காதல் தம்பதி ஆணவ படுகொலை விவகாரம்! : பிரேத பரிசோதனை செய்ய குடும்பத்தினர் சம்மதம்
தூத்துக்குடி அருகே காதல் தம்பதி ஆணவ படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில், சார் ஆட்சியர் நடத்திய பேச்சுவார்த்தையையடுத்து பிரேத பரிசோதனை செய்ய குடும்பத்தினர் சம்மதம் தெரிவித்தனர்.
குளத்தூர் பகுதியைச் சேர்ந்த சோலைராஜ் என்பவரும் அதே பகுதியைச் சேர்ந்த பேச்சியம்மாள் என்ற ஜோதியும் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு பெற்றோர் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்து, குளத்தூர் சமத்துவபுரம் பகுதியில் தனியாக வசித்துவந்தனர்.
இந்நிலையில், வீட்டிலிருந்த இருவரும் வெட்டி படுகொலை செய்யப்பட்டனர். இது தொடர்பாக பெண்ணின் தந்தை கைது செய்யப்பட்டார். இதனிடையே கொலையில் தொடர்புள்ள அனைவரையும் கைது செய்தால்தான் இறந்தவர்களின் உடல்களை பிரேத பரிசோதனை செய்ய அனுமதிப்போம் எனக்கூறி சோலைராஜின் குடும்பத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இதையெடுத்து, அவர்களிடம் சார் ஆட்சியர் சிம்ரான் ஜீத் சிங் கலோன் மற்றும் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து பிரேதப் பரிசோதனைக்கு சம்மதம் தெரிவித்தனர். அதேநேரம் கொலை செய்த அனைவரையும் கைது செய்தால்தான் உடல்களை வாங்குவோம் எனவும் அவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து, இறந்தவர்களின் உடல்கள் பிரேதப் பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரிக்கு எடுத்துச்செல்லப்பட்டன.