண்கள் தங்கும் விடுதி மட்டுமல்ல, ஜவுளிக்கடைகளிலும், பெண்கள் உடை மாற்றும் வசதி கொண்ட அனைத்து வெளி இடங்களிலும் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம் என்பதை சற்று அழுத்தமாகவே உணர்த்துகிறது இந்த சம்பவம்.
சென்னையில் பெண்கள் விடுதியில் ரகசிய கேமரா இருந்த விவகாரத்தை அடுத்து விடுதிகள் செயல் படுவதற்கு கடும் கட்டுபாடுகள் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த நிலையில் சென்னை விடுதி உரிமையாளர்கள் கூடி அவசர ஆலோசனையில் ஈடுபட்டனர். இது தொடர்பாக சென்னையில் உள்ள விடுதிகளில் தீயணைப்பு, வருவாய் துறை, மாநகராட்சி உள்ளிட்ட துறைகளின் அனுமதி பெற்று உரிய விதிகளை பின்பற்றி இருந்தால் மட்டுமே விடுதிகள் இயங்க முடியும் எனவும், அனைத்து விடுதி உரிமையாளர்களும் இந்த மாத இறுதிக்குள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டும் எனவும் சென்னை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். உரிய விதிகளை பின்பற்றாத விடுதி உரிமையாளர்கள் மீது கைது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சென்னை விடுதி உரிமையாளர்கள் சங்கத்தினர் சென்னை நந்தனத்தில் ஆலோசனை கூட்டம் நடத்தினர். வரும் 31 ஆம் தேதிக்குள் இடத்தின் பட்டா, கட்டிட வரைப்படம்,மற்றும் அறையின் அளவு குறித்து விவரங்களை சமர்பித்து சான்றிதழ்களை பெறவதில் கால தாமதம் ஏற்படுவதாகவும் அதற்கான கால அவகாசம் வழங்க வேண்டும் எனவும் விடுதி உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கால அவகாசம் நீட்டிக்கப்படவில்லை என்றால், சென்னையில் உள்ள 10,000க்கும் மேற்பட்ட விடுதிகள் வரும் 1-ஆம் தேதி முதல் மூட நேரிடும் எனவும் தெரிவித்தனர்.