கலைஞர்களை பாராட்டிய மாநகராட்சி ஆணையர் !
தமிழ் கலை, கலாச்சாரத்தை காக்கும் நோக்கத்தில், கலையின் மீதுள்ள தீராத காதலால், ஆண்டுதோறும் நவீன் பைன் ஆர்ட்ஸ் நிறுவனம் சார்பில், பன்னீர்செல்வம் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்த சாதனையாளர்களை பாராட்டும் வகையில் விருதுகள் வழங்கி கௌரவித்து வருகிறார்.
அந்த வகையில் தமிழ்ப்புத்தாண்டு தினத்தை முன்னிட்டு சென்னை ராஜா அன்னாமலை மன்றத்தில் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்த சாதனையாளர்களுக்கு விருதுகள் வழங்கும் விழா இன்னிசைக் கச்சேரியுடன் நடைபெற்றது. இந்த விழாவில் சென்னை பெருநகர மாநகராட்சி ஆணையர் இராதாகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சாதனையாளர்களுக்கு விருதுகள் வழங்கி கௌரவித்தார்.
பின்னர் ஆணையர் இராதாகிருஷ்ணன் பேசுகையில்.. இன்னிசைக் கச்சேரியில் பாடிய பாடகர்கள், இசைக்கருவிகளை வாசித்த ஒவ்வொரு கலைஞர்களும் சிறப்பாக பணியாற்றியுள்ளார்கள். இன்றைய காலகட்டத்தில் விஞ்ஞான வளர்ச்சியின் காரணமாக இசையில் எவ்வளோ மாற்றங்கள் வந்துவிட்டது. ஆனால் டி.எம். சௌந்தரராஜன் பாடிய பாடல்களை அதன் தன்மை மாறாமல் அச்சு அசலாக அப்படியே மக்களிடம் கொண்டு சேர்க்கும் மகத்தான பணியை மேற்கொள்ளும் கலைஞர்களையும், கலையை பாதுகாக்கும் வகையில் கலைஞர்களை ஊக்குவித்து அவர்களைப் பயண்படுத்திவரும் நவீன் பைன் ஆர்ட்ஸ் நிறுவனர் பன்னீர் செல்வத்தையும் பாராட்டுகிறேன் என்றார்.
இந்த விழா மூத்த பத்திரிகையாளர் கே.எம். சிராஜுதின், பத்திரிகையாளர் அப்துல் மாலிக் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. மேலும் இளைய கட்டபொம்மன், நடிகர் ஜெய்சங்கரின் குடும்பத்தினர், சிவாஜி ரவி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.