மதுரை அரசு மருத்துவமனையில், அமரர் அறை பகுதிகளில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில், மின்விசிறிகள் வழங்கிய எஸ்டிபிஐ கட்சியினர் !
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு தென்மாவட்டங்களில் இருந்து ஏராளமான பொதுமக்கள் சிகிச்சை பெறுவதற்காக தினந்தோறும் வந்து செல்கின்றனர். சுற்றுவட்டாரங்களில் இருந்து மேல்சிகிச்சைக்காக இந்த மருத்துவ மனைக்குத்தான் வந்து செல்கின்றனர். விபத்துக்களில் சிக்கியவர்களை பெரும்பாலும் இங்குதான் அவசர சிகிச்சைக்கு கொண்டு வருகிறார்கள். அவ்வாறு அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழப்புகளும் தினந்தோறும் நடைபெறுவதுண்டு.
தென் மாவட்டங்களில் உயரிய சிகிச்சை பெறுவதற்கு முக்கியமான மருத்துவமனையாக அரசு ராஜாஜி மருத்துவமனை திகழ்ந்து வருகிறது. சிகிச்சை பிரிவில் எவ்வாறு கூட்டம் இருக்கிறதோ அதேபோல், அமரர் அறை பகுதியிலும் எந்நேரமும் மக்கள் நடமாட்டம் அதிகமாக காணப்படும். பரபரப்பான அந்த பகுதியில் மருத்துவர்களும், காவல்துறையினரும் கோடைக்காலங்களில் வியர்த்து விருவிருத்து காணப்படுவதோடு, தங்கள் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் அமரர் அறை பகுதியில் பொதுமக்கள், மருத்துவர்கள், காவல்துறையினர் பயன்பெறும் வகையில், எஸ்டிபிஐ கட்சியினர், மருத்துவமனை டீன் தர்மராஜ் உள்ளிட்ட அதிகாரிகளை சந்தித்து, மின்விசிறிகள் வழங்கியுள்ளனர். இந்நிகழ்ச்சியில் முஜிபுர் ரஹ்மான், யாசின் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.